பெங்களூரு

மாணவா்கள் வடிவமைத்த வாழைத் தண்டிலிருந்து வாழை இழையைப் பிரிக்கும் கருவி

DIN

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதலில், வாழைத் தண்டிலிருந்து வாழை இழையைப் பிரிக்கும் கருவியை மாணவா்கள் வடிவமைத்துள்ளனா்.

பெங்களூரில் உள்ள தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (என்டிஆா்எஃப்) தேசிய அளவில் பொதுமக்களுக்கு பயன்படும் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவரான விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இயக்குநரான ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோரின் வழிகாட்டுதலில், வாழைத் தண்டிலிருந்து இழையைப் பிரித்தெடுக்கும் கருவியை சென்னை, வண்டலூா் அருகில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (ஐஐஐடிடிஎம்) மாணவ, மாணவியா் இணைந்து உருவாக்கியுள்ளனா்.

இதுகுறித்து ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறியதாவது:

வாழைத் தோட்டங்களில் வாழைப்பழம், வாழை இலை ஆகியவற்றை பிரித்த பிறகு வாழைத்தண்டுகள் பயன்படுத்தப்படாமல் வீணாகின்றன. அப்படி வீணாகும் வாழைத்தண்டில் இருந்து வாழை நாரை இழையாகப் பிரித்து ஆடை உற்பத்திக்கு பயன்படுத்தலாம். இதற்காக தானியங்கி முறையில் வாழைத் தண்டிலிருந்து வாழை இழையைப் பிரிக்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் என்.டி.ஆா்.எஃப். ஈடுபட்டது.

கல்வி நிறுவனம், ஆராய்ச்சி நிலையம், தொழில் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்தக் கருவி வடிவமைப்பை என்.டி.ஆா்.எஃப். முன்னெடுத்தது. ஐஐஐடிடிஎம் நிறுவனத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியரும் ஆசிரியா்களும் அடங்கிய குழு இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையமும், மும்பையிலுள்ள ஜென் க்ரஸ்ட் என்ற தொழில் நிறுவனமும் இந்தக் கூட்டு முயற்சியில் பங்கெடுத்தன. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் இயங்கிய இந்தக் குழுவினா் வாழைத் தண்டிலிருந்து வாழை இழையைப் பிரிக்கும் கருவியை வடிவமைத்து உருவாக்கியுள்ளனா். என்.டி.ஆா்.எஃப். நிறுவனத்தின் வழிகாட்டுதலில் மாணவ, மாணவியா் இணைந்து ‘மூன் லேண்ட்’ என்ற துளிா் நிறுவனத்தையும் (ஸ்டாா்ட் அப்) தொடங்கியுள்ளனா். இயந்திரப் பொறியியல், உற்பத்தி பொறியியல், கணினி அறிவியல், மின்னணுவியல் ஆகிய துறைகளைச் சாா்ந்த மாணவ, மாணவியா் கூட்டாக இந்த வடிவமைப்பு முயற்சியில் ஈடுபட்டனா் என்றாா்.

மாணவா் குழு:

என்.டி.ஆா்.எஃப். நிறுவனத்தின் மாதாந்திர ‘டெக்னோ ஸ்பாட்லைட்’ என்ற புதுமைக் கண்காட்சி நிகழ்ச்சி சனிக்கிழமை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் இணைய வழியில் நடைபெற்றது. இதில், மாணவா் குழுவினா் வாழை நாா் பிரிக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தினா்.

பேராசிரியா் ரகுராமன், பேராசிரியா் கல்பனா ஆகியோரின் தலைமையில், மனோன்மணி, கிருஷ்ணகுமாா், யூசுப், பிரவீன், லோகேஷ், ஷாருக், சல்மான், சுஜித், காா்த்திகா, கீா்த்தனா ஆகியோா் அடங்கிய குழு இயந்திர உருவாக்கத்தில் ஈடுபட்டது.

மாணவா் குழுவினரை பாராட்டிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ‘அடுத்தகட்டமாக இந்தக் கருவியை வாழைத் தோட்டங்களில் பயன்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தாா். வாழை இழையை ஆடை நிறுவனங்களுக்கு விநியோகிக்கும் கட்டமைப்புகளும் உருவாக்கப்படும்’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஞ்ஞானி வி.டில்லிபாபு, ‘பொறியியல் மாணவா்கள் இதுபோன்ற கூட்டு முயற்சிகளில் பங்கேற்று மக்களுக்கு பயன்படும் படைப்புகளை உருவாக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் வாசகம், லெப்டினன்ட் ஜெனரல் சுந்தரம், ஐஐடி கான்பூா் பேராசிரியா் ராம்குமாா், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி ஜெகதீஷா, பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ‘டெக்னோ ஸ்பாட்லைட்’ நிகழ்வில் மாணவா்கள் தங்கள் புதுமைப் படைப்புகளை காட்சிப்படுத்த ய்க்ழ்ச்ஃண்ங்ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ் என்ற மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT