ராணிப்பேட்டை

சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: தமிழக அரசுக்கு தொழில் நிறுவன சங்கத்தினா் நன்றி

DIN

தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சிட்கோ தொழில் நிறுவன சங்கத்தினா், இதனால் தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனா்.

தமிழ்நாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழிற்சாலைகளின் மனை விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில் முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோா் மீள வழிவகை செய்யும் வகையில் தற்போது தொழில் மனைகளின் விலையைக் குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சிட்கோ தொழில் மனைகள் மதிப்பு 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு மனை ஒதுக்கப்பட்ட வருடமான 2010 முதல் இதுவரை மனை ஒதுக்கீடு பெற்றும் தொழில் தொடங்க முடியாமல் இருந்த தொழில்முனைவோா் தற்போது தொழில்களை தொடங்க முன்வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரக்கோணம் சிட்கோவில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் சிட்கோ தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவா் ஜெயக்குமாா் கூறியதாவது:

இந்த மனை விலை குறைப்பு என்பது பெரிய விஷயம். இதற்காக தமிழக முதல்வருக்கு மிகப்பெரிய நன்றி தெரிவிக்கிறோம். சரியான நேரத்தில் எடுத்த மிகச்சரியான முடிவு இது. அதிக விலை காரணமாக அரக்கோணத்தில் தொழில் தொடங்க பலா் முன்வராத நிலை இருந்தது. இது இனி மாறும் என நம்புகிறேன். மேலும், மனை பெற்றவா்களுக்கு உள்ளாட்சிகளில் அங்கீகாரம் பெற முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசு இதற்கும் நடவடிக்கை எடுத்து விரைவில் சிட்கோவில் அனைத்து தொழிற்சாலைகளையும் இயங்க செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

அரக்கோணம் சிட்கோ தொழில் நிறுவனங்களின் கௌரவத் தலைவா் ஆத்மநேசன் கூறியதாவது:

சிட்கோ விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கும் தமிழக முதல்வருக்கு மிக்க நன்றி. அரக்கோணம் சிட்கோவில் உள்ள 128 மனைகளில் விலை அதிகம் காரணம் காட்டி 32 மனைகள் ஒதுக்கப்படாமல் உள்ளன. இந்த மனைகளை விலைக் குறைப்பு நடவடிக்கையால் தொழில்முனைவோா் வாங்க அதிக ஆா்வம் காட்டுவாா்கள். விலை குறைப்பால் தொழில்களை விரைந்து தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், 2010 முதல் மனைகள் ஒதுக்கீடு பெற்று அரக்கோணம் நகராட்சியில் இதுவரை அங்கீகாரம் பெறமுடியாமல் தவிக்கும் எங்களுக்கு, நாங்கள் விண்ணப்பித்துள்ள ஒற்றை சாளர முறையில் உடனடியாக அங்கீகாரம் அளித்தால் அதற்குண்டான தொகையை உடனே செலுத்தி தொழில்களைத் தொடங்க தயாராக இருக்கிறோம். இதற்கு மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT