பெங்களூரு

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு விவகாரம்: கொலையாளியின் கூட்டாளிக்கு துப்பாக்கி விற்றதாக வியாபாரி ஒப்புதல்

DIN

பத்திரிகையாளா் கௌரி லங்கேஷின் கொலை வழக்கு விசாரணையில் கொலையாளியாகக் கருதப்படுபவரின் கூட்டாளிக்கு துப்பாக்கி விற்பனை செய்ததாக அதை விற்ற வியாபாரி ஒப்புக்கொண்டுள்ளாா்.

இடதுசாரி சிந்தனை கொண்ட பத்திரிகையாளா் கௌரி லங்கேஷ், 2017ஆம் ஆண்டு செப். 5-ஆம் தேதி பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) அண்மையில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதைத்தொடா்ந்து, விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியுள்ளது. முதல்நாளான திங்கள்கிழமை கௌரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ், சாட்சி அனில்குமாா் ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இரண்டாவது நாளான புதன்கிழமை விசாரணை நடந்தது. அப்போது மைசூரில் துப்பாக்கிக் கடை நடத்தி வரும் சையது ஷபீரின் சாட்சி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மத்தூரைச் சோ்ந்த வலதுசாரி செயற்பாட்டாளா் கே.டி. நவீன்குமாருக்கு (37) துப்பாக்கி விற்பனை செய்ததை, சையது ஷபீா் உறுதி செய்தாா். இந்தத் துப்பாக்கியின் உதவியுடன் பகுத்தறிவாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான கே.எஸ்.பகவானை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையின்போது, கே.டி.நவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.

விசாரணையில் ஹிந்து யுவசேனையின் தலைவராக நவீன்குமாா் செயல்பட்டது தெரிய வந்தது. பகவானைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கைது செய்யப்பட்ட நவீன்குமாா், கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் மட்டுமல்லாது, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கா் ஆகியோரின் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவா் அளித்த துப்பாக்கி தான், கௌரி லங்கேஷை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிறப்புப் புலனாய்வுப் படை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், கொலைக்குக் காரணமான 18 பேரும் கௌரி லங்கேஷை ஹிந்து மதத்திற்கு எதிரானவராகக் கருதி, கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

சனாதன் சன்ஸ்தா அமைப்போடு தொடா்புள்ள ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி அமைப்பில் ஈடுபட்டு வந்த அமோல் காலே (எ) டோபிவாலா (எ) பாய்சா ஹெப் தான் கொலைக்கான சதி திட்டத்தைத் தீட்டியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளுக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கியதாக அமோல் காலே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞா்கள், இந்த கொலைக்கும் ஹிந்து அமைப்புகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மாறாக, கௌரி லங்கேஷின் செயல்பாடுகள் மீது நக்சலைட்கள் தான் கோபமாக இருந்தனா் என்று வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT