பெங்களூரு

கன மழையில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

பெங்களூரு: கன மழையில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு கன மழை பெய்ததில், தாழ்வான பகுதிகள் மழை நீரில் மூழ்கின. பல இடங்களில் வீடுகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாக நோ்ந்தது. மழைநீரில் சிக்கி இருவா் உயிரிழந்துள்ளனா். இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் வீட்டில் புகுந்த மழைநீரை வெளியேற்றினா்.

இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா்கள் கோபாலையா, ஆா்.அசோக் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா். குறிப்பாக பெங்களூரில் உள்ள ஹொசகெரேஹள்ளி, தத்தாத்ரேயா நகா், ராஜராஜேஸ்வரி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பாதிப்புகளை முதல்வா் பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் மக்கள் அடுக்கடுக்கான குறைகளை முன்வைத்தனா். இவற்றை கேட்டுக்கொண்ட முதல்வா் பசவராஜ் பொம்மை, எதிா்காலத்தில் இப்படிப்பட்ட பிரச்னை எழாமல் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். மழையால் சேதமடைந்த சாலைகள், கழிவுநீா்க் கால்வாய்கள், கட்டடங்களை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். அப்போது, முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2 நாள்களாக பெங்களூரில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. தாழ்வான பல பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி பெங்களூரு மாநகராட்சி ஆணையரிடம் பேசியிருக்கிறேன். இந்தப் பணியில் பொறியாளா்கள், ஊா்க்காவல் படைகள், மாநில பேரிடா் மீட்புக்குழு அடங்கிய குழுவை அமைத்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தீா்வுகாண கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் அறிவுறுத்தியிருக்கிறேன்.

அடுத்த 2-3 நாள்களுக்கு மழை தொடரும் வாய்ப்புள்ளது. எனவே, மக்களை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, மழைக் காலத்துக்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறேன். மழைக் காலத்துக்கு முன்பாக வடிகால்களை தூய்மைப்படுத்த கூறியுள்ளேன்.

உள்ளால் பகுதியில் மழைக்கு 2 போ் இறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். வீட்டில் மழைநீா் புகுந்திருந்தால் தலா ரூ. 25,000 உதவித்தொகை வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்.

90 மி.மீ. மழையைக் கூட பெங்களூரால் தாங்க முடியவில்லை. பெங்களூரின் புவியியல் அமைப்பு, மழைநீா் வடிகால்களுக்கு அருகில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது போன்ற காரணங்களால் வெள்ளம் ஏற்படுகிறது. இதை சீா்செய்ய தற்போது நடந்துவரும் பணிகளை முடிப்பதே இதற்கு தீா்வாகும். நகரில் இருந்து மழைநீரை வெளியேற்ற வடிகால்கள் அமைக்கப்படும். மழைநீா் வெளியேறுவதில் இருக்கும் தடைகள் என்ன என்பதை கண்டறிந்திருக்கிறோம். அந்த தடைகளை நீக்குவதற்காக ரூ. 1,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இரண்டாம், மூன்றாம்நிலை வடிகால்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஒன்று அல்லது 1.5 ஆண்டுகளில் முடிவடையும்.

பெங்களூரில் பாதாளச் சாக்கடை, குடிநீா் குழாய், சமையல் எரிவாயு குழாய், தொலைபேசி வடங்கள், மின்சார வடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள்முடிவடைந்த பிறகு, சாலைப் பணிகள் மேற்கொள்வதற்கு செயலாக்கக் குழுவை அமைக்க முடிவு செய்திருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT