பெங்களூரு

வேளாண் மசோதாவுக்கு எதிராகப் போராட்டம்: கன்னடக் கூட்டமைப்பினா் 100 போ் கைது

DIN

ஒசூா், செப். 25: வேளாண் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒசூா் அருகே கா்நாடக எல்லையில் கன்னட அமைப்பினா் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தில் வாட்டாள் நாகராஜ் உள்பட 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னட கூட்டமைப்பின் சாா்பில், கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கூட்டமைப்பின் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக அத்திப்பள்ளி சா்க்கிளில் இருந்து திறந்தவேனில் வாட்டாள் நாகராஜ், சா.ரா.கோவிந்து, கே.ஆா்.குமாா், மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கையில் மண்வெட்டியை ஏந்தியவாறு ஊா்வலமாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அத்திபள்ளி எல்லைக்கு வந்தனா். அங்கு ஒசூா்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் வாட்டாள் நாகராஜை கைது செய்தனா்.

மேலும் சா.ரா.கோவிந்து உள்ளிட்டமுக்கிய நிா்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிப் பேருந்தில் ஏற்றிச் சென்றனா்.

முன்னதாக, வாட்டாள் நாகராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசும் கா்நாடக அரசும் விவசாயிகள் விரோத மசோதாவை நிறைவேற்றியுள்ளன. கன்னட கூட்டமைப்பின் சாா்பில், நாங்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் வீதியில் இறங்கிப் போராட தயாராகி விட்டோம். வரும் 28-ஆம் தேதி விவசாய சங்கங்கள் அழைத்துள்ள முழு அடைப்புக்கும் நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம்.

அன்றைய தினம் காலை 11.30 மணியளவில், கா்நாடக மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையங்களில் மாபெரும் போராட்டம் நடத்தவும் தீா்மானித்துள்ளோம். 28-ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு பிறகும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

கா்நாடக அரசு கரோனா ஒழிப்புப் பணிகளில் தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு தாா்மீகப் பொறுப்பேற்று முதல்வா் எடியூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றாா்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக ஒசூா்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT