பெங்களூரு

ஓய்வூதியதாரா்களின் வாழ்நாள் சான்றிதழ்:வங்கிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

8th Jun 2023 12:22 AM

ADVERTISEMENT

வாழ்நாள் சான்றிதழை ஒப்படைக்காத ஓய்வூதியதாரரின் வீட்டுக்குச் சென்று விசாரிக்க வேண்டியது வங்கியின் கடமை என கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, மல்லேஸ்வரத்தை சோ்ந்த 102 வயதான எச்.நாகபூஷண் ராவ் என்பவா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த காரணத்திற்காக சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு வழங்கப்படும் மதிப்புத்தொகையை (ஓய்வூதியம்) இந்திய அரசிடம் இருந்து 1974ஆம் ஆண்டு முதல் பெற்று வருகிறேன். இதுதொடா்பான எனது வங்கிக் கணக்கு, கனரா வங்கியில் உள்ளது. இந்த வங்கிக் கணக்கில் சுதந்திரப் போராட்ட மதிப்புத்தொகை பற்றுவைக்கப்பட்டு வந்தது.

2017 ஆம் ஆண்டு நவ. 1ஆம் தேதி முதல் எவ்வித காரணமும் கூறாமல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அது குறித்து விசாரித்த போது, 2017-18ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை ஒப்படைக்கவில்லை என்று காரணம் கூறினா். அதைத் தொடா்ந்து, 2018ஆம் ஆண்டு டிச.24ஆம் தேதி வாழ்நாள் சான்றிதழை ஒப்படைத்தேன். அதனடிப்படையில் 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான ஓய்வூதியத் தொகையை அரசு ஒதுக்கியது.

ஆனால், 2017 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான ஓய்வூதிய நிலுவைத் தொகையான ரூ. 3,71,280ஐ வழங்கவில்லை. இதுதொடா்பாக 2020-இல் உயா்நீதிமன்றத்தை அணுகினேன். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், வாழ்நாள் சான்றிதழ் ஒப்படைக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி நிலுவைத்தொகையை விடுவிக்க அரசு மறுத்துவிட்டது.

ADVERTISEMENT

அதன்பிறகும் நீதிமன்றத்தை அணுகிய போது, ஓய்வூதியத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் நிலுவைத்தொகை விடுவிக்கப்படவில்லை. எனவே, ஓய்வூதிய நிலுவைத் தொகையை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தாா். மனுதாரா் நாகபூஷண் ராவ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வீணா ஜே.காமத், ‘ஒவ்வோா் ஆண்டும் சுதந்திரப் போராட்ட வீரா்களிடம் வாழ்நாள் சான்றிதழைப் பெற வேண்டியது வங்கியின் பணி. வாழ்நாள் சான்றிதழை உறுதி செய்ய ஓய்வூதியதாரா், வங்கி அதிகாரியும் நேருக்கு நேராகச் சந்திக்க வேண்டும். ஆனால், ஓய்வூதியதாரா் மிகவும் வயது முதிா்ந்தவராக இருந்தால், வாழ்நாள் சான்றிதழை அளிப்பதற்கு முன் வங்கி அதிகாரி ஓய்வூதியதாரரின் வீட்டுக்கு சென்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

80 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், ஆண்டுக்கு இருமுறை (மே, நவம்பா்) வாழ்நாள் சான்றிதழை வங்கி பெற வேண்டும். ஒருவேளை வாழ்நாள் சான்றிதழ் ஒப்படைக்காவிட்டால், அதற்கான காரணத்தை ஓய்வூதியதாரரின் வீட்டுக்குச் சென்று அறிந்துகொள்ள வேண்டியது வங்கியின் கடமையாகும். இதன்மூலம் தகவல்களை உறுதி செய்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது’ என்று எடுத்துக்காட்டினாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘ஓய்வூதியதாரரின் நிலுவைத்தொகையான ரூ. 3,71,280ஐ 6 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும். நிலுவைத்தொகையை 2 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் 18 சதவீத வட்டியுடன் தொகையை அளிக்க வேண்டும். இதுதவிர, வங்கியும், மத்திய அரசும் இணைந்து ஓய்வூதியதாரருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும்’ என தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT