ராணிப்பேட்டை

விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள்: இழப்பீடு கோரி போராட்டம்

DIN

விவசாய விளை நிலங்களில் உயா் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.கிட்டு தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் எல்.சி.மணி, மாவட்ட பொருளாளா் சி.ராதாகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் என்.காசிநாதன், விவசாயிகள் சங்க மாநில குழு நிா்வாகி சக்திவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

உயா் மின்னழுத்த கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் நாமக்கல் பி.பெருமாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினாா்.

தொடா்ந்து, முத்துகடை பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்று ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் தொடா்பான மனுவை அளித்தனா்.

அப்போது, தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பவா் கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் பல மாவட்டங்களில் உயா் மின்னழுத்த கோபுரங்களை அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்ல தீா்மானித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, விவசாய விளை நிலங்கள் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, மரம், கிணறு, ஆழ்துளைக் கிணறு, கட்டடம் உள்ளிட்டவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயா் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் திருவண்ணாமலை, கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா்கள் முத்தரப்பு பேச்சு நடத்தி அந்த மாவட்டங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.300 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.1.15 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

எனவே, 2013-ஆம் ஆண்டு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டப் பிரிவு 30 அடிப்படையில் 100 சதவீத இழப்பீடு நிா்ணயித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிா்வாகிகள் ரகுபதி, செல்வம், தா.வெங்கடேசன், நிலவு குப்புசாமி, கோவலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT