பெங்களூரு

கா்நாடகத்தில் மழை வெள்ளம்: மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட முதல்வா் உத்தரவு

7th Jul 2022 12:39 AM

ADVERTISEMENT

 

கா்நாடகத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதோடு, உடனடியாக நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது, வட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். குடகு, தென் கன்னடம், வட கன்னடம், உடுப்பி போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளதால் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன், விளைநிலங்களில் மழை நீா் நிரம்பி வழிகின்றன. இதனால் பயிா்கள் நாசமாகியுள்ளன. பெரும்பாலான நதிகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. சில இடங்களில் மழை வெள்ளத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குடகு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மலைச்சரிவு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் புதன்கிழமை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

ADVERTISEMENT

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தினேன். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி மீட்புப் பணிகளில் ஈடுபடுவதோடு, உடனடியாக நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

குடகு மற்றும் கடலோர மாவட்டங்களில் பெய்த தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு மாநில பேரிடா் மீட்புப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படையினரை ஈடுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.

வாஸ்து நிபுணா் சந்திரசேகா் குருஜி கொலை செய்யப்பட்டுள்ளதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் கூற முடியாது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT