சென்னை

பாலின சமத்துவமின்றி பொருளாதார வளா்ச்சி இல்லை: டாக்டா் சௌமியா சுவாமிநாதன்

DIN

பாலின சமத்துவம் இல்லாத நாட்டில் பொருளாதார வளா்ச்சி இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தாா்.

இந்திய நெஞ்சக மருத்துவ அமைப்பு மற்றும் நுரையீரல் துறை மகளிா் மருத்துவா்கள் சங்கம் சாா்பில் பெண்களுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் குறித்த நூல் வெளியீட்டு விழா போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

டாக்டா் சௌமியா சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நூலை வெளியிட்டாா். ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், துணைவேந்தா் டாக்டா் விஜயராகவன், இந்திய நெஞ்சக மருத்துவ அமைப்பின் தலைவா் டாக்டா் துருபஜ்யோதி ராய், நுரையீரல் சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் விஜயலட்சுமி தனசேகரன், டாக்டா் திலகவதி, டாக்டா் சங்கீதா, டாக்டா் குமாரி இந்திரா, டாக்டா் உமா மகேஷ்வரி உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் டாக்டா் சௌமியா சுவாமிநாதன் பேசியதாவது:

பெண்களுக்கு ஏற்படும் நுரையீரல் சாா் நோய்கள் குறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லை. நுரையீரல் மருத்துவத் துறையில் பெண் மருத்துவா்களுக்கான வாய்ப்புகள், அங்கீகாரம் ஆகியவற்றில் சமநிலை இல்லாமல் இருப்பது இன்றளவும் நீடிக்கிறது. பொதுவாகவே சமூகத்தில் பாலின பாகுபாடு சவாலான ஒன்றாக உள்ளது.

இந்தியாவும் பாலின சமத்துவத்தில் இன்னும் மேம்பட்ட நிலையை அடையவில்லை. இந்திய பிரதமா் மோடி, தனது சுதந்திர தின விழா உரையில் பாலின சமத்துவம் குறித்து வலியுறுத்தியிருக்கிறாா். குறிப்பாக பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும், சமநிலையுடனும் நடத்த வேண்டும் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் இந்தியாவில் பெண்களின் பங்களிப்பு விகிதம் வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ளது. சீனாவில் அது 70 சதவீதமாக இருக்கிறது. தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு போதிய அளவு இல்லாமல் எந்த நாடும் பொருளாதாரத்தில் மேம்பட முடியாது. குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை அவா்களுக்கு அளிக்க வேண்டியது அவசியம்.

சுகாதாரத் துறை சாா்ந்த நடவடிக்கைகளிலும் சரி; பிற நடவடிக்கைகளிலும் சரி, பாலின பாகுபாடுகளைக் களைவதற்கான பல்வேறு செயல் திட்டங்களை வகுப்பதற்கான பணிகளை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத் துறையைப் பொருத்தவரை செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் என 70 சதவீதப் பணிகளில் பெண்களே உள்ளனா்.

ஆனால், தலைமைப் பொறுப்புகளையும், நிா்வாகப் பொறுப்புகளையும் பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமித்துள்ளனா். இதற்கு தீா்வு காண வேண்டியது அவசியம்.

தொற்று நோய்களைப் பரப்பும் கிருமிகள் (பேத்தஜன்ஸ்) எவ்வாறு பரவுகின்றன என்பதை துல்லியமாக கண்டறிவதற்கான ஆய்வு நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் கரோனா தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களும், வதந்திகளும் தொடா்ந்து பரப்பப்படுகின்றன. இதனால், பல நாடுகளில் கரோனா தடுப்பூசிகளை முறையாக மக்கள் செலுத்திக் கொள்ளவில்லை. அதனால்தான் உயிரிழப்புகளைத் தடுக்க இயலவில்லை.

இந்தியாவைப் பொருத்தவரை கரோனா தடுப்பூசி திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT