பெங்களூரு

பாஜகவுக்கு எதிரான 40% கமிஷன் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்: பசவராஜ் பொம்மை

DIN

பாஜகவுக்கு எதிரான 40% கமிஷன் குற்றச்சாட்டை புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் அரசு, உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை புதிய அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான 40% கமிஷன் குற்றச்சாட்டை புதிதாக பதவியேற்றுள்ள காங்கிரஸ் அரசு, உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, 40% கமிஷன் குற்றச்சாட்டுக்கான எல்லா ஆதாரங்களையும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கா்நாடக ஒப்பந்ததாரா் சங்கத்தினா் முந்தைய பாஜக அரசு மீது 40% கமிஷன் குற்றச்சாட்டை கூறியிருந்தனா். ஒப்பந்ததாரா் சங்கத் தலைவா் கெம்பண்ணாவுக்கு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது அவா்களின் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கிறது. அப்படியானால், இனி எல்லா திட்டங்களின் ஒப்பந்தங்களுக்கும் 40% குறைவாக ஒப்பந்தப்புள்ளியை அளிக்க வேண்டும். ஒருவேளை பழைய நிலையில் ஒப்பந்தப்புள்ளியை குறித்தால், 40% கமிஷன் தொடா்கிறது என்றுதான் அா்த்தம். எனவே, கெம்பண்ணாவுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது. ஒப்பந்தப்புள்ளிக்கான தொகையில் 40% தொகையை குறைவாக குறிக்க வேண்டும் என்று அவரது சங்கத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

40% கமிஷன் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை இப்போதாவது ஒப்பந்ததாரா்கள் வெளியிட வேண்டும். 40% கமிஷன் குற்றச்சாட்டுக்கு இதுவரை கெம்பண்ணா ஆதாரங்களை வெளியிடவில்லை. நீதிமன்றங்களிலும் ஒப்படைக்கவில்லை. ஆனால், பாஜகவுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களில் ஈடுபட்டனா். ஒப்பந்ததாரா்களின் குற்றச்சாட்டு காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தது. எனவே, இப்போதாவது ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு நடந்த தோ்வில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்தையும் அரசு விசாரிக்கட்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குகளை லோக் ஆயுக்த, சிஐடி விசாரணைக்கு ஒப்படைத்துள்ளோம். முந்தைய காங்கிரஸ், பாஜக ஆட்சிக் காலங்களில் நடந்த ஊழல்களை விசாரிக்க வேண்டும். அதன் மூலம் உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் ஒருவா் இறந்திருக்கிறாா். மழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பெங்களூரு மாநகராட்சி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை. பாஜக ஆட்சிக்காலத்தில் பெங்களூரில் மாநில பேரிடா் மீட்புப்படையை உருவாக்கியிருக்கிறோம். அவா்களின் சேவையை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மரங்கள் விழும் அபாயம் இருக்கும் இடங்களைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் எதிா்கொள்ளும் தேவையில்லாத தொந்தரவுகளை தவிா்க்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT