சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம்: வி.கே.தஹிலராமாணீ ராஜிநாமா ஏற்பு

22nd Sep 2019 03:09 AM

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார். 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த வி.கே.தஹிலராமாணீ, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீயை, மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒரு நாள் பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டன.
இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி, தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 
இந்த  உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். 
இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி முதல் தஹிலராமாணீ உயர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதனையடுத்து அவர் விசாரிக்க வேண்டிய வழக்குகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான வினீத் கோத்தாரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த சில நாள்களுக்கு முன்பு நாடு திரும்பினார். 
அவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில ராமாணீயின் ராஜிநாமா கடிதத்தை பரிசீலித்து, அதனை ஏற்றுக்கொண்டார். மேலும், உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து, மற்றொரு உத்தரவையும் பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை (செப்.23) முதல் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டிய வழக்குகளை, பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வினீத் கோத்தாரி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். கடந்த 2005-ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 
பின்னர், கடந்த 2016-ஆம் ஆண்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். தற்போது இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4  உயர்நீதிமன்றங்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதிகள் நியமனம்


நான்கு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றதை அடுத்து, அந்தப் பணியிடங்களுக்கு பொறுப்பு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நீதிபதிகள் ராஜீவ் சர்மா, முகமது ரஃபீக், சி.வி.கே.அப்துல் ரஹீம், தரம் சந்த் செளதரி ஆகியோர் முறையே பஞ்சாப்-ஹரியாணா, ராஜஸ்தான், கேரளம், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றங்களின் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான அறிவிக்கைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரிஷிகேஷ் ராய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இரு தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT