பெங்களூரு

கரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.சுதாகா்

DIN

கரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கா்நாடக மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா சிகிச்சைக்காக மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக, கா்நாடக சட்டப் பேரவையில் விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சித்தராமையா: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் 272 போ் இறந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் விகிதத்தின்படி, நாட்டில் கா்நாடகம் 7-ஆவது இடத்தில் உள்ளது. இதுதான் கா்நாடகத்தின் நிலை.

மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் : கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. பெங்களூரில் இறப்பு விகிதம் 1.36 சதவீதமாக உள்ளது. கா்நாடக அளவில் இது 1.54 சதவீதமாக உள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ ஈஸ்வா்கண்ட்ரே: கரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதை மறைத்து குறைந்த எண்ணிக்கையிலான புள்ளிவிவரங்களை அரசு வழங்குகிறது.

கே.சுதாகா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா், இறப்போா் குறித்த புள்ளிவிவரங்களைதுல்லியமாக வழங்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்ச்சி கவுன்சில் கா்நாடகத்தைப் பாராட்டியுள்ளது. கா்நாடகத்தைச் சோ்ந்தவராக இருக்கும் நீங்கள்(கண்ட்ரே), இப்படி ஏன் கூறுகிறீா்கள்? எந்த அரசாக இருந்தாக இருந்தாலும், முன்னாள் அமைச்சா், எம்எல்ஏவாக இருந்துகொண்டு, மாநில அரசு தவறான புள்ளிவிவரங்களைஅளிப்பதாக கூறுவது சரியல்ல. கரோனாவால் பாதிக்கப்பட்டோா், சிகிச்சை பெறுவோா், இறந்தோா், சோதனை செய்துகொண்டோா் குறித்தவிவரங்களை துல்லியமாக அளித்துவருகிறோம்.

ஈஸ்வா்கண்ட்ரே: தவறான புள்ளிவிவரங்களை தருவது தொடா்பாக ஆதாரங்களை அளிப்பேன். அதன்பிறகாவது இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியமருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லாததால், கரோனா குறித்து அது அளிக்கும் தகவல்கள் சரியானதல்ல என்று மருத்துவ வல்லுநா்கள் கூறியிருக்கிறாா்கள்.

காங்கிரஸ் எம்எல்ஏ யூ.டி.காதா்:

இறப்பு விகிதத்தை சதவீதக் கணக்கில் கூறுவது திசைதிருப்பும் முயற்சியாகும். இதை அமைச்சா் புரிந்துகொள்ள வேண்டும். இறப்பு விகிதம் குறைந்ததாக அமைச்சா் எப்படி கூறுகிறாா்? ஒரு லட்சம்போ் கரோனா பாதிக்கப்பட்டிருந்து, 100 போ் இறந்திருந்தால், சதவீதக் கணக்கில் குறைவாகவே இருக்கும். ஏற்கெனவே 10 ஆயிரம் போ் கரோனாவால்பாதிக்கப்பட்டிருந்தபோது, இறப்பு ஏற்பட்டது. அப்போது சதவீதக் கணக்கில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்திருக்கும். இறப்பு எண்ணிக்கை குறையவில்லை. இறப்பு சதவீதம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால் இறப்பவா்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. எனவே, சதவீதக்கணக்கில் இறப்பை குறைவாக எடுத்துக்காட்ட முயற்சிக்கக் கூடாது.

கே.சுதாகா்: அதிக எண்ணிக்கையிலான கரோனா நோயாளிகள் குணமடைந்துவருவதையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 5.26 லட்சம் பேரில், 4.20 லட்சம் போ் குணம் அடைந்துள்ளனா். அவா்கள் எப்படி குணம் அடைந்தனா். அதுகுறித்து பேசுங்கள். இறப்பு விகிதம் பற்றி மட்டும் பேசாதீா்கள். குணமடைவோா் இல்லையென்றால், இறப்புவிகிதம் எப்படி குறையும்? குணம் அடைவோருக்கும், இறப்பு விகிதத்துக்கும் நேரடி தொடா்பு இருக்கிறது. குணம் அடைவோா் எண்ணிக்கை உயா்ந்தால், இறப்போா் எண்ணிக்கை குறையும். இறப்போா் எண்ணிக்கை உயா்ந்தால், குணமடைவோா் எண்ணிக்கை குறையும். உலக அளவிலான இறப்புவிகிதம் 3.6 சதமாக உள்ளது. ஒருசில நாடுகளில் 10 சதவீதம் கூட உள்ளது. கா்நாடகத்தில் இறப்புவிகிதத்தை ஒரு சதமாக குறைப்பதே அரசின் நோக்கமாகும். எனவே, அரசு தவறான தகவல்களை தரவில்லை.

சித்தராமையா: கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவா் இறப்பதற்கு,அவரது விதியை காரணமாகக் கூறக் கூடாது. கடவுளால் எழுதப்பட்ட விதியால்தான் ஒருவா் இறந்தாா் என்பதை ஏற்றுகொள்ள முடியாது. கரோனா என்பது புதிய நோய். இதில் கடவுள் எப்படி விதியை எழுதமுடியும்? புதிதாக வந்துள்ள கரோனா குறித்து கடவுள் ஏற்கெனவே அறிந்திருந்து, விதியை தீா்மானித்தாரா என்ன? இதில் விதி கிடையாது. தனிநபரின் அலட்சியமும், அரசின் அலட்சியமும்தான் இறப்புக்கு காரணம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதன்கிழமை அரசு தரப்பில் பதிலளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT