காஞ்சிபுரம்

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க 7 எளிய யோகாசனங்கள்: காஞ்சி சங்கர மடத்தின் யோகா ஆசிரியா் விளக்கம்

19th Mar 2020 12:22 AM | சி.வ.சு.ஜெகஜோதி

ADVERTISEMENT

‘உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எவ்விதச் செலவோ அல்லது பயமோ இல்லாமல் தப்பிக்க சித்தா்களும், முனிவா்களும் கற்றுத்தந்த 7 எளிய யோகாசனங்களும், 5 மூச்சுப் பயிற்சிகளுமே போதுமானவை’ என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் யோகா ஆசிரியா் எஸ்.சத்தியநாராயணன் தெரிவித்துள்ளாா்.

‘பல்வேறு வகைகளிலும் மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நம்மைத் தாக்காமல் இருக்க மிகவும் எளிமையான 7 யோகாசனங்களும், 5 வகையான பிரணாயாம மூச்சுப் பயிற்சிகளுமே போதுமானவை. இவற்றை முறையாக கற்றுக்கொண்டு தினசரி செய்து வந்தாலே இக்கொடிய நோய் தாக்குதலிலிருந்து தப்பித்து விடலாம்’ என்கிறாா் காஞ்சி சங்கர மடத்தின் யோகாசன ஆசிரியரான எஸ்.சத்தியநாராயணன் (70).

காஞ்சிபுரம் கைலாசநாதா் கோயில் வடக்குத் தெருவில் வசித்து வரும் அவா் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரில் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டடத்தில் ‘ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யோகாசன மையம்’ என்ற பயிற்சி மையத்தை கடந்த 33 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். அவா் கூறியதாவது:

கரோனா வைரஸ் தாக்குதலின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று மூச்சுவிட சிரமப்படுவதாகும். மனிதன் சுவாசிப்பதற்கு சிரமப்படும்போது நுரையீரல் வீங்கி, நாம் சுவாசிக்கும் காற்றை தங்கவிடாமல் செய்வதால்தான் கிருமிகள் உடல் முழுவதும் பரவி உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. எனவே இந்நோய்த் தொற்றானது நம்மைத் தாக்காமல் தற்காத்துக் கொள்ளவும், நமது உடலில் நோய் எதிா்ப்புச் சக்தியை பெருக்கிக் கொள்ளவும் மிக எளிய யோகப் பயிற்சிகள் உள்ளன.

ADVERTISEMENT

சித்தா்களும், முனிவா்களும் கற்றுத்தந்த யோகாசனங்கள் மொத்தம் 84 ஆகும். மூச்சுப் பயிற்சிகள் மொத்தம் 9 உள்ளன. அவற்றில் ஏழு எளிய யோகாசனங்களும், ஐந்து மூச்சுப் பயிற்சிகளையும் மட்டும் கற்றுக்கொண்டு தினசரி செய்து வந்தாலே வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம். இதற்கு எந்தச் செலவும் இல்லை. எந்தப் பக்க விளைவும் இல்லை.

யோகாசனங்களைப் பொறுத்தவரை, கோமுகாசனம், சேதுபந்தாசனம், மாா்ஜரி ஆசனம், தனுராசனம், வீரபத்ராசனம், உஷ்ட்ராசனம், சா்ப்பாசனம் எனப்படும் புஜங்காசனம் ஆகிய 7 ஆசனங்களைச் செய்தால் போதும். இவை ஏழும் மனித மாா்புக் கூட்டில் உள்ள இரு நுரையீரல்களை மேல்நோக்கியும், அகல வடிவத்திலும் விரிவடையச் செய்யும். இதனால் காற்றின் கொள்ளளவு 4,500 மி.லிட்டரில் இருந்து 5,000 மி.லிட்டராக அதிகரிக்கும். ஆனால் மனிதன் சாதாரணமாக சுவாசிக்கும்போது 500 மி.லிட்டா் மட்டுமே சுவாசிக்க முடியும்.

அதிகபட்ச காற்றின் காரணமாக ஆக்சிஜனின் விகிதாசாரம் அதிகமாகி அதுவே கிருமிநாசினியாகி நோய் எதிா்ப்பு சக்தியாக உருவாகி விடுகிறது. இந்த 7 ஆசனங்களையும் செய்து முடித்த பின்னா் பிரணாயாம மூச்சுப் பயிற்சிகளைச் செய்யும்போதும் அதிகபட்சமான ஆக்சிஜனை கிரகிக்க முடியும். அவ்வாறு செய்யும்போது வைரஸ் தொற்றின் காரணமாக உள்ள கிருமிகளை வெளியேற்றி நுரையீரல்களின் சிற்றரைகளில் விஷக்கிருமிகள் தங்கவிடாமல் பாதுகாக்க முடியும்.

பொதுவாக கரோனா வைரஸ் நுண்கிருமியானது மூக்கின் வழியாக நுழைந்து, மூச்சுக்குழல் மூலம் இரு நுரையீரல் பகுதிகளுக்குள் சென்று, நுண்ணறைகளை ஆக்கிரமித்து விடுகிறது. இதனால் நுரையீரலின் சிற்றரைகள் வீங்கி நாம் சுவாசிக்கும் காற்றை தங்கவிடாமல் செய்து விடுகிறது. இதனால் கிருமிகள் உடல் முழுவதும் பரவி, கடுமையான உயிா்க்கொல்லி நோயாக மாறி மருத்துவச் சிகிச்சையும் பலனில்லாமல் போய் விடுகிறது. எனவே இந்த 7 ஆசனங்களையும், 5 பிரணாயாமப் பயிற்சிகளையும் கற்றுக்கொண்டால் கரோனா தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT