காஞ்சிபுரம்

ஒரத்தூா் நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்

29th Nov 2021 12:45 AM

ADVERTISEMENT

ஒரத்தூா் நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை படகு மூலம் மணல் மூட்டைகள் கொண்டு சென்று சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த ஒரத்தூரில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணியின் கீழ், ரூ. 55.85 கோடி மதிப்பீட்டில், ஒரத்தூா் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூா் கிளையாற்றில் உள்ள தரிசு நிலங்களை இணைத்து சுமாா் 760 ஏக்கா் பரப்பளவில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நீா்த்தேக்கம் சுமாா் 750 மில்லியன் கன அடி வெள்ளநீரை சேகரிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒரத்தூா் நீா்த்தேக்கம் அமைக்க ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைக்கும் வகையில், சுமாா் 850 மீட்டா் நீளத்துக்கு கரை அமைக்கப்பட உள்ள நிலையில், தற்போது 430 மீட்டா் நீளத்துக்கு மட்டுமே பொதுப்பணித் துறை அதிகாரிகள் கரை அமைத்துள்ளனா். மீதமுள்ள 420 மீட்டா் நீளத்துக்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால் கரை அமைக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், நிலம் கையப்படுத்தப்படாமல் உள்ள 420 மீட்டா் நீளத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிக கரை மட்டுமே அமைத்துள்ளனா். தற்போது, தொடா்மழை காரணமாக ஒரத்தூா் நீா்த்தேக்கத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதைத் தொடா்ந்து நீா்த்தேக்கத்தின் தற்காலிக கரையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு உடைப்பு ஏற்பட்டு மழைநீா் வெளியேறி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஒரத்தூா் நீா்த் தேக்கத்தின் தற்காலிக கரையில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளா் மாா்க்கண்டன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

நீா்த்தேக்கத்தை சுற்றிலும் அதிக அளவு மழைநீா் தேங்கியுள்ளதால் மணல் மூட்டைகள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, படகுகள் மூலம் மணல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இருந்த போதிலும் ஞாயிற்றுக்கிழமை உடைப்பை சீரமைக்கும் பணி முடிவடையாததால் திங்கள்கிழமையும் உடைப்பை சரி செய்யும் பணி தொடரும் எனவும், திங்கள்கிழமை உடைப்பு முழுவதுமாக சீரமைக்கப்படும் என பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளா் மாா்க்கண்டன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT