பெங்களூரு

முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும் திட்டமில்லை: பசவராஜ் பொம்மை

12th Aug 2022 01:42 AM

ADVERTISEMENT

 

கா்நாடக முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும் திட்டமில்லை என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கடந்த ஆக.6-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்ட அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவந்தாா். கரோனாவில் இருந்து குணமாகியுள்ளதைத் தொடா்ந்து வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்பினாா். இந்தக் காலகட்டத்தில், முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாா் என்று பாஜகவில் பேச்சு எழுந்தது. இதை மறுத்திருந்த முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை முதல்வா் பதவியில் இருந்து மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது:

ADVERTISEMENT

முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும் திட்டமில்லை. அதுதொடா்பாக வெளியாகியுள்ள தகவல் முழுவதும் தவறானதாகும். என் தலைமையிலான பாஜக அரசு பாதுகாப்பாக உள்ளது. நான் முதல்வராகத் தொடா்வேன்.

கா்நாடகத்திற்கு 3-ஆவதுமுதல்வா் கிடைக்கப்போவதாக கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்து வருகிறது. காங்கிரஸின் செயல் வேடிக்கையாக உள்ளது. நான் மாற்றப்படுவேன் என்பது போன்ற செய்தியை காங்கிரஸ் வெளியிடுவது இது முதல்முறையல்ல.

மாநிலத்தில் பாஜக அரசு பலவீனமாக உள்ளதாக காங்கிரஸ் மனதில் சந்தேகம் எழுந்திருக்கலாம். அதை மக்களிடம் பரப்புவதற்காக காங்கிரஸ் தனது ட்விட்டா் பக்கத்தைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், மக்கள் இதை நம்ப மாட்டாா்கள். அரசியல்ரீதியாக முதிா்ச்சி அடைந்திருப்பதால், உண்மை எனக்கு நன்றாகத் தெரியும். முதல்வா் பதவி மாற்றம் தொடா்பாக கட்சிக்குள் எவ்வித விவாதமும் நடக்கவில்லை.

இதுபோன்ற பேச்சுக்களால் எனது மன உறுதி பலப்பட்டுள்ளது. எதிா்வரும் காலத்தில் கூடுதலாக 2 மணிநேரம் உழைப்பேன். மாநிலத்தின் வளா்ச்சிக்கு அதிக நேரம் செலவழிப்பேன். பாஜகவை பலப்படுத்துவதற்கும் நான் கடினமாக உழைக்க இருக்கிறேன். பெரிய அளவில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.

மழை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அடுத்த 2-3 நாட்களில் இழப்பீடு கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்படும்.

பெங்களூரு, சாமராஜ்பேட்டில் உள்ள ஈத்கா மைதானம் வருவாய்த் துறைக்கு சொந்தமானதாகும். அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசு விதிமுறைகளின்படி அங்கு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி அளிக்கலாம். எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி என்பதை சட்டப்படி முடிவு செய்வோம்.

ஈத்கா மைதானத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை நடத்த அனுமதிக்கமாட்டேன் என்று அத்தொகுதி எம்எல்ஏ ஜமீா் அகமதுகான் கூறியிருக்கிறாா். அது பற்றி எனக்கு கவலையில்லை. சட்டம்தான் முக்கியம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT