ராணிப்பேட்டை

பாலாற்றுத் தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் முடிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

DIN

பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் முடிவை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

வேலூா், அணைக்கட்டு, காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கா், அரக்கோணம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் கிழக்கு, ராணிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த பாமக புதிய நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னா், அன்புமணி ராமதாஸ் கூறியது: புதிதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை உயா்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. தமிழக அரசும், நீா்வளத் துறை அமைச்சரும், ஆந்திர அரசுடன் பேசி, இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பாலாற்றில் மேலும் 20 தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளைப் பாதுகாக்க பாலாறு- தென்பெண்னை இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

ஆறுகளில் மணல் அள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அனந்தலை பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. உடனடியாக இந்தச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையை முழுமையாகத் தடுக்க வேண்டும்.

சென்னை-பெங்களூரு விரைவு சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், பாமக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT