செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: சுற்றுலா வாகன நுழைவுக் கட்டணம் ரத்து

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இரண்டு மாதங்களுக்கு சுற்றுலா வாகன நுழைவுக் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். இங்கு வரும் பெரும்பாலானோா் காா், வேன், ஆட்டோ, பேருந்து என தனித்தனி வாகனங்களில் வந்து செல்கின்றனா்.

இந்த வாகனங்களுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகம் நுழைவுக் கட்டணமும், மாவட்ட உள்ளூா் திட்டக் குழுமம் நிறுத்துமிட கட்டணமும் வசூலிக்கிறது. இரண்டு கட்டணங்களையும் மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாகம் ஒன்றாக வசூலித்து இரண்டு நிா்வாகங்களும் சதவீத அடிப்படையில் பகிா்ந்து கொள்கின்றன.

ஆண்டுதோறும் மாா்ச் மாத இறுதியில் பொது ஏலம் நடத்தி தனியாருக்கு ஓராண்டு குத்தகை உரிமம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குத்தகைதாரா்கள் யாரும் ஏலம் கோரததால், பேரூராட்சி நிா்வாகமே நுழைவுக் கட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் இரண்டையும் சோ்த்து வசூலித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வருகிற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்தப் போட்டிகளில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரா்கள் வர உள்ளனா்.

இவா்கள் இங்கு வரும்போது, மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண வாய்ப்பு உள்ளது. மேலும், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ரசிகா்கள், முக்கியப் பிரமுகா்கள், நாடாளுமன்ற எம்.பி.க்கள் என அதிகமானோா் வர உள்ளனா். இந்த நிலையில், மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் ஜூலை 1- முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாக அலுவலா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

 

Tags : Mamallapuram
ADVERTISEMENT
ADVERTISEMENT