சென்னை

மாமல்லபுரத்தை அழகுபடுத்த நிதி ஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

DIN

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடு குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மத்திய மாநில அரசுகளின் துறை செயலாளர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அனுப்பிய கடிதத்தில், பல்லவர் கால கடற்கரை நகரம் மாமல்லபுரம். தமிழர்களின் தொன்மை, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் மாமல்லபுரமும் ஒன்றாகும்.  மாமல்லபுரத்தை யுனெஸ்கோ கலாசார சின்னமாக அங்கிகரித்துள்ளது.  எனவே மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். 

கடற்கரை கோயில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் கலாசாரங்களை சிதைக்கும்  வகையிலான கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. குப்பைகளை கொட்டினால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆங்கிலப் புலமை பெற்ற சுற்றுலா வழிகாட்டி குழுக்களை அமைக்க வேண்டும்.  அந்த பகுதியில் உள்ள புரதான சின்னங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், முக்கிய இடங்களை மின்னொளியில் காட்சிப்படுத்தவும் வேண்டும் என கோரியிருந்தார்.  

இந்த வழக்கு தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாமல்லபுரம் பாதுகாப்பு, பராமரிப்பு, அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்க  மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் பகுதியிலிருந்து வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அந்த பகுதியை மேம்படுத்த என்ன ஏற்பாடுகள் செய்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசுத் தரப்பில் , நாடு முழுவதும் உள்ள 16 சுற்றுலாத் தலங்களில்  14-ஆவது இடத்தில் மாமல்லபுரம் இடம்பெற்றுள்ளது. அதன் மேம்பாடு தொடர்பாக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 400 பக்க அறிக்கை தயாராக உள்ளது. கரோனா பேரிடர் காலமாக இருப்பதால் நிதி ஒதுக்குவது குறித்து தகவல் எதுவும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது மாநில அரசு தரப்பில், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டுக்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாமல்லபுரம் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதற்கு கரொனா பேரிடரை காரணமாக கூற முடியாது.

நிதி ஒதுக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க இறுதி அவகாசம் வழங்குவதாக கூறி, 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். முடிவெடுக்க தவறும்பட்சத்தில், மத்திய, மாநில அரசுத் துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை வரும் நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT