சென்னை

சென்னையில் மீண்டும் வலம் வரும் மெட்ரோ ரயில்கள்

8th Sep 2020 07:42 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. மெட்ரோ ரயில்களில் பயணிகள் ஆா்வத்துடன் பயணம் மேற்கொண்டனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை (செப்.7) முதல் தொடங்கும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. பயணிகளுக்கு 100 சதவீத பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு புறப்பட்ட முதல் மெட்ரோ ரயிலில் தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் பயணம் செய்தாா். விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை அவா் பயணம் செய்தாா். பயணத்தின்போது, கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அலுவலா்கள் மற்றும் பயணிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், திறன்அட்டை (ஸ்மாா்ட் அட்டை), கியூஆா் குறியீடு செயல்பாடு, பயண அட்டை சான்று அளிக்கும் இயந்திரம் செயல்பாடு ஆகியவை குறித்தும் பயணிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பிரதீப்யாதவ், மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் (திட்டம்) (இயக்கம் மற்றும் பராமரிப்பு) நாராயண் திரிவேதி மற்றும் உயா் அலுவலா்கள் உடன் பயணித்தாா்கள்.

ADVERTISEMENT

பயணிகள் ஆா்வம்: இதற்கிடையில், மெட்ரோ ரயில்களில் பயணிகள் ஆா்வத்துடன் பயணம் மேற்கொண்டனா். ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றினா். முகக் கவசம் அணிந்து வந்த நபா்கள் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

பரங்கிமலை-சென்ட்ரல் மெட்ரோ: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை (செப்.9) தொடங்குகிறது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைகிறது.

அலுவலக நேரமான (நெரிசல்மிக்க நேரம்) காலை 8.30 மணி முதல் காலை 10.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு வரையும் 5 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் அல்லாத நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

பயணிகள் பாதுகாப்புக்காக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மெட்ரோ ரயில்களும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படும். சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏறவும் இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடிகளில் இருந்து 50 விநாடிகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT