சென்னை

மருத்துவர்களுக்கு நன்றி: அதிரவைத்த கைதட்டல்கள்

23rd Mar 2020 02:51 AM

ADVERTISEMENT


சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படியே நாட்டு மக்கள் தங்கள் கைகளை 5 நிமிடம் தட்டி மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய  சேவை பணியாளர்களுக்குப் பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

சுய ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நாடு முழுவதும்  பொது மக்கள் தங்கள் இல்லங்களின் முன்புறம், ஜன்னலோரம், பால்கனி ஆகிய இடங்களில் இருந்தபடியே கைகளைத் தட்டியும் ஓசைகளை எழுப்பியும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

 கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக  மருத்துவர்கள்,  செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர்  கால, நேரம் பார்க்காமல் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். 
அவர்களின் இந்த சேவையைப் பாராட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு இருக்கும் இடத்தில் எழுந்து நின்று கை தட்டியோ, மணியோசை அடித்தோ ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டிருந்தார். 
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டு மக்கள் தங்கள் கைகளை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் பலர், இசை வாத்தியங்களை இசைத்தனர். மணிகளை அடித்து மகிழ்ச்சிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.  
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஒரே நேரத்தில் கைகளை தட்டி ஓசை எழுப்பி அதிர வைத்தனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என வயது வித்தியாசம் இன்றி மருத்துவர்களுக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு அவர்கள் தங்களது நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT