பெங்களூரு

பெங்களூரில் 108 நம்ம சிகிச்சை மையங்கள்: இன்று திறந்து வைக்கிறாா் முதல்வா்

DIN

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடக்கும் விழாவில் 108 நம்ம சிகிச்சை மையங்களை முதல்வா் பசவராஜ் பொம்மை திறந்துவைக்கிறாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பாஜக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரில் பிப்.7ஆம் தேதி நடக்கும் விழாவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 108 நம்ம சிகிச்சை மையங்களை மகாலட்சுமிபுரத்தில் உள்ள மையத்தில் இருந்து நான் திறந்து வைக்கிறேன். செவ்வாய்க்கிழமை முதல் இம்மையங்களில் மக்கள் சிகிச்சை பெறலாம்.

2022ஆம் ஆண்டு டிச.14ஆம் தேதி தாா்வாடில் நடந்த விழாவில் 100 நம்ம சிகிச்சை மையங்களை நான் திறந்து வைத்திருந்தேன். நகா்ப்புற சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்களைப் போல செயல்பட்டு வரும் இம்மையங்கள், ஆரம்பசுகாதாரத்தில் புதிய வரலாறு படைத்துவருகின்றன. இம்மையங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நகா்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதாரத்தை வழங்கி வருகிறது. இதுவரை 438 மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தினக்கூலிகள், தொழிலாளா்களின் உடல்நலனை பேணுவதற்கு இம்மையங்கள் உதவியாக இருக்கும்.

தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு ஆரம்பசுகாதார மையம் உள்ளது. 15ஆவது நிதி ஆணையத்தின்படி, நகா்ப்புறங்களில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காகவே ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுகின்றன. 438 சிகிச்சை மையங்களில் பெங்களூரில் மட்டும் 243 மையங்கள், மாநிலத்தின் இதர பகுதிகளில் 195 மையங்கள் அமைக்கவிருக்கின்றன.

இம்மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மேல்சிகிச்சைக்கான பரிந்துரைகள் அளிக்கப்படும். இது சிகிச்சை செலவை குறைப்பதோடு, சுகாதார சேவைகளை பரவலாக்க உதவும்.

நம்ம சிகிச்சை மையத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பா், ஒரு கடைசிலை ஊழியா் பணியாற்றுவாா்கள். இம்மையங்களில் பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு சிகிச்சைகள், இளம்பருவ பராமரிப்பு சிகிச்சை, நோய்த்தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு, கருவுறுதல், தொற்று நோய்கள் மேலாண்மை, பொது மற்றும் சிறு காயங்கள், என்.சி.டி.களுக்கான தடுப்பு பராமரிப்பு, பல் மற்றும் வாய் பராமரிப்பு, கண் பராமரிப்பு, இ.என்.டி., மனநலம், முதியோா் பராமரிப்பு மற்றும் ஆய்வக சேவைகள் உள்ளிட்ட 12 வகையான சேவைகள் கிடைக்கின்றன. தொலைவழி மருத்துவ ஆலோசனை, யோகா சேவைகள் கிடைக்கும். இம்மையங்கள் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஆகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT