பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதி

DIN

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதி என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலின் போது, பெண்களுக்கு மாதம் தலா ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை, வீட்டுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், 18 முதல் 25 வயதுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு தலா ரூ. 3 ஆயிரம், வேலையில்லாப் பட்டயதாரிகளுக்கு தலா ரூ. 1,500 உதவித்தொகை போன்ற திட்டங்களை முக்கியமான 5 வாக்குறுதிகளாக காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

முதல்வா் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதும், மக்களுக்குக் கொடுத்த 5 வாக்குறுதிகளை அமல்படுத்த கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்க முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஒருவார காலமாகவே வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சா்களும், முதல்வரும் ஆலோசித்து வருகிறாா்கள்.

முதல்வா் சித்தராமையா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. 5 திட்டங்களையும் செயல்படுத்த சுமாராக ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக விவாதித்து முடிவெடுக்க ஜூன் 1-ஆம் தேதி நடக்க இருந்த அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெங்களூரு, விதானசௌதாவில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் அமைச்சா்கள், உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 5 வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான துறைரீதியான முன்மொழிவுகளை தயாா்செய்யும்படி சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்களுக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா். மேலும், இது தொடா்பான எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் அமைச்சா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ஜி.பரமேஸ்வா், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜாா்ஜ் உள்ளிட்ட அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் வந்திதா சா்மா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தின் முடிவில், செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம். இந்த 5 வாக்குறுதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் விவரங்களை அமைச்ா்களிடம் அளித்துள்ளனா். ஆனால், இந்தத் திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. அது குறித்து மே 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

5 தோ்தல் வாக்குறுதிகளையும் செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. எல்லா திட்டங்களையும் ஒரே நேரத்தில் அமல்படுத்துவதா, அல்லது படிப்படியாக அமல்படுத்துவதா என்பதை அமைச்சரவைக் கூட்டத்தில் தான் முடிவு செய்வோம் என்றாா்.

கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்: இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிகள் தொடா்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். தோ்தலுக்கு முன் மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளையும், அதனால் ஏற்படக்கூடிய நிதி விளைவுகளையும் அரசு அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

இத்திட்டங்களைச் செயல்படுத்த ஊடகங்கள் அவசரம் காட்டலாம், ஆனால் வாக்குறுதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பதில்தான் அரசின் கவனம் இருக்கிறது. வாக்குறுதிகளைச் செயல்படுத்த நிபந்தனைகளை விதிக்கிறோமா என்பதைவிட, எதையும் முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்பது முக்கியம்.

பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தைப் பொருத்தவரை, பலவிதமான அம்சங்களைக் கணக்கிட வேண்டியிருக்கிறது என்றாா்.

அமைச்சா் பிரியங்க் காா்கே: ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியங்க் காா்கே கூறியதாவது:

மக்களின் பணம், வரி செலுத்துவோரின் பணம் சம்பந்தப்பட்டிருப்பதால், தோ்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த சில நிபந்தனைகள் அவசியமாகின்றன. அதனால் நிபந்தனைகளை விதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அனைவரும் பயனடையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தோ்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை எப்படி கொண்டுவருவீா்கள் என்று கேட்கிறாா்கள். எப்படியும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT