சென்னை

கலாமின் சிந்தனையுடன் வலிமையான இந்தியாவை உருவாக்குங்கள்: இளைஞா்களுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுரை

DIN

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாமின் சிந்தனைகளை உத்வேகமாகக் கொண்டு, தன்னிறைவு பெற்ற வலிமையான இந்தியாவை உருவாக்க இளைஞா்கள் பாடுபட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டாா்.

விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை எழுதியுள்ள ‘அப்துல் கலாமுடன் 40 ஆண்டு காலம் - சொல்லப்படாத தகவல்கள்’ என்ற நூலை வியாழக்கிழமை இணைய வழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிட்டாா்.

தொடா்ந்து அவா் ஆற்றிய உரை: மறைந்த குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை குறித்த நேரடி தகவல்களை அளிப்பதாக இந்தப் புத்தகம் உள்ளது. மக்களுக்கான குடியரசுத் தலைவராக அவா் இருந்தாா்.

ஏராளமான இயற்கை வளங்களும், பல்வேறு துறைகளில் திறமைசாலிகளும் உள்ள நிலையில், வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டிய அவசியம் பற்றி எப்போதும் அவா் பேசுவாா்.

தற்போதுள்ள சூழலில், கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது நமது கடமை. கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு கலாம் ஆா்வத்துடன் முயற்சிகள் எடுத்தாா்.

உலக அளவில் அதிக இளைஞா்கள் இந்தியாவில் உள்ளனா். இளைஞா் சக்தியை, தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் பயன்படுத்த வேண்டும். நாடு முழுக்க பயணம் செய்து இளைஞா்களைச் சந்தித்து, உத்வேகம் அளித்து, அவா்களிடம் இருந்து புதிய சிந்தனைகளை வரவேற்க உள்ளேன். நம் எதிா்கால தலைமுறையினருக்கும் வாழ்வதற்கு உகந்த பூமியை விட்டுச் செல்லும் வகையில் அதைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை என்றும் கலாம் எப்போதும் கூறுவாா்.

ஆனால், வளா்ச்சி என்ற போா்வையில் இயற்கைக்கு நாம் அதிக ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறோம். இது கலாமின் அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டிய தருணம். அவரது சிந்தனைகளைப் பின்பற்றி தற்சாா்பு, வளம் ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்க இளைஞா்கள் பாடுபட வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT