Year Ender

விவசாயிகள் போராட்டம்: சாதனையும் வேதனையும்

28th Dec 2021 11:45 AM | எம். முத்துமாரி

ADVERTISEMENT

கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மிக முக்கியமான வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவம் 'தில்லி விவசாயிகள் போராட்டம்'

மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கிளர்ந்தெழுந்து காந்தியின் அஹிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். 

'மக்களுக்காகவே அரசு' என்று வலுவான ஒற்றுமைப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஜனநாயகத்தின் அவசியத்தை உணர்த்திய போராட்டம். 

இந்த போராட்டத்தில் விவசாயிகள் பெற்ற வெற்றி கொண்டாடப்பட வேண்டியது, வரலாற்றில் என்றும் குறிப்பிடப்பட வேண்டியது. இது சாதனையாக பார்க்கப்பட்டாலும், ஓராண்டில் கரோனா என்ற பெருந்தொற்றுக்கு மத்தியிலும் மைனஸ் டிகிரி குளிரிலும் விவசாயிகள் பட்ட இன்னல்கள் எண்ணிலடங்காதவை. 

ADVERTISEMENT

இந்த போராட்ட வெற்றிக்காக 700க்கும் மேற்பட்ட தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். பல்வேறு இடங்களில் காவல்துறையின் தடுப்பினால் காயமடைந்தோர் பலர். இதுதவிர தங்கள் சொந்த ஊர், விவசாய உற்பத்தியை விட்டு தலைநகருக்கு குடும்பத்துடன் வந்து தங்களுக்குத் தேவையானதை தாங்களே சமைத்து உண்டு தங்குவதற்கு கூடாரமும் அமைத்து முடிந்தவரை ஒருவருக்கொருவர் உதவி செய்து இத்தகைய பெரும் போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். 

நாட்டில் நெடுநாள்கள் அறவழியில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம் இதுவாகும். 

வேளாண் சட்டங்கள் 

விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா:

நடைமுறையில் இருந்த ஏ.பி.எம்.சி.  (வேளாண்மை விளைபொருள் சந்தைக் குழு) எனும் வேளாண் மண்டிகளுக்கு வெளியே விவசாயப் பொருட்களை வர்த்தகம் செய்யலாம்.

வேளாண் மண்டிகள் மூலமாக விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைப்பதை இந்த மசோதா தடுக்கிறது. 

விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா: விவசாயப் பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்தல். மேலும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம். 

கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் தங்களது பொருள்களை விற்கலாம். காலநிலையைப் பொறுத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தி இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரே விலையை நிர்ணயம் செய்வது என்பது இயலாத காரியம். அதுமட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ அணைத்து விவசாயிகளும் மேற்கொள்ள முடியாது. 

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திருத்த மசோதா: தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குகிறது. 

இதனால் மேற்குறிப்பிட்ட பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டு விலை அதிகரிக்கும்போது சந்தைக்கு வரும். 

மேலும், புதிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 

சட்டங்களை இயற்றுவதற்கான காரணம்

விவசாய சந்தைப்படுத்தலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. மேலும் இது மாநில அரசுகளின் வரம்பிற்கு உட்பட்டு இருந்தது. 

கடந்த 2000ம் ஆண்டில் மாநில அரசுகளின் கீழ் உள்ள ஏபிஎம்சி சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. 

2003ல் மத்திய அரசு ஒரு ஏபிஎம்சி சீர்திருத்த சட்டத்தை வடிவமைத்து மாநில அரசுகளுக்கு அனுப்பியது. ஆனால், ஏபிஎம்சி மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இந்த நிலையில்தான் மத்திய அரசே புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. 

விவசாயப் போராட்டத்திற்கான காரணங்கள்

மூன்று புதிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் முதல் மற்றும் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அவர்களின் கூற்றுப்படி, 

உணவுப்பொருள் மற்றும் விவசாய வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் பெரிய நிறுவனங்களுக்கு ஏற்றவாறு சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய தனியார் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் லாபம் பெறுவார்கள். 

தகுந்த விலையில் பயிர்களை கொள்முதல் செய்வதை உறுதி செய்ய குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. எனவே, அதுகுறித்த மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி, சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50% கூடுதலான தொகையை குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட வேண்டும். 

ஏபிஎம்சி எனும் மண்டிகள் மூலமாக விவசாயப் பொருள்கள் விற்பனை தொடர வேண்டும்.

கடந்துவந்த பாதை 

ஜூன் 5, 2020: விவசாயிகளின் நலன் காக்கவும் விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. 

செப். 14: மூன்று புதிய வேளாண் சட்டங்களும் நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. 

பஞ்சாப், ஹரியாணா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடங்கினர். 

செப். 17: மூன்று வேளாண் சட்டங்களும் மக்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டன. 

செப்.20 : குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றம் 

செப். 24 : பஞ்சாப் விவசாயிகள் 3 நாள் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.

செப். 25: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

செப். 27: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததுடன் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. 

நவ. 25: பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தனர். 'தில்லியை நோக்கி செல்வோம்' (delhi chalo) என்ற பெயரில் தலைநகருக்குச் செல்ல விவசாயிகள் அறிவித்ததை அடுத்து காவல்துறை அதற்கு தடை விதித்தது.  

நவ. 26: அறிவித்தபடி, தில்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்தனர். டிராக்டர், லாரி, பைக் மட்டுமின்றி பலரும் எல்லைகளில் இருந்து நடந்து சென்றனர். ஆனால், காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியது. விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசுதல், தண்ணீரைப் பாய்ச்சியடித்தல், தடுப்புகள் வைத்தல் என்று பல தடைகளை ஏற்படுத்தியது. எனினும், விவசாயிகள் அதனை மீறி தில்லி நிரங்காரி மைதானத்தை அடைந்தனர். 

ஆனால், அதையும் மீறி விவசாயிகள் டெல்லியை நோக்கிச் சென்றனர். இந்தப் போராட்டத்தில் 550 விவசாய சங்கங்களிலிருந்து 20,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நவ.28 : போராட்டத்தை கைவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஏனெனில் விவசாயிகள் புராரி மைதானத்தை அடைய முற்பட்டபோது, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால், விவசாயிகள் அதனை நிராகரித்தனர். 

நவ. 29: பிரதமர் நரேந்திர மோடி, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசியபோது, அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. ஆனால் உண்மையில் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியது இந்த அரசுதான் என்று குறிப்பிட்டார். 

டிச.3:  விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

டிச.5:  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

டிச. 8: இந்த போராட்டத்தில் மற்ற மாநில விவசாய சங்கங்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று 'பார்த் பந்த்' போராட்டத்துக்கு அனைத்திந்திய கிசான் சங்கர்ச் விவசாய கூட்டமைப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. 

டிச. 9:  மூன்று சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு கூறியதை விவசாயிகள் நிராகரித்ததுடன் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். 

டிச.11: வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் கிசான் யூனியன் அமைப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. 

டிச. 13: நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் பிரிவினைவாதிகள் சிலர் போராட்டத்தில் இருப்பதாக அப்போதைய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியதுடன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார். 

டிச. 16: வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுத் தரப்பினரும் விவசாய சங்கங்கள் அமைப்பினரும் இணைந்த ஒரு குழு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 

டிச. 21:  நாடு தழுவிய ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். 

டிச.30: விவசாயிகளுடன் மத்திய அரசுடன்  நடத்திய ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

ஜன. 4 , 2021: ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

ஜன.11 : விவசாயிகள் போராட்டத்தைக் கையாள்வது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்; முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. 

ஜன. 12: வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய 4 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. 

ஜன. 26: குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். தில்லியில் முக்கிய எல்லைகளில் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. வன்முறையால் தில்லியில் பல எல்லைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதியாக தில்லி செங்கோட்டை வரை விவசாயிகள் நுழைந்தனர். 

ஜன. 28: தில்லி காசிப்பூர் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தை காலி செய்யும்படி அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ராகேஷ் திகைத் உள்ளிட்ட தலைவர்கள் மறுத்துவிட்டனர். 

பிப். 4: விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆதரவுக்குரல்கள் எழுந்தன. இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க், பிரபல பாடகர் ரிஹானா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

பிப். 5: விவசாயிகள் போராட்டத்தில் 'டூல் கிட்' பயன்படுத்தியதாக தேசத்துரோக வழக்குப்பதிவு.

பிப். 6: பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் சாலை மறியல் போராட்டம். 

பிப். 9 : குடியரசு தின வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சிந்து தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். 

பிப். 14: கிரேட்டா துன்பர்க்கின் 'டூல் கிட்'- யை திருத்தியதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். 

பிப். 18 : நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் பல மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 

மார்ச். 2: சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் மற்றும் இதர கட்சித் தலைவர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்த முற்பட்டபோது காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். 

மார்ச் 5: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மார்ச் 6: தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 100வது நாளை எட்டியது.

மார்ச் 8: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

ஏப். 4: விவசாய விளைச்சலுக்காக சிங்கு எல்லையில் இருந்து சில டிராக்டர்கள் பஞ்சாப் கொண்டு செல்லப்பட்டது. விவசாயிகள் தங்குவதற்கு தில்லி எல்லைகளில் தற்காலிக கூடாரங்களை அமைத்தனர். 

மே 27: போராட்டம் தொடங்கி ஆறு மாதம் நிறைவுற்றதையடுத்து விவசாயிகள் 'கறுப்பு' தினத்தை அனுசரித்தனர். 

ஜூன் 5: புரட்சி தினமாக அறிவித்து விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தின. 

ஜூலை: மழைக்கால கூட்டத்தொடரை அடுத்து நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தினர். அதுபோல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக காந்தி சிலை முன்பு போராட்டம் செய்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றம் சென்று கவனத்தை ஏற்படுத்தினார். 

ஆக. 7: 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இணைந்து ஜந்தர் மந்தரில் விவசாயிகளை சந்திக்க புறப்பட்டனர். 

ஆகஸ்ட் 28: தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். 

செப். 5: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக முசாபர்நகரில் கிசான் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. பாஜகவுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டையும் அறிவித்தனர். 

செப். 7-9 : ஹரியாணா காவல்துறை நடத்திய வன்முறைக்கு எதிராக ஹரியாணா சிறிய தலைமைச் செயலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அக். 3: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில்  பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். 

நவ. 19: மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். 

எனினும், வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று விவசாயிகளின் சார்பில் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

நவ. 29: குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது, வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

டிச. 9: விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வ உறுதியளித்தது. இதையடுத்து போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்தது. 

ஜனநாயக நாட்டில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் அதற்கு எதிராக போராடும் உரிமையை அரசியல் சாசனம் வழங்குகிறது. அந்தவகையில், சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் விவசாயிகள் ஒற்றுமையுடன் தொடர்ந்து போரிட்டதால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

போராட்டத்திற்குப் பின்னால் விவசாயிகள் பட்ட கஷ்டங்கள், உயிரிழப்புகள் பல இருப்பது வருத்தத்திற்குரியது என்றாலும் துணிச்சலாக போராட்டத்தை அறவழியில் முன்னெடுத்து வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு இது பெரும் வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. 

ஒருகட்டத்துக்கு மேல் போராட்டம் தலைதூக்கினால் எதிர்காலம் கருதி மக்களின் குரலுக்கு அரசுகள் செவிசாய்த்துதான் ஆக வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம். 

ஆனால், மத்திய, மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட சீர்திருத்தத்தைக் கொண்டுவரும்போது அது சார்ந்த மக்களிடம் கருத்து கேட்ட பின்னரே செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. வேளாண் சட்ட விஷயத்தில் மாநில அரசுகளுடனோ, விவசாய அமைப்புகளுடனோ எந்தவித பேச்சுவார்த்தையும் இன்றி இந்த சட்டங்களை அரசு கொண்டு வந்ததே இத்தனை பெரிய போராட்டத்திற்கும் விவசாயிகள் பட்ட இன்னல்களுக்கும் காரணம். உயிரிழப்புகளும் நிகழ்ந்தவை, நிகழ்ந்தவைதானே. 

வேளாண் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று முந்தைய அரசுகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், இப்போதைய அரசு அதனை முறையாகக் கையாண்டிருந்தால் வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளியைத் தவிர்த்திருக்கலாம். 

அந்தவகையில், இதுபோன்ற ஒரு சூழ்நிலையை மக்களுக்கு ஏற்படுத்தி இன்னொரு முறை இந்திய 'ஜனநாயக' நாடு தவறிழைத்துவிடக் கூடாது என்பதை இப்போதைய அரசும் வரும் அரசுகளும் என்றென்றும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT