Year Ender

புதிய ஸ்டூடியோ, வெற்றி மாறன் படம், ரசிகர்கள் கொண்டாடிய பாடல்: 2021-ல் என்ன செய்தார் இளையராஜா?

ச. ந. கண்ணன்

இந்த ஆண்டு புதிய ஸ்டூடியோவில் குடிபுகுந்த இளையராஜா, பல படங்களுக்கு இசையமைப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அதிலொன்று, வெற்றி மாறன் இயக்கும் விடுதலை.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், கமனம் (தெலுங்கு) என 2021-ல் இளையராஜா இசையமைப்பில் இரு படங்கள் வெளிவந்தன (கடந்த வருடம் ஒன்று - சைக்கோ). தற்போது பல புதிய படங்களுக்கு இசையமைத்து வருவதால் இந்த எண்ணிக்கை அடுத்தாண்டு நிச்சயம் அதிகரிக்கும்.

2021-ல் இளையராஜாவை மையப்படுத்திய செய்திகள் இவை. 

ஜனவரி 3: கைவிடப்பட்டது பாரதிராஜா - இளையராஜா படம்

பாரதிராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாகவிருந்த ஆத்தா படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: 

என் இனிய தமிழ் மக்களே... 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்தக் கதையைப் படமாக்கியிருந்தால் உங்கள் பாரதிராஜாவைக் கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்தk காலகட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகிறது. புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

ஜனவரி 18: பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தரப்போவதில்லை - இளையராஜா விளக்கம்

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பத்ம விபூஷண் விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக வெளியான தகவல்களை இளையராஜா மறுத்தார். இதுபற்றி வெளியிட்ட விடியோவில் இளையராஜா தெரிவித்ததாவது:

நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபர்களுடைய கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என சொல்லிக் கொள்கிறேன். அப்படி, ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஜனவரி 31: இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் சசிதரன் காலமானார் 

படம் -facebook.com/napols8

இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞரான சசிதரன் காலமானார்.

இளையராஜா மனைவியின் சகோதரரும் இசைக் கலைஞருமான சசிதரன், இளையராஜாவின் பெரும்பாலான பாடல்களுக்கு பாஸ் கிடார் வாசித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 31 அன்று சசிதரன் காலமானார். இதையடுத்து திரை இசைக் கலைஞர்கள் பலரும் சசிதரனின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தார்கள். 

பிப்ரவரி 3: இளையராஜா ஸ்டூடியோ திறப்பு, வெற்றிமாறன் படத்துக்கு முதலில் ஒலிப்பதிவு

படங்கள் - twitter.com/idiamondbabu

புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கான இசைப்பணிகளைத் தொடங்கினார் இளையராஜா.

40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. அங்குதான் அவரின் இசைப் பயணம் நடந்து வந்தது. பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா இடம் மாற வேண்டும் என்று ஸ்டுடியோ நிா்வாகம் தெரிவித்தது. பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகத்துக்கும், இளையராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதையடுத்து சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கினார் இளையராஜா. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. 

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்துக்கான இசைப்பணிகளைத் தனது புதிய ஸ்டூடியோவில் தொடங்கினார் இளையராஜா. ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றார்கள்.

பிப்ரவரி 3: இன்றைய படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லாததற்கு அப்பாடல்களே காரணம் - இளையராஜா
 

இளையராஜா ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா பேசியதாவது:

ஸ்டூடியோக்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிற பட்டியலில் பிரசாத் ஸ்டூடியோவும் சேரவேண்டும் என்று நான் வெளியே வந்துவிட்டேன். என் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கி ஸ்டூடியோவை இப்போது ஆரம்பித்துள்ளோம். வெற்றி மாறனின் புதிய படத்துக்காக பாடல் பதிவுடன் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் சில வேலைகள் உள்ளதால் அடுத்த ஒரு வாரத்தில் ஸ்டூடியோ முழு வீச்சில் இயங்கும். இன்று எது நவீனத்துவமோ அந்த நவீனத்துவம் ஸ்டூடியோவில் உள்ளது.

பிரசாத் ஸ்டூடியோவை விட்டு புதிய ஸ்டூடியோவை ஆரம்பித்துள்ளது குறித்து வருத்தம் உள்ளதா எனக் கேட்கிறீர்கள். நடந்த வாழ்க்கைக்கு வருத்தப்படுவோமா? அதற்கு வருத்தப்பட்டு இன்று வேலை செய்வோமா? அது அது வருகிறது, போகிறது.... அப்படித்தான். போய்க்கொண்டே இருக்கிறோம்... மழை பெய்கிறது, காக்கை எச்சில் போடுகிறது, என்ன செய்வீர்கள்? எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். எல்லாம் சவால் தான். முன்னேறுகிறவனைத் தடுப்பதற்கு எவ்வளவோ இடைஞ்சல் வரும். நம் வேலையை முயற்சியுடன் செய்யும்போது நாம் அடைகிற இடமே வேறாக இருக்கும். 

இப்போதைய சினிமாவில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றால் பாடல்கள் அப்படி இருக்கிறது. அதனால் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாடல் தான் முக்கியத்துவம் எடுக்க வேண்டும். பாடலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. பாடல் உங்களைப் பிடித்து இழுக்க வேண்டும். வேண்டுமென்று பாடலைப் போட்டால் போட முடியாது என்றார்.

மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா பேசியதாவது:

பிரசாத் ஸ்டூடியோவுக்குப் பிறகு வெளியே வந்த பிறகு எனக்கு ரெக்கார்டிங் தியேட்டர் தேவைப்பட்டதால் இந்த தியேட்டரை வாங்கி புதிய ஸ்டூடியோ இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இன்று பூஜை. உள்ளே சில வேலைகள் உள்ளதால் 7, 8 தேதிகளில் இருந்து இசையமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  

மழை கொட்டும் நேரத்தில் கொட்டப் போகிறது. இசை எந்தெந்த இடத்தில் இருந்து எப்படி வருகிறதோ அப்படித்தான் வரும். நாங்கள் இசையமைப்பதைத்தான் ரசிகர்கள் கேட்டாக வேண்டும். அது தலையெழுத்து. மாற்ற முடியாது. எப்படி பாடல் தருவீர்கள் என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? யாரால் சொல்ல முடியும்? மழை எப்போது வருகிறது என்று மழையிடம் கேட்க முடியுமா என்றார்.

பிப்ரவரி 16: இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினி 

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார். அப்போது ரஜினி முன்பு, ஒரு படத்தின் ஒலிப்பதிவை நிகழ்த்திக் காட்டினார் இளையராஜா. 

ஏப்ரல் 7: இளையராஜா - யுவன் இசையமைத்த மாமனிதன்: தட்டிப்புட்டா பாடல் வெளியானது!

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். 

தட்டிப்புட்டா பாடல் ஏப்ரல் 7 அன்று வெளியானது. இளையராஜா பாடிய இப்பாடலை பா. விஜய் எழுதியிருந்தார்.

ஏப்ரல் 15: இளையராஜா இசையமைத்த மதுரை மணிக்குறவன் படப் பாடல், டீசர் வெளியீடு!

(

)

ஹரிகுமார், மாதவி லதா நடிப்பில் ராஜரிஷி இயக்கியுள்ள படம் - மதுரை மணிக்குறவன். தயாரிப்பு - ஜி. காளையப்பன். 

சுமன், சரவணன், ராதாரவி, ராஜ்கபூர் போன்றோரும் நடித்துள்ளார்கள். பாடல்கள் - முத்துலிங்கம். 

இளையராஜா இசையமைத்த இப்படத்தின் டீசரும் ஒரு பாடலின் விடியோவும் வெளியாகின. 

ஏப்ரல் 22: இளையராஜா இசையமைப்பில் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை - போஸ்டர் வெளியானது

இளையராஜா இசையமைப்பில் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகின.

அசுரன் படத்துக்குப் பிறகு சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இதில் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ திரையரங்கில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ அமைந்துள்ளது. இப்படத்துக்கான இசைப்பணிகளைத் தனது புதிய ஸ்டூடியோவில் தொடங்னார் இளையராஜா. ஸ்டூடியோவின் தொடக்க நாளன்று வெற்றி மாறன், சூரி, விஜய் சேதுபதி போன்றோர் பங்கேற்றார்கள். 

சூரி கதாநாயகனாக நடிக்கும் வெற்றி மாறன் படத்துக்கு விடுதலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகின. 

மே 4: இளையராஜா இசையமைத்த மருத படப் பாடல்கள் வெளியீடு

ராதிகா, விஜி, சரவணன், லவ்லின் நடிப்பில் ஜி.ஆர்.எஸ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள மருத படத்தின் பாடல்கள் வெளியாகின.

மே 17: மதுரை மணிக்குறவன் பாடல்கள்

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள மதுரை மணிக்குறவன் படப் பாடல்கள் அவருடைய யூடியூப் தளத்தில் வெளியாகின. 

மே 28: இளையராஜா, யுவன் இசையமைத்த மாமனிதன்: 2-வது பாடல் வெளியானது!

மாமனிதன் படத்தில் இடம்பெற்றுள்ள ஏ ராசா என்கிற பாடல் இன்று வெளியானது. பா. விஜய் எழுதிய இப்பாடலின் விடியோவில் யுவன் சங்கர் ராஜா பாடி நடித்துள்ளார். 

ஜூன் 2: இளையராஜாவின் பாடல்களை வங்காள மொழியில் பாடிய உஷா உதுப்

இளையராஜாவின் பிறந்த நாளன்று சைக்கோ படத்தில் இடம்பெற்ற நீங்க முடியுமா பாடலை வங்காள மொழியில் உஷா உதுப் பாடினார். அதன் காணொளி இளையராஜாவின் யூடியூப் தளத்தில் வெளியானது. உன்னை நினைத்து நினைத்து பாடலையும் வங்காளத்தில் அதே போல அவர் பாட, அதன் காணொளி வெளியானது. 

அக்டோபர் 11 அன்று வெளியான காணொளி இது. நாயகன் படத்தில் இடம்பெற்ற நிலா அது வானத்து மேலே பாடலை வங்காள மொழியில் பக்திப் பாடலாக மாற்றி உஷா உதுப் பாட, அதன் காணொளிக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்தார்கள். 

ஜூன் 2: இளையராஜாவுக்கு பாரதிராஜா, கமல் ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

இளையராஜா தனது 78-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். 

தனது நீண்ட கால நண்பரான இளையராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வாழ்த்து கூறியதாவது:

உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும், என்றும் வயதில்லை. வாழ்த்துக்கள்டா. 

உயிர்த் தோழன்
பாரதிராஜா.

இவ்வாறு அவர் கூறினார்.

இளையராஜாவுக்கு நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து கூறியதாவது:

இசைக்கு இளைஞர் இளையராஜா. என் மனதுக்குக் கிளைஞர். உணர்வுகளில் உறவாய் இருப்பவர். சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து நடிகர் விஷால் கூறியதாவது:

மேஸ்ட்ரோ இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை அளிக்க வேண்டும். பலநாள் கனவாக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். ஊரடங்குக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்துவிட்டு, துப்பறிவாளன் 2 படத்தை உங்களுக்குக் காண்பிக்கக் காத்திருக்கிறேன். இன்னும் அற்புதமான பாடல்களை நீங்கள் எங்களுக்குத் தரவேண்டும் என்றார். 

ஜூலை 10: பிரஜின் படத்துக்கு இளையராஜா இசை

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து நடிகரான பிரஜின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

நினைவெல்லாம் நீயடா என்கிற படத்தை ஆதி ராஜ் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை, ஜூலை 10 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். 

ஜூலை 25: இளையராஜாவைச் சந்தித்த கீரவாணி

தெலுங்கின் முன்னணி இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி. தமிழில் மரகதமணி என்ற பெயரில் அழகன், நீ பாதி நான் பாதி, வானமே எல்லை போன்ற பல படங்களுக்கும் பிரபல இயக்குநர் ராஜமௌலியின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

ஜூலை மாதம் சென்னை வந்த கீரவாணி, இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்து உரையாடினார். இதன் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார்.

ஜூலை 27: இளையராஜாவின் பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்த ரஹ்மான்

இளையராஜாவின் பேட்டியைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ராஜாவின் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்தார் இசையமைப்பாளர் ரஹ்மான். 

20 வருடங்களுக்கு முன்பு இசையமைத்த பாடல்களை இன்றும் கேட்கிறார்கள். ஒரு பாடல் என்பது அப்போதுதான் பூத்த மலர் மாதிரி இருக்கவேண்டும். பழைய பாடல்களை நாம் கேட்கக் காரணம், அது புதிதாக இருப்பதால் தான் என இளையராஜா அளித்த பேட்டியை ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். 

ஆகஸ்ட் 2:  உலகம்மை படத்துக்கு இளையராஜா இசை

96, மாஸ்டர், கர்ணன் படங்களில் நடித்த கெளரி கிஷன் கதாநாயகியாக நடிக்கும் படம் - உலகம்மை.

1970களில் நடைபெற்ற சாதியப் பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் உலகம்மை படத்தை விஜய் பிரகாஷ் இயக்குகிறார். சு. சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்கிற நாவலைத் தழுவி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஎம் சுந்தர், மாரிமுத்து, அருள் மணி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். உலகம்மை படத்தின் தான் நடிப்பதாக இந்த நாளில் கெளரி கிஷன் ட்விட்டரில் அறிவித்தார்.

ஆகஸ்ட் 20: இளையராஜா இசையில் பாடிய கர்நாடக இசைப் பாடகிகள்

இளையராஜாவின் இசையில் பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி பாடியுள்ளார்கள். இளையராஜாவுடன் எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அவருடைய இசையமைப்பில் மயோன் படத்தில் பாடியுள்ளதாகத் தகவல் தெரிவித்தார்கள். 

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகும் மாயோன் படத்துக்கு இசை - இளையராஜா. இப்படத்தில்தான் ரஞ்சனி - காயத்ரி ஆகிய இருவரும் ஒரு பக்திப் பாடலைப் பாடியுள்ளார்கள். 

செப்டம்பர் 2: இளையராஜா இசையில் பாடிய கர்நாடக இசைப் பாடகி காயத்ரி

இளையராஜாவின் இசையில் பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி பாடியதை அடுத்து அவர் இசையில் தெலுங்குப் பாடலொன்றைப் பாடியுள்ளார் காயத்ரி.

கிருஷ்ண வம்சி இயக்கத்தில் உருவாகும் ரங்கமார்த்தாண்டா என்கிற தெலுங்குப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் காயத்ரி. இதுகுறித்த தகவலைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார். 

செப்டம்பர் 4: பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் பாடலின் புதிய காணொளி: ரசிகர்கள் அமோக வரவேற்பு

கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான படம் - டிக்கிலோனா. சமீபத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியான இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. சந்தானம், யோகி பாபு, அனகா, ஷிரின் போன்றோர் நடித்துள்ளார்கள்.

1990-ல் கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற, பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல், டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. 

இப்பாடலின் விடியோ யூடியூப் தளத்தில் செப்டம்பர் 4 அன்று வெளியானது. இதுவரை 86 மில்லியன் பார்வைகள் இந்த விடியோவுக்குக் கிடைத்துள்ளன. 

செப்டம்பர் 6: இளையராஜா இசையமைக்கும் படத்தில் 12 பாடல்கள்!

இளையராஜா இசையமைக்கும் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தால் எப்படியிருக்கும் என்று கனவு காணாத இளையராஜா ரசிகனே இருக்க முடியாது!

ஹைதராபாத்தைச் சேர்ந்த யாமினி ஃபிலிம்ஸ், மியூசிக் ஸ்கூல் என்கிற படத்தைத் தயாரிக்கிறது. ஷர்மான் ஜோஷி,  ஸ்ரேயா சரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பாபா ராவ் பியாலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். மியூசிக் ஸ்கூல் படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. 

காதலும் இசையும் கொண்ட படத்தின் கதையை இசை மேலும் மெருகூட்டுகிறது. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பெருமை. அற்புதமான பாடல்கள் கொண்ட இப்படத்தை மக்கள் திரையரங்கில் ரசிக்கவேண்டும். அத்தருணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று இயக்குநர் பியாலா கூறினார். சவுண்ட் ஆஃப் மியூசிக் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.  இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 அன்று தொடங்கியது. அனைத்து பாடல்களின் ஒலிபரப்பும் முடிந்துவிட்டதாக அக்டோபர் 2 அன்று தகவல் தெரிவித்தது பட நிறுவனம்.

செப்டம்பர் 6: இளையராஜா இசையமைப்பில் ஆதி நடிக்கும் கிளாப் பட டீசர்

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் கிளாப். ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானது.

செப்டம்பர் 7: இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய பிரபல புல்லாங்குழல் கலைஞர்

யூடியூபில் அஸ்வினி-யின் புல்லாங்குழல் காணொளிகளைக் காணாத இசை ரசிகர்கள் இருக்க முடியாது. இளையராஜாவின் தீவிர ரசிகையான பெங்களூரைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞர் அஸ்வினி கெளசிக், இளையராஜாவின் பாடல்களைப் புல்லாங்குழலில் வாசித்து அதன் காணொளிகளால் ரசிகர்களிடம் புகழ் பெற்றிருந்தார். இதைக் கேள்விப்பட்ட இளையராஜா, அஸ்வினியைத் தன் இசைக்குழுவில் சேர்த்து ஒரு படத்தில் பணியாற்ற வைத்துள்ளார். இதுபற்றி தனது ஃபேஸ்புக் பதிவில் இளையராஜாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்து அஸ்வினி கெளசிக் கூறியதாவது:

இளையராஜா சாருடன் அவருடைய புதிய ஸ்டூடியோவில் 3 நாள்கள் ஒலிப்பதிவில் பணியாற்றினேன். இந்த அனுபவத்துடன் ஒப்பிட்டால் இதுவரை நான் அனுபவித்தது ஒன்றுமில்லை. இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய அனைவரும் அவர் மீது பெரிய மதிப்பு வைத்துப் பேசுவது ஏன் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் புதிய இசைக்குறிப்புகளை வழங்கும் மேஜிக்கை நேரடியாகப் பார்த்தேன். கனவு நிறைவேறியது, அந்த இசைக்குறிப்புகளை நானும் வாங்கி வாசித்தேன். 

அவரிடமிருந்து எதுவும் தப்பிக்க முடியாது. ஒவ்வொரு வாத்தியத்தைப் பற்றியும் அதை வாசிப்பவர்களைப் பற்றியும் நுணுக்கமாக அவர் அறிவார். இசைக்குறிப்புகளை எப்படி வாசிக்க வேண்டும் என அனைவருக்கும் கற்றுத் தருவார். நாளின் கடைசியில் முழுப் பாடலையும் கேட்பது மகத்தான அனுபவம். எல்லோரும் வாசித்தது, காட்சிக்குத் தேவையான உணர்வுகள் எல்லாம் சில நிமிடங்களில் முடிவு செய்யப்பட்டவை. இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாங்கள் கிட்டத்தட்ட 40 மணிநேரம் ஒன்றாகப் பணிபுரிந்ததில் ஒரு நிமிடம்கூட நாங்கள் பணியாற்றிக்கொண்டிருந்த இசைக்குத் தொடர்பில்லாத எதையும் அவர் பேசவில்லை. இளையராஜா என்னிடம் கன்னடத்திலேயே பேசினார். அதைக் கேட்பது பேரின்பமாக இருந்தது. இளையராஜாவைப் பற்றிய அனைத்துமே தெய்வீகத்தன்மையுடன் இருந்தன என்றார்.

செப்டம்பர் 20: இளையராஜாவுடன் கமல் ஹாசன் சந்திப்பு 

இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் கமல் ஹாசன் நேரில் சந்தித்தார். இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் இச்சந்திப்பு நடைபெற்றது. 

செப்டம்பர் 20: யுவன் சங்கர் ராஜா பகிர்ந்த இளையராஜாவின் காணொளி

பேர் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடலின் உருவாக்கம் குறித்தும் கவிஞர் வாலியுடனான உரையாடல்கள் குறித்தும் இளையராஜா பேசிய காணொளியை அவருடைய மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார்.

செப்டம்பர் 25: எஸ்.பி.பி.  நினைவஞ்சலிக் கூட்டத்தில் உருகிய இளையராஜா 

எஸ்.பி.பி. இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி சென்னையில் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

பல மேடைகளில் என்னைப் புகழ்ந்து பாலு பேசியிருக்கிறார். அவர் புகழ்ந்து எனக்கொன்றும் ஆகப்போவதில்லை. நான் அவரைப் புகழ்ந்து அவருக்கொன்றும் ஆகப்போவதில்லை. ஏனால் எனக்கு அவர் மனத்துக்குள் என்ன இடம் கொடுத்திருக்கிறார் என்பது முக்கியம்.

எஸ்.பி.பி. உடல்நிலை மோசமானவுடன், பாலு உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் வா என ஒரு விடியோ வெளியிட்டேன். எஸ்.பி.பி.க்கு நினைவு வந்தபிறகு அந்த விடியோவை எஸ்.பி. சரண் போட்டுக் காட்டியிருக்கிறான். உடனே எஸ்.பி.பி. கண் கலங்கி, போனை வாங்கி எனக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். யாரையாவது பார்க்க வேண்டுமா என எஸ்.பி.பி.யிடம் கேட்டிருக்கிறார்கள். ராஜாவை வரச் சொல்லு என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வார்த்தை போதாதா, அவருடைய மனத்தில் எனக்கு என்ன இடம் கொடுத்திருந்தார் என்பதை அறிய. அந்த மாதிரியான நட்பு எங்களுடையது. என்னுடைய ஒவ்வொரு மேடையிலும் அவரும் இருக்கிறார் என்பதுதான் சத்தியம் என்றார். எஸ்.பி.பி.க்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக தன்னுடைய யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டார். 

அக்டோபர் 8: இளையராஜா இசையமைத்த மாயோன் பட டீசர்

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் நடிப்பில் என். கிஷோர் இயக்கியுள்ள படம் - மாயோன். இசை - இளையராஜா. தயாரிப்பு - அருண் மொழி மாணிக்கம். இப்படத்தின் டீசர் வெளியானது.

அக்டோபர் 27: இளையராஜாவுக்கு பால்கே விருது: கவிஞர் வைரமுத்து கோரிக்கை

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது. சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர்,  கே. விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது. 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கூறியதாவது:

பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத் 
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் 
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் 
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்

என்று கூறினார்.

நவம்பர் 19: அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா விளம்பரம்

உலகப் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜாவின் விளம்பரம் இடம்பெற்றது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. உலகின் முக்கியமான சுற்றுலாத்தலமாக இப்பகுதி உள்ளது. ஒரு வருடத்துக்கு 50 மில்லியன் பேர் இப்பகுதிக்கு வருகிறார்கள். ஒருநாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பகுதியைக் கடக்கிறார்கள். அதில் பலரும் சுற்றுலாப் பயணிகள். வணிக வளாகங்கள், மால்கள் நிறைந்த டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரம் செய்வதால் பெரிய கவனம் கிடைக்கும். 

டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா இடம்பெற்ற ஸ்பாடிஃபை விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இதனைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார் இளையராஜா. 

நவம்பர் 19: ட்விட்டரில் இணைந்த இளையராஜா

2015-லேயே ட்விட்டரில் இணைந்த இளையராஜா, நவம்பர் 19 அன்று முதல் ட்வீட்டை வெளியிட்டார். நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் விளம்பரம் குறித்து முதல் ட்வீட் வெளியிடப்பட்டது. சில காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ள இளையராஜா, தன்னுடைய டியூன் ஒன்றுக்கு பாடல் வரிகளை எழுதும்படி ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார். ஏராளமான ரசிகர்கள் அதற்குப் பதில் அளித்தார்கள். தமிழில் மட்டுமல்லாமல் இதர மொழியிலும் பாடல் வரிகளைத் தரவேண்டும் என ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டார். சிறந்த பாடல் வரிகள் எவை என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்று நவம்பர் 27-ல் கூறினார். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாட ட்விட்டர் தளத்தில் இளையராஜா தொடர்ந்து இயங்குவார் எனத் தெரிகிறது.

நவம்பர் 21: எம். மணிகண்டனின் கடைசி விவசாயி படத்தில் இளையராஜா இல்லை!

விஜய் சேதுபதி நடிப்பில் காக்கா முட்டை படப்புகழ் இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கிய படம் - கடைசி விவசாயி. இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா முதலில் ஒப்பந்தமானார். ஆனால் மணி கண்டன் - இளையராஜா ஆகிய இருவரிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கூட்டணி உடைந்தது. நவம்பர் 21 அன்று கடைசி விவசாயி படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது. அதில் படத்தின் இசையமைப்பாளர்களாக சந்தோஷ் நாராயணன் - ரிச்சார்ட் ஹார்வி ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இளையராஜா இசையமைத்த கடைசி விவசாயி படத்தின் முதல் டிரெய்லர் இதுதான். 

நவம்பர் 24: கமலுக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விரைவில் நலம் பெற வேண்டும் என இசையமைப்பாளா் இளையராஜா வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் கமல் ஹாசன் கரோனாவால் பாதிக்கப்பட்டபோது இளையராஜா ட்விட்டரில் தெரிவித்ததாவது:

நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆ..... ஹா..... என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம் எனத் தெரிவித்தார். 

நவம்பர் 26: வஸந்த் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த படம் ஓடிடியில் வெளியீடு

பார்வதி, லக்‌ஷ்மி ப்ரியா, காளீஸ்வரி, கருணாகரன் நடிப்பில் வஸந்த் எஸ். சாய் இயக்கிய படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். பல சர்வதேசப் பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றது. சோனி லைவ் ஓடிடியில் இப்படம் நவம்பர் 26 அன்று வெளியானது.  

பிரபல எழுத்தாளர்களான அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி சங்கரன். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.

டிசம்பர் 6: இளையராஜா, யுவன் இசையமைத்த மாமனிதன் பட டீசர் வெளியானது

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது.

இரு பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டீசர் வெளியானது. 

டிசம்பர் 10: மனதை உருக்கும் இளையராஜா இசையமைத்த 'மாயோனே' பாடல்

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் நடிப்பில் என். கிஷோர் இயக்கியுள்ள படம் - மாயோன். இசை - இளையராஜா. தயாரிப்பு - அருண் மொழி மாணிக்கம். இளையராஜா எழுதி இசையமைத்த மாயானோ என்கிற பாடல் டிசம்பர் 10 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. பிரபல கர்நாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி - காயத்ரி இப்பாடலைப் பாடியுள்ளார்கள். 

டிசம்பர் 10: தெலுங்கில் வெளியான இளையராஜா இசையமைத்த கமனம்

ஷ்ரேயா சரண், நித்யா மேனன் நடிப்பில் சுஜானா ராவ் இயக்கிய கமனம் படம் டிசம்பர் 10 அன்று தெலுங்கில் வெளியானது. இந்தப் படம்தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. 

டிசம்பர் 21: இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆசை - தனுஷ்

அத்ராங்கி ரே ஹிந்திப் படத்தில் நடித்த தனுஷ், காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது தனுஷிடம், யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளீர்கள் எனக் கேட்டார் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர். இதற்குப் பதிலளித்த தனுஷ், ரஜினி மற்றும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க விருப்பமாக உள்ளதாகத் தெரிவித்தார். மற்றொரு பேட்டியில், இளையராஜா தான் என்னுடைய கடவுள், தாய், தாலாட்டு என்றார். தனுஷ் இதுவரை நடித்த தமிழ்ப் படங்களில், அது ஒரு கனா காலம் படத்துக்கு மட்டுமே இளையராஜா இசையமைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT