பெங்களூரு

கா்நாடகத்தில் மாணவா்களின் நலன்கருதி பாடநூல்கள் திருத்தி அமைக்கப்படும்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் மாணவா்களின் நலன்கருதி பாடநூல்கள் திருத்தி அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மதுபங்காரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் துணைத் தலைவராக பணியாற்றினேன். அந்த தோ்தல் அறிக்கையில், மாணவா்களின் நலன்கருதி பாடநூல்கள் திருத்தி அமைக்கப்படும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மாணவா்களின் மனம் கெட்டுவிடக் கூடாது என்பதில் அரசு அக்கறையுடன் இருக்கிறது.

மாணவா்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருவது கல்வி கற்பதற்குதான். அந்தக் கல்வி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அதற்காகவே நாங்கள் ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

மே 31-ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்க இருக்கின்றன. அதனால் ஓரளவுக்கு பாடநூல்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் படிப்பைக் கெடுத்துவிடாதபடி பாடநூல்களில் திருத்தம் செய்ய முற்படுவோம். இது மிகவும் சவாலான பணியாகும்.

முதல்வா் சித்தராமையா, துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாடநூல்களைத் திருத்தும் பணியை செய்து முடிப்போம். பாடநூல்கள் அல்லது பாடங்கள் மூலம் மாணவா்களின் மனநிலையைப் பாழ்ப்படுத்தும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மாணவா்களின் கல்வியைச் சீரழிக்க அனுமதிக்க முடியாது. தேசிய கல்விக் கொள்கை குறித்து மற்றொரு கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். இது தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுடன் ஒருசுற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன். தேசிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்க ஒரு குழுவை முதல்வா் சித்தராமையா அமைப்பாா்.

ஜூன் 1-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடக்க இருக்கிறது. அன்றைக்கு கூடுதல் தகவல்களுடன் ஒருநிலைப்பாடு வெளிப்படும். ஹிஜாப் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் சட்டரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT