Year Ender

கரோனாவும் பள்ளிகளும்: மாணவர்கள் எதிர்கொண்ட சவால்கள்!

கோமதி எம். முத்துமாரி

எந்த தலைமுறைக் குழந்தைகளும்(மாணவர்கள்) எதிர்கொள்ளாத புதுமையான சவால்களை இக்காலக் குழந்தைகள் எதிர்கொண்டுள்ளனர்... ஆம், கரோனா எனும் பெருந்தொற்றினால் குழந்தைகளின் வாழ்க்கைமுறையும்கூட எதிர்பாராத அளவுக்கு மாற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளின் கல்வி முறை இந்த தலைமுறையில்தான் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகள் எனும் புதிய சுற்றுச்சூழலாலும் வீட்டிலேயே முடங்கிக்கிடந்ததாலும் மாணவர்கள் உடலளவிலும், மனதளவிலும் இதுவரை எதிர்கொள்ளாத மாற்றங்களை எதிர்கொண்டுள்ளனர். 

அனைத்துத் துறைகளும் நவீனமயமாகி வரும் நிலையில் கல்வித்துறையிலும் நவீனம் புகுத்தப்பட வேண்டிய ஒரு சூழலை இந்த கரோனா உருவாக்கியது எனலாம். 

பாதுகாப்பு கருதி வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலையால், பள்ளிக்குச் செல்லாமல், ஆசிரியர்களை நேரில் சந்திக்காமல், நண்பர்களுடன் அரட்டை அடிக்காமல் குழந்தைகளுக்கு ஒன்றரை ஆண்டு காலம் வெறுமனே சென்றுவிட்டது. 

'எப்போது விடுமுறை வரும்' என்று ஏங்கிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சலித்துப் போகும் அளவுக்கு இந்த இடைவெளி... குழந்தைகளை சமாளிக்க முடியாமல் போராடிய பெற்றோர்களும் அதிகம். 

வகுப்பறை, கரும்பலகை, நண்பர்கள் சூழ கல்வி பயின்ற மாணவர்கள் பின்னாளில் புதிய கல்வி முறையால் கணினி, செல்போன் என ஆன்லைன் வகுப்புகளுக்கு பழகிவிட்டனர். ஏற்கெனவே ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகி வரும் குழந்தைகளுக்கு இது மேலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 

ஆனால், ஏழை எளிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த கரோனா காலம் போதாத காலமாகவே இருந்தது. கணினியோ, ஸ்மார்ட்போனோ கிடைக்காமல் கல்வி பயில இயலாத அரசுப்பள்ளி குழந்தைகளின் நிலை வருத்தத்திற்குரியதாக இருந்தது. எனினும், கிராமப்புற பகுதிகளில் தன்னார்வலர்கள் பலரும் குழந்தைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று கல்வி பயிற்றுவித்தது சற்றே ஆறுதலான விஷயம். 

ஆனால், கரோனா காலத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கவில்லை என்பதும் கிடைத்த குழந்தைகளுக்கு சரியான, முறையான கல்வி கிடைக்கவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. அந்தவகையில் ஆன்லைன் கல்வி அனைத்து குழந்தைகளுக்குமானதாக இருக்கவில்லை. அதுபோல ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தும் பள்ளிகளைச் சார்ந்தே இருந்தது. பள்ளியில் கொடுக்கும் இலவச உணவே பிரதானமாக இருக்கும் குழந்தைகளும் அதிகம். அவர்களுக்கு இந்த கரோனா காலத்தில் போதிய ஊட்டச்சத்து உணவு கிடைத்திருக்குமா என்பது ஐயம்தான். 

சரி, ஆன்லைன் வசதி உள்ள குழந்தைகள் அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைத்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. நேரில் ஆசிரியர் முன்னால் படிப்பதற்கும் வீட்டில் ஆன்லைனில் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது அல்லவா? 

முதலில் வகுப்பறையிலே அனைத்துக் குழந்தைகளுக்கும் படிப்பில் முழு ஆர்வம் இருப்பதில்லை. அப்படி இருக்க, பெற்றோரின் கட்டுப்பாட்டில் வீட்டில் இருக்கும் குழந்தைகளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

குழந்தைகளை வகுப்பறையில் கட்டுப்படுத்துவதுபோல ஆன்லைன் வகுப்பில் கட்டுப்படுத்த ஆசிரியர்களால் முடிவதில்லை. ஆன்லைன் முறையால் குழந்தைகளுக்கும் படிக்கும் ஆர்வமும் குறைந்துவிடுகிறது. பள்ளிக்குச் செல்லாததால் குழந்தைகளின் போக்கு மாறி மெத்தனம் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்களே கூறுகின்றனர். ஆன்லைன் வசதி இருந்தும் வகுப்புகளில் கலந்துகொள்ளாத குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அடுத்ததாக, நேரடி வகுப்புகளிலேயே ஓராண்டில், முழுவதுமாக அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்படுவதில்லை. அவ்வாறு இருக்க ஆன்லைனில் புரிதல் இல்லாத கல்வியே அதிகம் இருந்துள்ளது. முழுக்கமுழுக்க படிப்பில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே ஆன்லைன் முறையில் முழுமையான கல்வி கிடைத்திருக்கும். 

ஆனால், கரோனா காலத்தில் அனைத்துத் துறைகளும் முழுவதுமாக முடங்கிய நிலையில் வேறு வழியின்றி ஆன்லைன் கல்வி முறை மட்டுமே சாத்தியம் என்பதால் அதைப் பயன்படுத்தியது சற்று ஆறுதலானது. ஒன்றுமே இல்லாததற்கு இது பரவாயில்லை என்ற கோணத்தில்தான் அணுக வேண்டியிருக்கிறது. 

உலகம் முழுவதும் 14 நாடுகளில் நீண்ட கால இடைவெளியில் பள்ளிகள் மூடப்பட்டதாகவும் இதனால் 16.80 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்துள்ளது. அதுபோல, கரோனா இடைவெளியால் 10 கோடி குழந்தைகள் வாசிக்கும் திறனை இழந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது. 

இவ்வாறான ஒரு சூழலில்தான், 17 மாதங்களுக்குப் பிறகு 2021 செப்டம்பரில் திறக்கப்பட்டன.

கரோனா முதல் அலை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அந்த ஆண்டே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதன்பின்னர் 2020-21 கல்வியாண்டு முழுவதுமே பள்ளிகள் திறக்கப்படவில்லை. அந்த ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 2021 ஜனவரியில் கூட பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகி பின்னர் அதனை அரசுகள் செயல்படுத்த முடியாமல் போனது. 

இதையடுத்து, கரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்ததை அடுத்து, 17 மாத இடைவெளிக்குப் பிறகு நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் 2021 செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தைப் பொருத்தவரை 9 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதியும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதியும் திறக்கப்பட்டன. அதுபோல பெரும்பாலான கல்லூரிகளும் செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட்டன. 

அதிலும் ஒரு வகுப்பிற்கு 50% மாணவர்கள் மட்டும் என்ற சுழற்சி முறையிலேயே  வகுப்புகள் தொடங்கிவிட்டன. குழந்தைகளின் மனநிலைக்கு ஒரு மாறுதலாகவே பள்ளிகள் திறப்பு இருந்தது. 

அனைத்துப் பள்ளிகளிலும் கிருமிநாசினி, கை கழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும், ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது, மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும், பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டன. 

வழக்கமாக பொதுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்று தங்கள் நண்பர்களை கட்டித்தழுவி விடுமுறைக் கதைகளை பேசுவதுண்டு. 

ஆனால், இந்த முறை குழந்தைகள் ஒருவரையொருவர் கைகொடுக்கவில்லை, கட்டித் தழுவவில்லை, மாறாக சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய சூழலே நிலவியது. முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நீண்ட நாள்களுக்குப் பிறகு நண்பர்களை பார்த்த குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சிதான். 

முதல்வர் முதல் ஆசிரியர்கள் வரை பள்ளிக்கு வந்த குழந்தைகளை மேள தாளங்களுடன் பூ கொடுத்து வரவேற்ற நிகழ்வுகளும் இந்த ஆண்டு அரங்கேறின. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திறக்கப்பட்டதால் ஒரு வாரத்திற்கு பாடங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என்றும் மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. முதல்நாளில் மாணவர்களின் மனநிலை குறித்த கருத்துகளும் கேட்கப்பட்டன. 

தற்போது தொடர்ச்சியாக வகுப்புகள் இல்லை எனினும் சுழற்சி முறை வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் அனைத்து நிலை மாணவர்களும் ஓரளவாவது கல்வி பெறும் பழைய சூழல் திரும்பியுள்ளது. 

ஆனால், மாணவர்களைப் பொருத்தவரையில் பள்ளிக்குத் திரும்பியது மகிழ்ச்சியாக இருப்பதாகவே தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நீண்ட இடைவெளியில் கல்வியின் மீதான ஆர்வம் அவர்களுக்கு குறைந்துள்ளதாகவும் இந்த இடைவெளியை நிரப்ப கொஞ்சம் காலம் ஆகும் என்று ஆசிரியர்கள் கூறுவது சற்று அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்தான். மேலும், மொபைல்போனுக்கு அடிமையாகியுள்ள மாணவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. 

இப்போது, 2021-22 கல்வியாண்டு பொதுத்தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுதாத மாணவர்களின் மனநிலை என்ன என்பதெல்லாம் ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று. 

ஏனெனில், பெரும்பாலான மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி கிடைத்தாலும் தேர்வுகள் நடத்தப்படாததால் சென்ற வகுப்பு பாடங்களை மாணவர்கள் முழுவதும் படித்திருக்க, புரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தவொரு சூழ்நிலையில்தான் கரோனா மூன்றாம் அலையின் தொடக்கமாக கருதப்படும் உருமாறிய 'ஒமைக்ரான்' வகை கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. 

தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் தேவையெனில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்த அறிவிப்பு வந்துவிட்டன. இது ஒட்டுமொத்தமாக மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்ததாக பள்ளிகளை மீண்டும் மூடுவதற்கு மருத்துவர்கள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

கரோனா அலைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாலும் ஒமைக்ரான் தற்போது தீவிரமாகப் பரவி வருவதாலும்  மீண்டும் ஆன்லைன் கல்விமுறை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. 

ஏற்கெனவே, கல்வியில் ஏற்பட்ட இடைவெளி நிரப்ப முடியாத சூழ்நிலையில் மீண்டும் ஒரு சவாலை எதிர்கொள்ள கல்வித் துறை தயாராக இருக்க வேண்டும். 

குழந்தைகளின் பாதுகாப்போடு அவர்களின் கல்வி குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம அளவில் கல்வி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை இப்போதே வகுக்க வேண்டும்.

இரண்டு கரோனா அலைகளை எதிர்கொண்ட அனுபவத்தை வைத்து அதில் கல்வித்துறையில் ஏற்பட்ட குறைகளைக் களைந்து மாணவர்களுக்கு முழுமையான கல்வி கிடைக்க வழிசெய்வதுடன், வரும் ஆண்டில் ஆன்லைனிலாவது பொதுத் தேர்வு நடத்த அரசு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் குழந்தைகளின் மெத்தனப்போக்கு அதிகரித்து கற்றல் விகிதத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT