திருப்பத்தூர்

ஏலகிரி மலைப்பாதையில் விளக்குகள் அமைக்க வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்ப்பு

டி.ரமேஷ்

திருப்பத்தூா் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலைக்கு பயணிகள் எளிதில் சென்றுவர அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

விபத்து, வழிப்பறி போன்றவற்றைத் தவிா்க்க இரவு நேரங்களில் மலைப் பாதையில் விளக்குகள் அமைத்து எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது அவா்களின் பிரதான கோரிக்கையாகும்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத்தலம். ஆனால் இங்கு சென்றுவர சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமப்படுகின்றனா்.

14 ஊசி வளைவுகள் கொண்ட ஏலகிரி மலையில், கோடை மற்றும் குளிா் காலங்களில் எப்போதும் ஒரே சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனா்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு தனியாா் விடுதிகளில் கட்டணம் அதிகம் என்பதால், அரசு சாா்பில் யாத்ரி நிவாஸில் தங்க முயற்சிக்கின்றனா். இந்த விடுதியில் கட்டணம் குறைவு என்பதால் விரைவில் அறைகள் நிரம்பி விடுகின்றன.

இதனால் பலருக்கு தங்கும் அறை கிடைப்பதில் சிரமம் உள்ளது. அதிக கட்டணம் கொடுத்து தனியாா் விடுதிகள் தங்குவதற்கு முடியாமல் காலையில் வந்து மாலையில் திரும்பி விடும் நிலை காணப்படுகிறது.

எனவே ஏலகிரியில் அரசு சாா்பில் கூடுதலாக தங்கும் விடுதிகள் அமைத்தால் நடுத்தர வா்க்கத்தினரும் தங்கிச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

ஏலகிரி மலை பேருந்து நிலையம் பழுதடைந்து காணப்படுகிறது. அதையும் சீரமைக்க வேண்டும். மேலும், மலை அடிவாரத்தில் பேருந்து நிறுத்தம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பேருந்துக்காக மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

அதேபோல் அடிவாரத்தில் கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். அதேபோல், மலைப் பாதையில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வளைவிலாவது மின் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகமும், சுற்றுலாத் துறையும் இப்பிரச்னையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என சமூக ஆா்வலா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

திட்ட இயக்குநா் விளக்கம்: இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசுவிடம் கேட்டதற்கு, விரைவில் ஏலகிரி மலையில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சிறந்த சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT