சென்னை

சென்னையில் கரோனாவை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்

DIN

சென்னை:  சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கரோனா உதவி மையத்தை ஆணையர் ககன் தீப் சிங் பேடி புதன்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
 சென்னையில் மொத்தம் 59 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதுவரை இவர்கள் யாருக்கெல்லாம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மாநகராட்சிக்கு அளிக்காமலிருந்தனர்.  ஆனால் இனிமேல் பேரிடர் சட்டத்தின் கீழ் யாருக்கு கரோனா  என்பதை அவர்கள் முதலில் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் முறையாகப் பரிசோதனை செய்து, அவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தல் போதுமா அல்லது மருத்துவ சிகிச்சை தேவையா என்பதைத் தீர்மானிக்க முடியும். 
 அதேபோன்று  ஒருவர் கரோனா பரிசோதனை செய்தால், அவருக்கு முடிவுகள் கிடைக்க இரண்டு நாள்கள் வரை ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வெளியே செல்கின்றனர். இதன் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம். கரோனா பரிசோதனை மையங்களுக்கு வரும் நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலே, அவர்களுக்கு மருந்துகளை உள்ளடக்கிய "கரோனா கிட்' வழங்கப்படுகிறது. 
60 வயதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சோதனை முடிவுகள் வரும் வரை காத்திருந்து, அதன் பின்னர் அவருக்குத் தேவையான மருந்துகளை வழங்கி, சிகிச்சையை ஆரம்பிப்பதற்குள், அவருக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துவிடும். இதனால் சோதனை செய்த அன்றே "கரோனா கிட்' வழங்க முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு "கரோனா நெகட்டிவ்' முடிவுகள் வந்தாலும், இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. 
மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களை நேரடியாக வீடுகளுக்குச் சென்று சிகிச்சைகள் அளிக்க உள்ளோம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தான் மாநிலத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் பொது முடக்கம் போன்று  இல்லாமல் பொதுமக்கள் இயல்பாக வெளியே நடமாடுகின்றனர். வைரசின் தீவிரத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பொது முடக்கம் வெற்றி பெறும். அன்புடன் கேட்கிறோம், அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் இடவசதி இல்லாமல் இருந்தால் நகரில் உள்ள கரோனா கண்காணிப்பு மையங்களுக்கு வந்து தங்கலாம். அனைத்து கண்காணிப்பு மையங்களிலும் உணவு, படுக்கை வசதிகள் தயார்நிலையில் உள்ளன  என்றார் அவர். 
 தொடர்ந்து, திருவிக நகர் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் கரோனா சிறப்பு காய்ச்சல் முகாம்களில் தொற்று பாதித்தோருக்கு வழங்கப்படும் மருந்து பெட்டகங்களை அவர் பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT