சுவடுகள்

அயோத்தி - முடிவுக்கு வந்த நீண்டகால பிரச்னை

1st Jan 2021 06:15 AM

ADVERTISEMENT


"அயோத்தி இயக்கத்தில் பங்கெடுத்ததற்காகத் தூக்கிலிடப்பட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். என்ன தீர்ப்பு வரப் போகிறது எனத் தெரியவில்லை. ஆனால், நான் ஜாமின் கோர மாட்டேன். இந்த வழக்கில் ஜாமின் கோருவது அயோத்தி இயக்கத்தில் பங்கெடுத்த எனது கண்ணியத்தைக் கெடுத்துவிடும்."

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு 4 நாள்கள் முன்பு பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு எழுதிய கடிதம் இது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 30, 2020-ல் வெளியானது.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்பட 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 351 சாட்சியங்களையும், 600 ஆவணங்களையும் சிபிஐ ஆதாரங்களாக சமர்ப்பித்திருந்தது. குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் 16 பேர் உயிரிழந்துவிட்டதால், 32 பேர் மட்டுமே மீதமிருந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி வாசித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்குப் போதிய ஆதாரமில்லாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனைவரும் விடுதலையெனில் பாபர் மசூதியை இடித்தது யார்? அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்?

இந்தக் கேள்விகள் செப்டம்பர் 30-ம் தேதி எழ, அதற்கு முன்பே இவ்வழக்கு சார்ந்த மற்ற விவகாரங்கள் பல தூரம் கடந்து பயணித்துவிட்டன.

ராமர் கோயில் கட்டலாம்:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என  உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்தாண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. மேலும், இஸ்லாமியர்கள் தரப்பினருக்கு மசூதி கட்ட அயோத்தியிலேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும்பான்மை ஹிந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்பட்டது. 

ஆனால், தீர்ப்பு திருப்திகரமாக இல்லையென்றபோதிலும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதில்லை என  சன்னி வக்ஃபு வாரியம் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வது பற்றி மட்டும் பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

பிறகு கடந்த பிப்ரவரி மாதம், உத்தரப் பிரதேச அரசால் வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்ஃபு வாரியத்தின் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முடிவெடுக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியானதிலிருந்தே பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாகத் தொடங்கின.

மாநிலங்களவை உறுப்பினரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்று 4 மாதங்களில் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றார். அதுவும் அரசு பரிந்துரையின் பேரிலேயே இவர் மாநிலங்களவை உறுப்பினரானார்.

ஓய்வு பெறுவதற்கு முன்பு ரஃபேல், அயோத்தி உள்ளிட்ட வழக்குகளில் கோகோய் அளித்த தீர்ப்பும், ஓய்வுபெற்ற பிறகு அரசு பரிந்துரையிலேயே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வந்ததும் எதிர்க்கட்சிகளால் ஒற்றைப் புள்ளியில் இணைக்கப்பட்டன. இவை இரண்டுமே அரசுக்கு மிகவும் சாதகமான தீர்ப்பாகப் பார்க்கப்பட்டது. அதுவே விமரிசனத்துக்கும் வித்திட்டது.

கரோனா உச்சமும் - ராமர் கோயில் அடிக்கலும்:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என முடிவெடுக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அதே தேதிதான் ராமர் கோயில் அடிக்கல் விழாவுக்கும் குறிக்கப்பட்டது.

ஏற்கெனவே பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதும், அதற்கு அரசு மும்முரம் காட்டுவதும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா உச்சத்திலிருக்கும் நிலையில் அடிக்கல் நாட்டுவதன் அவசியம் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

மேலும், அடிக்கல் நாட்டு விழாவுக்குத் தலைவர்கள் அழைப்பும் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்த பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்களின் வயதைக் காரணம் காட்டி அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

நேருவும் மோடியும்:

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த இடத்தில் சோம்நாதர் கோயில் நிறுவும் விழாவில் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு எடுத்த முடிவு கவனிக்கத்தக்கது. அந்த விழாவுக்குக் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோயிலை நிறுவுவது இந்திய மதச்சார்பின்மைக்கு விடுக்கப்படும் சவால் என்று ராஜேந்திர பிரசாத் பங்கேற்பதை எதிர்த்தார் நேரு.

சோம்நாதர் கோயில் விவகாரத்துடன் ஒப்பிடுகையில், மாற்று மத வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.

சோம்நாத் கோயில் விவகாரத்தைக் காட்டிலும் இரு மதங்களை உள்ளிடக்கிய மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பிரதமர் மோடியின் இந்த செயல் சார்புடையதா இருப்பது போன்ற தோற்றமளிக்கும் என விமரிசிக்கப்பட்டன.

அடிக்கல் நாட்டியபிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, ராமர் கோயில் கட்டுவதன் மூலம் இந்தியாவின் பொற்காலம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதுபோன்ற சர்ச்சைகள், விமரிசனங்கள் இருந்தாலும், ராமர் கோயில் கட்டப்படும் விவகாரம் தடைகளின்றி அடுத்தடுத்து நகர்வுகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இஸ்லாமியர்கள் தரப்புக்கு மாற்று இடத்தில் மசூதி கட்டப்படுகிறது. அதற்கான மாதிரி வடிவமும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

எப்படியோ நெடுங்காலமாகத் தொடர்ந்த சிக்கலான ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது - 2020-ல்.

Tags : yearender
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT