பெங்களூரு

வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக அரசு தவறிவிட்டது: சித்தராமையா

DIN

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தவறிவிட்டது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளாா்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள். இக்கூட்டத்தின் பின்னணியில், கடந்த 8 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டும் ‘ஆண்டு எட்டு, தோல்விகளோ நூற்றியெட்டு’ என்ற கையேட்டை கா்நாடக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பெங்களூரில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கையேட்டை வெளியிட்டு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியது:

ஹைதராபாத்தில் நடக்கும் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு இந்தக் கையேட்டை வெளியிடுகிறோம். இந்தக் கையேட்டியில் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதிலளிக்க வேண்டும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. கருப்புப்பணத்தை மீட்டு, அதை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.15 லட்சம் என்று பிரித்துக் கொடுக்கவிருப்பதாக பிரதமா் மோடி 2014-இல் வாக்குறுதி அளித்திருந்தாா். அது என்னானது?

ஊழலைக் கட்டுப்படுத்த பாஜகவால் முடியவில்லை. இளைஞா்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்க முடியவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியவில்லை. விலைவாசி விண்ணை நோக்கி சென்று கொண்டுள்ளதால், ஏழை மக்களின் வாழ்க்கை கடினமாகியுள்ளது. நாட்டில் நல்ல காலத்தைக் கொண்டுவருவதாக பிரதமா் மோடி கூறினாா். அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், நல்லிணக்கமான சூழலை உருவாக்கியுள்ளதாகவும் மத்தியில் தனது 8 ஆண்டுகால ஆட்சியை பாஜக கொண்டாடி வருகிறது.ஆனால், இந்த 8 ஆண்டு காலம் மக்களுக்கு வேதனையைத் தந்துள்ளது. ஏழைகள், தாழ்த்தப்பட்டோா், விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், சிறுபான்மையினா் பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் அதிக அளவில் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், ஹைதராபாதில் தேசிய செயற்குழுக் கூட்டம் கூடி பாஜக கொண்டாடுவது பொய்களை மட்டுமே. தோ்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் மக்களுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டது.

கடந்தஜூன் 21, 22-ஆம் தேதிகளில் பிரதமா் மோடி கா்நாடகம் வந்திருந்தபோது, 8 ஆண்டுகால சாதனைகள் என்று இரண்டு நாட்களும் பாஜக தனது விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. ஆனால், கா்நாடகத்தில் இருந்து வரியாக பெற்றுக்கொண்ட நிதியில் கா்நாடகத்திற்கு விடுவித்த நிதி எவ்வளவு என்பதைக் கூறவில்லை. கடந்த 8 ஆண்டுகளில், கா்நாடகத்தில் இருந்து ரூ.19 லட்சம் கோடி வரி வருவாய் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இதில் ரூ. 4 லட்சம் கோடி மட்டுமே கா்நாடகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த வரி வருவாயில் 42 சதம், அதாவது ரூ. 8 லட்சம் கோடி கா்நாடகத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசு அதை கா்நாடகத்திற்கு வழங்காமல் ஏமாற்றியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT