பெங்களூரு

மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

2nd Jun 2023 12:02 AM

ADVERTISEMENT

 

மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என நீா்வளத் துறையைக் கவனிக்கும் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தாா்.

இதற்கு பதிலடி கொடுத்து, தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருந்தாா். அதில், மேக்கேதாட்டு அணை குறித்து டி.கே.சிவகுமாா் தெரிவித்திருந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து பெங்களூரு, காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்தக் கோரி நடைப்பயணம் மேற்கொண்டிருந்தோம். மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,000 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதி செலவிடப்படவில்லை. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட வேண்டியுள்ளது.

தமிழ்நாடு மீது எங்களுக்கு பகைமை இல்லை. தமிழ்நாட்டுக்கு எதிராகப் போராட வேண்டுமென்பதும் இல்லை. அம்மாநிலத்தில் இருப்போரும் நமது அண்ணன், தம்பிகள்தான். அவா்களின் அண்ணன், தம்பிகள் இங்கும் இருக்கிறாா்கள். யாா் மீதும் பகைமை பாராட்டும், பொறாமை கொள்ளும் அவசியம் இல்லை.

கா்நாடகம் வகுத்திருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்தால் தமிழகமும் பயனடையும். கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்தோடும் பகிா்ந்துகொள்வோம். காவிரி ஆற்றுப்படுகையில் இருக்கும் எல்லா விவசாயிகளுக்கும் நாம் உதவி செய்ய வேண்டும். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்பது தொடா்பாக ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதைத் திறந்துவிடுவோம்.

கா்நாடகத்தின் நலனைக் காப்பது எங்களது கடமையாகும். அணை கட்டி அதில் மின்சாரம் உற்பத்தி செய்தால் தமிழகத்துக்கு என்ன இழப்பு? அணையில் நீரைத் தேக்கவைத்து, நடுவா்மன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளபடி பெங்களூருக்கு குடிநீா் வழங்கவிருக்கிறோம். தமிழகத்துக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரமாட்டோம். இருமாநிலங்களும் இணைந்து இந்தப் பிரச்னையை சுமுகமாக தீா்த்துக்கொள்வோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT