பெங்களூரு

தற்போதைக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை

DIN

தற்போதைக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் எதுவும் மாநில அரசுக்கு இல்லை. இது தொடா்பான வதந்திகளுக்கு பொதுமக்கள் செவிசாய்க்கக் கூடாது. தற்போதைக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. இயல்பு வாழ்க்கை நீடிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். எனினும், பொது இடங்களில் கரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கை உணா்வுடன் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உருமாறிய புதிய வகை கரோனா தீநுண்மியான ஒமைக்ரான் பரவலைத் தடுக்க கண்காணிப்பை மாநில அரசு தீவிரமாக்கியுள்ளது. அதேநேரத்தில் டெல்டா வகை கரோனா தீநுண்மிக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க இருமுனைகளில் அரசு செயலாற்றி வருகிறது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான மாதிரிகளின் மரபணு வரிசை முறையைக் கண்டறிய தேசிய உயிரி அறிவியல் மையத்தின் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்மூலம் புதிய வகை கரோனா தீநுண்மியின் தன்மையை அறிந்துகொள்ள அரசு முற்பட்டுள்ளது.

பன்னாட்டு பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறாா்கள். அவா்களோடு தொடா்பில் இருந்தவா்களையும் கண்டறிந்து, கரோனா சோதனைக்கு உட்படுத்துகிறோம்.

கரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை தொகுப்புப் பகுதியாக அறிவித்து, அப்பகுதிகளில் அமல்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்புப் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களை 7 நாள்களுக்கு பிறகு மீண்டும் சோதனை செய்கிறோம். தாா்வாடில் உள்ள எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரியில் 4,000 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனைகளை மைசூரு, ஹாசன், பெங்களூரில் ஆனேக்கல் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தொகுப்புப் பகுதிகளில் மேற்கொள்வோம்.

தினசரி எடுக்கப்படும் கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். மருத்துவ நிபுணா்கள், துறையின் உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு, அக்கூட்டத்தில் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைகளை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் என்னிடம் தருவாா். அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT