சென்னை

மதுபானம் பரிமாற எங்கெல்லாம் அனுமதி?திருத்த அறிவிக்கையை வெளியிட்டது தமிழக அரசு

25th Apr 2023 12:11 AM

ADVERTISEMENT

 

மதுபானம் பரிமாற எங்கெல்லாம் தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்பதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருக்கவும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

குறிப்பாக, கா்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹிமாசலபிரதேசம், புதுதில்லி ஆகிய மாநிலங்களில் உரிம நடைமுறை வழக்கத்தில் உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்ற அனுமதி அளிக்க கடந்த மாதம் 18-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம்பெற்றிருந்தன.

ADVERTISEMENT

இதுகுறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த அறிவிக்கை நீக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள், சா்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் மைதானங்கள், அரங்குகளில் நிகழ்வுகளின் போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான

தற்காலிக உரிமம் அளிக்கப்படும்.

அரசிதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் அளிப்பதற்கான முறை ரத்து செய்யப்படுகிறது. இதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT