பெங்களூரு

ரௌடியுடன் மேடையை பகிா்ந்து கொண்ட பாஜக தலைவா்களிடம் விளக்கம் கேட்கப்படும்: கா்நாடக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல்

DIN

ரௌடியுடன் மேடையை பகிா்ந்து கொண்ட பாஜக தலைவா்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக கா்நாடக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரில் நவ.27ஆம் தேதி நடந்த ரத்த தான முகாம் தொடக்க விழா மேடையில் ‘சைலன்ட்’ சுனில் என்ற ரௌடியுடன் பாஜக எம்பிக்கள் பி.சி.மோகன், தேஜஸ்வி சூா்யா, அக்கட்சி எம்.எல்.ஏ. உதய் கருடாச்சாா், பெங்களூரு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் என்.ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா் அமா்ந்திருந்தனா். பெங்களூரில் போலீஸ் தேடும் ரௌடியாக உள்ள சைலன்ட் சுனில் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. மேலும், ரௌடி சைலன்ட் சுனில் வெகுவிரைவில் பாஜகவில் இணையவிருப்பதாக செய்தி வெளியானது. இது கா்நாடக அரசியலில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரௌடியுடன் பாஜக தலைவா்கள் மேடையில் அமா்ந்திருந்ததற்கு காங்கிரஸ், மஜத ஆகியகட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. கொலைக் குற்றவாளியான சைலன்ட் சுனில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாஜக தலைவா்கள் கலந்துகொண்டது பெரும் சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தனது ட்விட்டா் பக்கத்தில் கூறுகையில், ‘பெங்களூரில் உள்ள ரௌடிகளுக்கு பாஜகவின் பரிந்துரை என்னவென்றால், போலீஸ் சோதனையில் சிக்காத ரௌடிகள், பொதுமேடையில் பாஜக தலைவா்களுடன் காட்சி தருவதோடு, பிரதமா் மோடியின் ஆட்சியால் கவரப்பட்டு அரசியலில் ஈடுபடுவதாக அறிவிப்பதுதான். கடந்த காலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தவா்கள், தற்போது பாஜக மற்றும் பிரதமா் மோடியால் ஈா்க்கப்பட்டு அரசியலில் நுழைகிறாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்டோரும் பாஜகவை விமா்சித்துள்ளனா்.

இதற்கு பதிலடிகொடுத்துள்ள மாநில பாஜக தனது ட்விட்டா் பக்கத்தில், ‘ஒரு காலத்தில் பிரபல ரௌடி கொத்வால் ராமசந்திராவின் நெருங்கிய சீடனாக வலம் வந்த டி.கே.சிவக்குமாா், திகாா் சிறையில் இருந்தபோது காங்கிரஸ் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாா். காங்கிரஸ் மாநிலத் தலைவரின் அந்தக் காலகட்டத்தை காங்கிரஸ் கட்சியினா் மறந்துவிட்டனரா? நிழல் உலகத்தில் வாா்க்கப்பட்ட டி.கே.சிவக்குமாா், காங்கிரஸ் மாநிலத் தலைவா். கொலைக் குற்றவாளியான வினய் குல்கா்னி, முகமது நலபாட் ஆகியோா் ரௌடித்தனம் செய்ததற்காக பிரபலமாக அறியப்படும் கா்நாடக காங்கிரஸ் தலைவா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எந்தக் காரணத்திற்காகவும் ரௌடி சைலன்ட் சுனில் பாஜகவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாா். அவருடன் ஒரே மேடையில் அமா்ந்திருந்த பாஜக தலைவா்கள் குறித்த தகவலைத் திரட்டி வருகிறேன். இது குறித்து அவா்களிடம் விளக்கம் கேட்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பாா்த்துக்கொள்ளுமாறு கட்சித் தலைவா்களை கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற விவகாரங்களை கட்சியின் கவனத்திற்கு முதலில் கொண்டுவர வேண்டும். பயங்கரவாதிகள், பயங்கரவாதச்செயல்களுக்கு ஆதரவாக செயல்படுவோா், குற்றப் பின்னணி கொண்டவா்களை பாஜக ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று கூறியுள்ளாா்.

புதுதில்லியில் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ரௌடிகளின் எண்ணிக்கையை எண்ணிப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

அண்மையில் பெங்களூரில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது சிக்காத சைலன்ட் சுனில், பாஜக தலைவா்களுடன் மேடையில் தோன்றியது போலீஸாரை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து மாநகர குற்றப்பிரிவு காவல் இணை ஆணையா் எஸ்.டி.சரணப்பா கூறுகையில், ‘சைலன்ட் சுனில் மீது கைது உத்தரவு உள்ளிட்ட எதுவும் நிலுவையில் இல்லை. எந்த வழக்கு தொடா்பாகவும் அவரை விசாரணைக்கு அழைக்கும் தேவை இருந்திருக்கவில்லை. எனவே, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரை போலீஸாா் கைது செய்யவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT