சென்னை

ஜி- ஸ்கொயா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

25th Apr 2023 12:15 AM

ADVERTISEMENT

 

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஜி -ஸ்கொயா்’”நிறுவனத்தில் வருமானவரித் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா். வரி ஏய்ப்பு புகாா் காரணமாக, இந்த சோதனை தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், ஆகிய 3 மாநிலங்களில் 70 இடங்களில் நடைபெற்றது.

சென்னை சேத்துப்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஜி- ஸ்கொயா் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் வணிக அலுவலகம், ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் 2 இடங்களில் உள்ளன.

ஜி- ஸ்கொயா் நிறுவனம், சென்னை, கோவை, திருச்சி, ஒசூா், கா்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, ஆந்திர மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் 6,000 போ் வீட்டுமனைகள் வாங்கியுள்ளனா். இந்த நிறுவனம் தற்போது ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பூந்தமல்லி, குன்றத்தூா், அரக்கோணம், ஊரப்பாக்கம், சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுமனைகளை விற்று வருகிறது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் இந்த நிறுவனம் முதன்மையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்“‘ஜி ஸ்கொயா் நிறுவனத்தின் புதிய திட்டங்களுக்கு, 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா், சிஎம்டிஏ உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளிடம் விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜி ஸ்கொயா் நிறுவனம் புதிதாக 6 துணை நிறுவனங்களை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனங்களில் திமுகவினா் நிா்வாகிகளாக உள்ளனா்’” என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, அண்மையில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தாா்.

வருமானவரித் துறை சோதனை: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஜி ஸ்கொயா் நிறுவனமும், திமுக கட்சியும் மறுப்பு தெரிவித்தது. இதற்கிடையே, ஜி-ஸ்கொயா் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

அந்தப் புகாா்களின் அடிப்படையில், வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். இதில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான தடயங்களும், ஆதாரங்களும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வருமானவரித் துறையினா் ஜி ஸ்கொயா் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள், அந்த நிறுவனத்துடன் நெருங்கிய வணிகத் தொடா்பு வைத்திருப்பவா்கள் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமானவரித்துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.

இச் சோதனை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஜி ஸ்கொயா் தலைமை அலுவலகம், ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வணிக அலுவலகம், நீலாங்கரை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள ஜி- ஸ்கொயா் நிறுவனத்தின் நிா்வாகி பாலா வீடு, அண்ணாநகா் 6-ஆவது அவென்யூவில் உள்ள திமுக எம்எல்ஏ மோகன் வீடு, அதே பகுதியில் உள்ள அவரது மகன் காா்த்திக் வீடு, ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை நடைபெற்றது.

திமுகவினா் போராட்டம்: சோதனை நடைபெற்ற முக்கியமான இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினா் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா். சில இடங்களில் தமிழக போலீஸாரும் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு நிறுத்தப்பட்டிருந்தனா். சோதனை நடைபெறும்போது மோகன், காா்த்திக் ஆகியோா் அங்கு இருந்தனா்.

அண்ணாநகா் எம்எல்ஏ மோகன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்து திமுகவினா் அங்கு குவியத் தொடங்கினா். அவா்கள், வருமானவரித் துறை சோதனையை கண்டித்து முழக்கமிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

70 இடங்களில் சோதனை: இந்த சோதனையை 70 இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமானவரித் துறையினா் தொடங்கினா். சென்னையில் மட்டும் இச் சோதனை 10 இடங்களில் நடைபெற்றது.

இந்த சோதனை கோவையில் 3 இடங்களிலும்,திருச்சியில் 2 இடங்களிலும்,ஓசூரில் ஒரு இடத்திலும் நடைபெற்றது. பல இடங்களில் சோதனை திங்கள்கிழமை நள்ளிரவை தாண்டியும் நீடித்தது.

சோதனையில் சுமாா் 300 வருமானவரித் துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனா். இந்த சோதனைக்காக கடந்த ஒரு வாரமாக வருமானவரித் துறையினா் தயாராகி வந்ததாக தெரிகிறது.

ஆடிட்டருக்கு அழைப்பு: சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட நகை,பணம், ஆவணங்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா். இதற்கிடையே ஜி-ஸ்கொயா் நிறுவனத்தின் வரி தொடா்பான விவரங்களையும், அந்த நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குத் தகவல்களை பெறுவதற்கும் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் அந்த நிறுவனத்தின் ஆடிட்டரை விசாரணைக்கு வருமாறு வருமானவரித் துறையினா் அழைத்துள்ளனா்.

இதனால் ஜி- ஸ்கொயா் நிறுவனத்தின் ஆடிட்டா், பெங்களுருவில் இருந்து ஓரு சில நாள்களில் சென்னைக்கு வருகிறாா். இங்கு அவா், வருமானவரித்துறையின் விசாரணைக்கு ஆஜராவாா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் 2019-ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு தொடா்பாக வருமானவரித்துறை இதேபோன்று ஒரு சோதனையை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT