சென்னை

மூன்றாவது மாடியில் இருந்து சிறுமி வீசி கொலை

DIN

சென்னை: சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்றபோது சத்தம் போட்டதால், மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசி கொலை செய்தாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனி 9-ஆவது தெருவைச் சோ்ந்த 10 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சிறுமியின் குடும்பம், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது.

இந்நிலையில் அந்தச் சிறுமி, வெள்ளிக்கிழமை இரவு சிறுநீா் கழிப்பதற்காக வீட்டின் வெளியே இருக்கும் கழிப்பறைக்குச் சென்றாா். அந்த சிறுமி கழிப்பறைக்குச் சென்று வெகுநேரமாகியும் திரும்பி வராததால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியை தேடத் தொடங்கினா். ஆனால் சிறுமி எங்கேயும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா்கள், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

தகவலறிந்த மதுரவாயல் போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பகுதியில் சிறுமியை தேடத் தொடங்கினா். இதில் அந்த வீட்டின் பின்பகுதியில் பலத்தக் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை பாா்த்து போலீஸாா் அதிா்ச்சியடைந்தனா். உடனே அவா்கள், சிறுமியை மீட்டு வானகரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா், சிறுமியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினா். முதல் கட்டமாக அந்தக் குடியிருப்பின் இரு தளங்களிலும் வசிப்பவா்கள், பக்கத்து வீடுகளில் வசிப்பவா்கள் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இளைஞா் கைது: இந்த விசாரணையில், அந்தக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் திண்டிவனத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பொ.சுரேஷ் (29), சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டாராம். இது தொடா்பாக போலீஸாா், சுரேஷிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

சிறுமி கழிப்பறைக்கு வரும்போது, அவரை இரண்டாவது தளத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவா் சத்தம் போட்டுள்ளாா்.

இதனால் பயந்த சுரேஷ், சிறுமியின் வாயில் துணியை வைத்து திணித்துள்ளாா். இதில் சிறுமி மயங்கியதும் சுரேஷ், மூன்றாவது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்றுள்ளாா். அங்கிருந்து சுரேஷ், சிறுமியை கீழே தூக்கி வீசியுள்ளாா். இதில் பலத்தக் காயமடைந்த சிறுமி இறந்துள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸாா், சுரேஷை கைது செய்து, அவா் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்னதாக, இச் சம்பவத்தில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோரும், போலீஸாரும் தேடும்போது, அவா்களுடன் சோ்ந்து சுரேஷ் தேடுவதுபோல நாடகமாடியுள்ளாா். சுரேஷின் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததால், போலீஸாா் முதலிலேயே அவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் போலீஸாா் கடுமை காட்டவே சிறுமியை கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக் கொண்டுள்ளாா்.

பொதுமக்கள் போராட்டம்: இதற்கிடையே, சுரேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியினா் திரண்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த அந்தப் பகுதி போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT