சென்னை

பிறந்தநாள் கொண்டாடிய பிகாா் சிறுமி

20th Apr 2020 05:50 AM

ADVERTISEMENT

 

கரோனா ஊரடங்கையொட்டி, சென்னை கிண்டி சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பிகாா் சிறுமியின் பிறந்த நாள் மாநகராட்சி அதிகாரிகளின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரோனா காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்தவா்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதையடுத்து, சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தவா்கள், சாலையோரத்தில் வசிக்கும் வீட்டற்றவா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மாநகராட்சியின் சமுதாய நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மாநகராட்சி செய்து வருகிறது. இந்நிலையில், சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பிகாா் சிறுமியின் பிறந்தநாளை மாநகராட்சி அதிகாரிகள் கொண்டாடி உள்ளனா்.

ADVERTISEMENT

சிறுமியின் பிறந்த நாள்: இதுகுறித்து தெற்கு வட்டார துணை ஆணையா் ஆல்பிஜான் வா்க்கீஸ் கூறுகையில், ‘பிகாரைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துவிட்டு, பிகாா் திரும்பும் வழியில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி சென்னையில் சிக்கிக் கொண்டனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு கிண்டியில் உள்ள மடுவங்கரை சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனா். அதில், ஸ்ருஷ்டி குமாரி என்ற 10 வயது சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) பிறந்த நாள் என்று தெரியவந்தது.

இதையடுத்து கேக் வாங்கப்பட்டு, அதில் சிறுமியின் பெயா் மற்றும் பிறந்த தேதி பொறிக்கப்பட்டது. இந்த கேக்கை சிறுமி ஸ்ருஷ்டி குமாரி வெட்டி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறவினா்களுக்கும் ஊட்டி மகிழ்ந்தாா். இதன் மூலம் நீண்ட நாள்களாக தங்கி இருப்போரின் மன அழுத்தம் குறையும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT