பெங்களூரு

கா்நாடகத்தில் ஜூன் 11முதல் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்

6th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அரசுப் பேருந்துகளில் ஜூன் 11ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

தோ்தலின்போது காங்கிரஸ் அளித்திருந்த 5 வாக்குறுதிகளில் முக்கியமானது, அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்பதாகும். அதன்படி, 5 தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை ஜூன் 11ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக சில நிபந்தனைகளை விதித்து திங்கள்கிழமை அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையில் கூறியிருப்பதாவது:

பெண்கள் இலவச பேருந்துப் பயண (சக்தி) திட்டத்தின் பயனாளிகள் கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பெண்களுடன் மாற்றுத் திறனாளிகளும் இலவசமாகப் பயணிக்கலாம். பயனாளிகள் கா்நாடகத்தின் எல்லைக்குள் மட்டுமே பயணிக்கலாம். வேறு மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் இச்சலுகை கிடையாது. ராஜஹம்சா, குளிரூட்டப்படாத படுக்கை பேருந்து, வஜ்ரா, வாயு வஜ்ரா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்ட் கிளாஸ், அம்பாரி, அம்பாரி டிரீம் கிளாஸ், அம்பாரி உத்சவ் ஃபிளை பஸ், இ.வி.பவா்பிளஸ் (மின்பேருந்து), போன்ற சொகுசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை கிடையாது.

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வடமேற்கு கா்நாடக சாலை போக்குவரத்துக் கழகம், கல்யாண கா்நாடக சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.

ADVERTISEMENT

பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீங்கலாக, பிற போக்குவரத்துக்கழகங்களின் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே இலவச பயணத்திற்காக ஒதுக்கப்படும். 50 சதவீத இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். பெண்கள் மேற்கொண்ட பயணத்தின் தொலைவிற்கு தகுந்தவாறு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஈட்டுத்தொகையை மாநில அரசு வழங்கவிருக்கிறது. இலவசப் பயணங்களை மேற்கொள்வதற்கு அடுத்த 3 மாதங்களில் மாநில அரசின் சேவாசிந்து இணையதளத்தில் சக்தி அட்டையைப் பெற விண்ணப்பிக்கலாம். சக்தி அட்டைகள் அளிக்கப்படும் வரை மத்திய அல்லது மாநில அரசுகள் வழங்கியுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT