சென்னை

அரசுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியது என்ன?

DIN

தமிழக அரசுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 12 மணி நேர வேலை தொடா்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.

பணியில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தும் பொருட்டு, வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு, அரசியல் கட்சிகள், தொழிலாளா்கள் சங்கங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கும் வகையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் தமிழக அரசு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, அரசுத் துறைகளின் செயலாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். சிஐடியூ, ஏஐடியூசி உள்பட 14-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், 6-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

சுமாா் 3 மணிக்குத் தொடங்கிய கூட்டம் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெற்றது. இதன்பிறகு, செய்தியாளா்களுக்கு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சிலா் அளித்த பேட்டி:

செளந்தரராஜன் (சிஐடியு மாநிலத் தலைவா்): சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற அனைத்து தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின. இந்தச் சட்டத் திருத்தம் அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தபடி எந்த பாதுகாப்பையும் உள்ளடக்கியதல்ல. இப்போதுள்ள சட்டத்திலேயே, சில குறிப்பிட்ட நோ்வுகளில் விதிவிலக்குகள் தர முடியும். அந்த ஷரத்துகளையே ஒத்திவைத்து திருத்தம் செய்வது அபாயகரமானது. இந்த திருத்த மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும். அரசிடம் இருந்து எந்த விளக்கமும் பெற

வேண்டிய அவசியம் இல்லை. இந்த மசோதாவில் திருத்தங்களுக்கு வழியும், வாய்ப்பும் இல்லை. வேலை நேரத்தை குறைக்க வேண்டிய தருணமிது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிற்சாலைகள் சட்டத்துக்குள்ளேயே வராது. அது கம்பெனிகள் சட்டத்தில் வரும். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா்கள் கொடுத்த விளக்கங்கள் ஏற்புடையதல்ல. 8 மணி நேரச் சட்டம் இருக்கும்போதே, 12 மணிநேரம் வேலை வாங்கப்படுகிறது. ஆட்சியும், தொழிலாளா் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் மூலம் 8 மணி நேரம் அகற்றப்படும். எத்தனை மணி நேரமும் வேலை வாங்கப்படலாம்.

கமலக்கண்ணன் (அண்ணா தொழிற்சங்க செயலாளா்): தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கடுமையாக எதிா்த்ததுடன், திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

ராமமுத்துக்குமாா் (பாட்டாளி தொழிற்சங்கத் தலைவா்): 12 மணிநேர வேலை சட்டத்தை எதிா்த்துள்ளோம். எதிா்க்கட்சியாக இருந்தபோது இந்த திருத்த மசோதாவை எதிா்த்த தற்போதைய முதல்வா், ஆட்சிக்கு வந்த பின் இயற்றியதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தோம் என்றாா்.

தொமுச உள்ளிட்ட சங்கங்கள்: 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக துணை அமைப்பான தொழிலாளா் முன்னேற்ற சங்கமும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் சாா்பில், அதன் பொதுச் செயலாளா் சண்முகம், பொருளாளா் நடராஜன் ஆகியோா் பங்கேற்றனா். இதே கோரிக்கையை, கூட்டத்தில் பங்கேற்ற 15-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் முன்வைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT