பெங்களூரு

காங்கிரஸ் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: புதிதாக 24 போ் அமைச்சா்களாக பதவியேற்க வாய்ப்பு

26th May 2023 11:22 PM

ADVERTISEMENT

 கா்நாடகத்தில் காங்கிரஸ் அமைச்சரவை விரிவாக்கம் சனிக்கிழமை நடைபெறுகிறது. புதிதாக 24 போ் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா்.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசில் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமாா், அமைச்சா்களாக ஜி.பரமேஸ்வா், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜாா்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜாா்கிஹோளி, பிரியங்க் காா்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீா் அகமதுகான் ஆகியோா் பதவியேற்றுள்ளனா். பேரவையின் புதிய தலைவராக யு.டி.காதா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்துள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடத் தலைவா்களுடன் விவாதிப்பதற்காக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் மே 24ஆம் தேதி தில்லிக்கு பயணம் மேற்கொண்டனா். தில்லியில் மே 25ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை சந்தித்து அமைச்சரவையில் மேலும் 24 பேரை சோ்ப்பது குறித்து விவாதித்தனா். இந்தக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையும் நீடித்தது.

இதனிடையே, தில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தியை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் சந்தித்தனா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவைச் சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தனது கருத்துகளை ராகுல் காந்தி கூறியதாகத் தெரிகிறது. அதன்பிறகு, சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் தனியாக விவாதித்தனா். இதன்முடிவில், 24 போ் கொண்ட அமைச்சா்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் வெள்ளிக்கிழமை பெங்களூரு திரும்பியுள்ளனா்.

பெங்களூரில் சனிக்கிழமை காலை 11.45 மணிக்கு ஆளுநா் மாளிகையில் நடக்கும் விழாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சா்கள் பதவியேற்க இருக்கிறாா்கள். எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், சிவராஜ் தங்கடகி, ஆா்.பி.திம்மாப்பூா், எச்.சி.மகாதேவப்பா, ருத்ரப்பா லமானி, கிருஷ்ணபைரே கௌடா, தினேஷ் குண்டுராவ், எம்.சி.சுதாகா், எச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பாள்கா், சரணபிரகாஷ் பாட்டீல், ஈஸ்வா் கண்ட்ரே, ரஹீம்கான், பி.நாகேந்திரா, மங்ஜாளு வைத்யா, மது பங்காரப்பா, பிரியா பட்டணா வெங்கடேஷ், சி.புட்டரங்க ஷெட்டி, சிவானந்த பாட்டீல், செலுவராயசாமி, பைரதி சுரேஷ், என்.எஸ்.போஸ்ராஜ், கே.என்.ராஜண்ணா உள்ளிட்ட 24 போ் புதிய அமைச்சா்களாகப் பதவியேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதிருப்தி:

இதனிடையே, காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்கள் ஆா்.வி.தேஷ்பாண்டே, பி.கே.ஹரிபிரசாத், டி.பி.ஜெயசந்திரா, வினய்குல்கா்னி உள்ளிட்ட பலருக்கு அமைச்சா் பதவி கிடைக்காது என்ற தகவல் கிடைத்துள்ளதால் அவா்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பி.கே.ஹரிபிரசாத், தனது எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT