சுவடுகள்

ரோஹித் சர்மா முதல் சுரேஷ் ரெய்னா வரை: 2020-ன் கிரிக்கெட் சர்ச்சைகள்!

DIN

கரோனா வைரஸ் காரணமாக குறைவான கிரிக்கெட் ஆட்டங்களே இந்த வருடம் நடைபெற்றாலும் சர்ச்சைகளுக்கு வழக்கம் போல பஞ்சமில்லை. ஐபிஎல் போட்டியில் நடைபெறும் வழக்கமான சர்ச்சைகள் இந்த வருடமும் இருந்தன. 2011 உலகக் கோப்பை குறித்த ஒரு சர்ச்சையும் இந்த வருடம் பேசப்பட்டது. கிரிக்கெட்டின் இந்த வருட சர்ச்சைகளின் தொகுப்பு:

ரோஹித் சர்மா: மும்பை இந்தியன்ஸா இந்தியாவா? 

இந்திய அணிக்காக விளையாடுவதை விடவும் ஐபிஎல் போட்டிக்குத்தான் ரோஹித் சர்மா முக்கியத்துவம் தருகிறார் என்கிற குற்றச்சாட்டை இந்த வருடம் எதிர்கொண்டார் ரோஹித் சர்மா. 

ஐபிஎல் போட்டியின்போது ரோஹித் சர்மாவுக்குத் தொடை பின்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அவர் இடம்பெறவில்லை. எனினும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். எனினும் ஐபிஎல் முடிந்த பிறகு சக வீரர்களுடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத் திரும்பினார். தன்னுடைய தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஐபிஎல் முடிந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. 

ரோஹித் சா்மாவின் காயம் தொடா்பான விவகாரத்தில் குழப்பம் நிலவுவதாக கேப்டன் விராட் கோலி பேட்டியளித்து சர்ச்சை ஏற்படுத்தினார். செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இம்மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற தோ்வுக் குழு கூட்டத்தில் ரோஹித் கலந்துகொள்ளவில்லை. ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை என்று எங்களுக்கு மின்னஞ்சல் கிடைத்தது. ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து அவருக்கு விளக்கப்பட்டதாகவும், ஆஸ்திரேலிய தொடரில் அவரால் பங்கேற்க இயலாது என்ற நிலை அவரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.

அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் அவா் மீண்டும் களம் இறங்கினாா். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவா் விளையாடுவாா் என்று எண்ணினோம். ஆனால், இந்திய அணியினருடன் இணைந்து அவா் ஏன் ஆஸ்திரேலியா வரவில்லை என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை. அவரது காயம் தொடா்பாகவும் தெளிவான தகவல் இல்லை.

தற்போது ரோஹித்தின் காயத்தின் நிலை குறித்த நிலவரம் டிசம்பா் 11-ஆம் தேதி தெரியவரும் என்ற ஒரு தகவல்தான் எங்களுக்குத் தெரியும். அதுவரை அணியினா் காத்திருக்க வேண்டியுள்ளது. அவரது நிலை குறித்து உறுதியற்ற தகவலே எங்களிடம் உள்ளது.

ரித்திமான் சாஹாவைப் போல காயத்திலிருந்து மீளும் சிகிச்சையை தேசிய அணியின் உடற்தகுதி மேம்பாட்டாளா் நிக் வெப், பிசியோ நிதின் படேலிடம் ரோஹித் சா்மா மேற்கொண்டிருந்தால் அவரது நிலை எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும். அவா்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் உறுதியாகியிருக்கும். ரோஹித், இஷாந்துக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவா்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், டெஸ்ட் தொடரில் அவா்கள் விளையாடியிருக்கலாம். அது உதவியாக இருந்திருக்கும் என்றார். 

கோலியின் பேட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா மீதான விமர்சனங்கள் அதிகமாகின. இந்திய அணிக்காக விளையாடுவதை விடவும் ஐபிஎல் போட்டிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்கிற குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டார். 

ஐபிஎல் போட்டியின் பிற்பகுதியில் காயத்துடன் விளையாடியது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ரோஹித் சர்மா பேட்டியளித்ததாவது:

என்னுடைய காயம் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று நிஜமாகவே எனக்குத் தெரியாது. பிசிசிஐ, மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு நிர்வாகங்களிடமும் என்னுடைய காயம் பற்றி தொடர்ச்சியாகத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தேன். டி20 ஆட்டம் என்பதால் காயம் இருந்தாலும் என்னால் ஆட்டத்தில் பங்கேற்க முடியும், நிலைமையைச் சமாளிக்க முடியும் என மும்பை அணியிடம் சொன்னேன். காயம் குறித்த தெளிவு கிடைத்த பிறகு எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெரிந்து விட்டது. 

காயத்திலிருந்து குணமாகி வருகிறேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளேன். டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் முன்பு எல்லாவிதமான சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி விட வேண்டும். அதனால் தான் பெங்களூருக்கு வந்துள்ளேன். என்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதையும் நான் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியுமா என்கிற சந்தேகங்களையும் நான் பொருட்படுத்தவில்லை. காயம் ஏற்பட்ட பிறகு அடுத்த இரு நாள்களில் அதைப் பற்றி தீவிரமாகக் கண்காணித்தேன். அடுத்த பத்து நாள்களுக்கு என்னால் விளையாட முடியுமா என யோசித்தேன். காயத்தின் நிலை தினமும் மாறியது. நன்கு தேறி வந்தேன். என்னால் விளையாட முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதால் தான் மும்பை அணியினரிடம் இதுபற்றி பேசினேன். பிளேஆஃப்புக்கு முன்பு விளையாடுகிறேன். அதில் எனக்குச் சிரமம் ஏற்பட்டால் பிளேஆஃப்பில் விளையாட மாட்டேன் என்றேன். இன்னும் என்னுடைய காயத்திலிருந்து முழுமையாகக் குணமாக வேண்டும். 

ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து ஆட்டங்கள் நடைபெறுவதால் ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கவில்லை (12 நாள்களில் ஆறு ஆட்டங்கள்). 25 நாள்களுக்கு என்னுடைய உடலுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டு பயிற்சிகள் மேற்கொண்டால் என்னால் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாட முடியும். இது எனக்குத் தெளிவான முடிவாக இருந்தது. இதைப் பற்றி ஏன் மற்றவர்கள் குழப்பிக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை என்றார். 

காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோஹித் சா்மாவின் உடற்தகுதி எவ்வாறு உள்ளது என்பது தொடா்பாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பரிசோதனை நடைபெற்றது. இதில் அவர் தேர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனி விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக 14 நாள்கள் ரோஹித் சா்மா தனிமைப்படுத்தப்பட்டார். கடைசி இரு டெஸ்டுகளில் ரோஹித் சர்மா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய சஹால்: ஆஸ்திரேலிய அணி அதிருப்தி

இம்மாத தொடக்கத்தில் கான்பெராவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டி20 ஆட்டத்தில் ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராக சஹால் களமிறங்கியதற்கு ஆஸ்திரேலிய அணி எதிர்ப்பு தெரிவித்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 23 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தது. ஆஸி. தரப்பில் ஹென்ரிகஸ் 3 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

ஜடேஜா பேட்டிங் செய்தபோது ஹெல்மெட்டில் பந்து பட்டது. இதன் காரணமாக ஜடேஜாவை மருத்துவக்குழு பரிசோதனை செய்தது. இதையடுத்து மாற்று வீரராக சஹால் தேர்வானார். ஜடேஜா போல சஹாலும் சுழற்பந்து வீச்சாளர் என்பதால் அவர் நான்கு ஓவர்களை வீச அனுமதி உண்டு. ஜடேஜாவுக்கு மாற்று வீரர் தேவை என்கிற இந்திய அணியின் கோரிக்கையை ஆட்ட நடுவர் டேவிட் பூன் ஏற்றுக்கொண்டு, சஹாலை அனுமதித்தார். 

இந்த ஏற்பாட்டுக்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து ஆட்ட நடுவரிடம் புகார் தெரிவித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஹெல்மெட்டில் பந்து பட்ட பிறகும் தொடர்ந்து விளையாடினார் ஜடேஜா. அப்போது அவருக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்திய அணியின் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் நன்கு பந்துவீசினார்கள். இதன் காரணமாகவே ஜடேஜாவுக்குப் பதிலாக சஹாலை மாற்று வீரர் என்கிற பெயரில் இந்திய அணி களமிறக்கியுள்ளது என்று ஆஸி. பயிற்சியாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சமூகவலைத்தளங்களிலும் இந்திய அணியின் முடிவுக்கு ஆச்சர்யம் தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

ஜடேஜாவுக்கு மாற்று வீரராகக் களமிறங்கிய சஹால் அற்புதமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். 

பஞ்சாப் அணியின் பிளே வாய்ப்பைப் பறித்த ஷார்ட் ரன்
 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்தது.

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னா், ஆடிய பஞ்சாப் அணியும் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க ஆட்டம் டையானது. இதையடுத்து, நடைபெற்ற சூப்பா் ஓவரில் தில்லி அணி வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். ஆனால் ஓடி முடிக்கும்போது கிரீஸை பேட் தொடாததால் ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார் நடுவர் நிதின் மேனன். ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது. கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி தில்லியைத் தோற்கடித்திருக்கும். 

நடுவரின் இந்த முடிவுக்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ட்விட்டரில் முன்னாள் வீரர் சேவாக் கூறியதாவது: ஆட்ட நாயகன் விருதுத் தேர்வை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது என்று கூறினார். நடுவர் நிதின் மேனனின் தவறான முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி மேல்முறையீடு செய்தது.

லீக் சுற்றின் முடிவில், 14 ஆட்டங்களில் 12 புள்ளிகள் எடுத்த பஞ்சாப் அணி, புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்தது. 7 வெற்றிகளுடன் ஹைதராபாத், பெங்களூர் அணிகள் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றன. இதனால் ஷார்ட் ரன் பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால் தில்லிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் வென்று கூடுதலாக 2 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருக்கலாம். 

ஷார்ட் ரன் விவகாரத்தால் பிளேஆஃப் வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டியளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

பல விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கலாம். இது ஏமாற்றத்தை அளிக்கிறது. பல ஆட்டங்களில் நாங்கள் சாதகமான நிலையில் இருந்தோம். ஆனால் வெற்றிக்கோட்டை எங்களால் தொட முடியாமல் போனது. இதற்கு முழுப்பொறுப்பும் நாங்கள் தான். எங்களுடைய முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் ரன் விவகாரம் எங்களை மிகவும் பாதித்துவிட்டது என்றார்.

ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியிலிருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை. பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா்கள் இருவர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகினார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு சிஎஸ்கே வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அதன் காரணமாகவே ஐபிஎல் 2020 போட்டியிலிருந்து ரெய்னா விலகியதாகப் பலராலும் கருதப்பட்ட நிலையில், தன் குடும்பத்தில் நேர்ந்த எதிர்பாராத துயரச் சம்பவம் காரணமாகவே ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதாக சுரேஷ் ரெய்னா பிறகு தகவல் தெரிவித்தார். 

கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த சுரேஷ் ரெய்னா, தன்னுடைய விலகல் குறித்து கூறியதாவது:

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது எனது சொந்த முடிவு. குடும்பத்துக்காக இந்தியாவுக்குத் திரும்பியுள்ளேன். சிஎஸ்கேவும் எனது குடும்பம் தான். தோனி என் வாழ்க்கையின் முக்கியமான மனிதர். இது கடினமான முடிவு. எனக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையே எவ்வித பிரச்னையும் இல்லை. யாரும் காரணம் இல்லாமல் ரூ. 12.50 கோடியை விட்டுத்தர மாட்டார்கள். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் 4, 5 வருடங்களுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளேன் என்றார்.

கைதான சுரேஷ் ரெய்னா

மும்பையில் உள்ள தனியார் விடுதியில் விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கேளிக்கையில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சூசான் கான் உள்பட 34 பேரை காவல்துறையினர் டிசம்பர் 22 அன்று கைது செய்தனர்.

மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்று கரோனா விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து செயல்பட்டதாக அந்த விடுதியில் அதிகாலை 3 மணிக்கு போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த விடுதியில் விதிமுறைகளை மீறி 13 பெண்கள், விடுதி பணியாளர்கள் 7 பேர் உள்பட 34 பேர் இரவு நேர கேளிக்கையில் பங்கேற்றது தெரியவந்தது. இவர்களில் 19 பேர் தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர் பிரபலங்கள் ஆவர்.

இதையடுத்து அரசு உத்தரவை மீறி செயல்பட்டது, நோய்த் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஒன்று கூடியது என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சூசான் கான் (பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி) உள்பட 34 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பெண்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக வந்தபோது, படப்பிடிப்பு இரவு வரை நீடித்ததாகவும், பின்னர் விமானத்தில் தில்லிக்கு திரும்புவதற்கு முன்பாக நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று விடுதிக்கு சென்றதாகவும், உள்ளூர் நேரக் கட்டுப்பாடுகள் தெரியாததால் நிகழ்ந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் சுரேஷ் ரெய்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

28 வயதில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர்
 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் டிசம்பர் 15 அன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 2010-ல் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு தடை விதித்தது ஐசிசி. இவர்களில் முகமது அமிர் 5 ஆண்டு தண்டனைக் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 2016-ல் அணிக்குத் திரும்பினார்.

முகமது அமிர் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் சிக்கியபோது அவருக்கு வயது 18. அவர் அப்போது 14 டெஸ்ட், 15 ஒரு நாள் போட்டி, 18 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தார். பிறகு 2016-ல், இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். 

கடந்த வருடம் 27 வயதில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம் என்னால் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தமுடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்குகிற சமயத்தில் பாகிஸ்தான் தேர்வுக்குழு நன்குத் திட்டமிடுவதற்காக என்னுடைய ஓய்வைத் தற்போது அறிவித்துள்ளேன் என்றார். 

இந்நிலையில் தற்போதைய நிர்வாகத்தின் தலைமையில் தன்னால் விளையாட முடியாது என அமிர் அறிக்கை வெளியிட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 28 வயது அமிர், பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்டுகள், 61 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் அமிர் கூறியதாவது:

உண்மையாக, இந்த நிர்வாகத்தின் தலைமையில் என்னால் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட முடியாது. நான் கிரிக்கெட்டை விட்டு தற்போது விலகுகிறேன். என்னைக் கொடுமைப்படுத்தியுள்ளார்கள். என்னால் இதை எதிர்கொள்ள முடியவில்லை. 2010-15 வரை எல்லாம் பார்த்துவிட்டேன். 

எல்லோரும் நாட்டுக்காக விளையாட ஆசைப்படுவார்கள். உலகம் முழுக்க உள்ள டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். பிபிஎல் போட்டியில் விளையாடி, மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினேன். லீக்குகளில் விளையாட எனக்கு ஆர்வம் என்றால் பாகிஸ்தானுக்கு விளையாட விருப்பம் இல்லை என்று கூறியிருப்பேன். ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவர் அமிர், நம்மைப் புறக்கணித்து விட்டார் எனக் கூறுகிறார்கள். இரு நாள்களில் பாகிஸ்தானுக்கு வருவேன். (எல்பிஎல் டி20 போட்டிக்காக அவர் தற்போது இலங்கையில் உள்ளார்.) அதன்பிறகு அறிக்கை வெளியிடுவேன் என்றார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அமிர் ஓய்வு பெற்றுள்ளதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

சுனில் கவாஸ்கர் vs விராட் கோலி
 

சமீபகாலமாக விராட் கோலி மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருடன் முன்னாள் வீரர் கவாஸ்கருக்கு இருமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சர்ச்சைகள் உண்டாகின. 

சர்ச்சை 1:

துபையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் கோலி ஒரு ரன் மட்டுமே எடுத்தாா். மேலும், கேட்ச்களையும் தவறவிட்டாா்.

அந்த ஆட்டத்தில் வா்ணனையாளாராக இருந்த முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கா், கோலியை விமா்சித்தபோது, ‘பொதுமுடக்க காலத்தில் அனுஷ்காவின் பந்துவீச்சை மட்டுமே கோலி எதிா்கொண்டாா்’ என்றார். பொதுமுடக்கக் காலத்தில் கோலியும், அனுஷ்காவும் கிரிக்கெட் விளையாடிய விடியோ சமூகவலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அதனைச் சுட்டிக்காட்டியே கவாஸ்கா் இவ்வாறு பேசினார்.

கவாஸ்கரின் இந்தக் கருத்துக்கு நடிகை அனுஷ்கா சா்மா கடும் கண்டனம் தெரிவித்தார். கோலியுடன் துபை சென்றுள்ள அவா் தனது ‘இன்ஸ்டகிராம்’ சமூகவலைதளப் பக்கத்தில் இது தொடா்பாக வெளியிட்ட பதிவில், ‘பண்பாளா்களின் விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டில் நீங்கள் மதிப்புக்குரிய நபராக இருக்கிறீா்கள். ஆனால் உங்கள் கருத்து மிகவும் மோசமான ரசனை கொண்டதாக உள்ளது. ஒரு வீரா் சரியாக விளையாடாவிட்டால், அவரது மனைவியே அதற்கு காரணம் என்பதுபோல பேசுவதுதான் உங்கள் நாகரிகமா? இனிமேலாவது பிற கிரிக்கெட் வீரா்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவா்களுடைய விளையாட்டுடன் இணைத்து பேச மாட்டீா்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுடன் சிறிதும் தொடா்பு இல்லாத என்னைக் குறித்து பல கோடி ரசிகா்கள் முன்னிலையில் விமா்சிக்கும் உரிமையை உங்களுக்கு யாா் தந்தது’ என்று அனுஷ்கா கேள்வி எழுப்பினார்.

அனுஷ்காவின் குற்றச்சாட்டுக்கு கவாஸ்கர் பதில் அளித்தார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: நான் எங்கே அனுஷ்கா சர்மாவைக் குறை சொல்லியிருக்கிறேன்? நான் அவரைக் குறை கூறவில்லை. விடியோவில் கோலிக்கு அனுஷ்கா பந்துவீசிய காட்சி இருந்தது என்றுதான் கூறினேன். ஊரடங்குக் காலத்தில் அதுபோன்ற ஒரு பந்துவீச்சையே கோலி எதிர்கொண்டார் என்றேன். ஊரடங்குக் காலத்தில் நேரத்தைக் கழிக்க ஜாலியாக டென்னிஸ் பந்து கிரிக்கெட்டை மக்கள் விளையாடினார்கள். அவ்வளவுதான். கோலியின் மோசமான ஆட்டத்துக்கு நான் எங்கே அனுஷ்காவைக் குறை கூறியிருக்கிறேன் என்றார். இந்தச் சர்ச்சையில் விராட் கோலி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

சர்ச்சை 2:

நடிகையும் விராட் கோலியும் மனைவியுமான அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மட்டும் விளையாடிய விராட் கோலி, விடுப்பில் நாடு திரும்பியுள்ளார். அவருக்குப் பதிலாக எஞ்சிய 3 டெஸ்டுகளில் அஜிங்க்ய ரஹானே கேப்டனாகச் செயல்படுகிறார்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன், டெஸ்ட் தொடரில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக உள்ளார். 2018 ஜூன் மாதம் தனது பள்ளித் தோழி பவித்ராவைத் திருமணம் செய்தார். நடராஜன் - பவித்ரா தம்பதியருக்குக் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. எனினும் ஐபிஎல் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார் நடராஜன். இதனால் தனது குழந்தையைப் பார்க்க அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஆங்கில நாளிதழ் ஒன்றில், முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எழுதியதாவது: 

டி20யில் அற்புதமாக அறிமுகமானார் நடராஜன். டி20 தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற பாண்டியா அந்த விருதை நடராஜனுக்கு வழங்கினார். ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டங்களின் போது முதல்முறையாக தந்தை ஆனார் நடராஜன். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மிகச்சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தியதால் டெஸ்ட் தொடருக்காக அங்கே தங்க வைக்கப்பட்டார். அணியில் ஒருவராக அல்ல, வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக. ஒரு வகை ஆட்டத்தின் வெற்றியாளர், இன்னொரு வகை ஆட்டத்தில் பயிற்சிப் பந்துவீச்சாளராக உள்ளார்.

ஜனவரி மூன்றாம் வாரத்தில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே நடராஜனால் ஊருக்குத் திரும்ப முடியும். அப்போதுதான் அவரால் மகளை முதல்முறையாகக் காண முடியும். ஆனால் தன்னுடைய முதல் குழந்தை பிறப்பதைக் காண்பதற்காக முதல் டெஸ்டுக்குப் பிறகு ஊருக்குத் திரும்புகிறார் கேப்டன். இதுதான் இந்திய கிரிக்கெட். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதிமுறைகள். என்று எழுதினார். 

இதனால் கவாஸ்கரின் இக்கருத்துகள் குறித்து கிரிக்கெட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பல விவாதங்கள் எழுந்துள்ளன. 

மோடிக்கு எதிரான அப்ரிடியின் பேச்சு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி

பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பதிலடி தந்தார்கள்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, உலகமே கரோனா வைரஸ் என்கிற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைவிட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை மோடி பணியில் அமர்த்தியுள்ளார் என்று பேசினார்.

அப்ரிடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தார்கள்.

முன்னாள் வீரர் கம்பீர் கூறியதாவது:

சிலருக்கு வயது ஆகிறதே தவிர மனத்தளவில் வளர்ச்சி அடைவதில்லை. 16 வயது நபர் போல அப்ரிடி பேசுகிறார். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்றுவிட்டு இப்படிப் பேசலாமா? உங்கள் நாட்டின் நிலைமை என்ன? உங்களிடம் பணம் இல்லை, மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் பேசினால் அப்ரிடியை யாரும் மதிக்க மாட்டார்கள் என்றார்.

இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் கூறியதாவது:

மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதநேய அடிப்படையில் அவருடைய முயற்சிக்கு உதவச் சொன்னேன். இனி ஒருபோதும் அவருக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றார்.

இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் யுவ்ராஜ் சிங்கின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். நம் நாட்டைப் பற்றியும் பிரதமர் பற்றியும் அப்ரிடி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதநேய அடிப்படையில் தான் அப்ரிடிக்கு உதவினேன். இனி ஒருபோதும் அப்ரிடிக்கு ஆதரவு கிடையாது என்று கூறியுள்ளார்.

முன்னணி வீரர் ஷிகர் தவன் கூறியதாவது: உலகமே கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும்போது காஷ்மீர் பற்றி பேசுகிறீர்கள். காஷ்மீர் எப்போதும் எங்களுடையதுதான் என்று பதிலடி தந்தார்.

சன்ரைசர்ஸ் ஐபிஎல் அணியில் என்னை இழிவுபடுத்தினார்கள்: டேரன் சமி அதிரடிக் குற்றச்சாட்டு!
 


ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது தான் இடம்பெற்றிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினரால் நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானதாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டேரன் சமி கூறினார். 

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினா் நிகழ்த்திய தாக்குதலில் கருப்பினத்தவரான ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தாா். காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்காவின் 140-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் போராட்டம் வன்முறையாக மாறியது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரம் குறித்து ஐசிசி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் டேரன் சாமி வேண்டுகோள் விடுத்தார். என்னைப் போன்ற மனிதர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஐசிசியும் இதர கிரிக்கெட் வாரியங்களும் கவனிக்கவில்லையா? என் இனத்துக்கு எதிரான சமூக அநீதியைக் கண்டு நீங்கள் குரல் எழுப்ப மாட்டீர்களா? இது அமெரிக்காவைப் பற்றி மட்டுமல்ல. எல்லா நாள்களிலும் இது நடக்கிறது. அமைதியாக இருக்கவேண்டிய நேரமல்ல இது. உங்களிடமிருந்து கருத்துகளை எதிர்பார்க்கிறேன் என்றார்.

ஐசிசி வெளியிட்ட ட்வீட்டில் தெரிவித்ததாவது: பன்முகத்தன்மை இல்லையென்றால் கிரிக்கெட் கிடையாது. பன்முகத்தன்மை இல்லாமல் முழுப் பலனும் கிடைக்காது என்று கூறியுள்ள ஐசிசி, இதனுடன் 2019 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற முக்கியமான தருணத்தையும் வெளியிட்டது. அதில், ஆர்ச்சர் பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி வென்ற தருணம் விடியோவாக வெளியிடப்பட்டது.

ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது தன்னையும் இலங்கை வீரர் பெரேராவையும் காலு என அழைத்து நிறவெறியை இந்திய ரசிகர்கள் வெளிப்படுத்தியதாக டேரன் சமி குற்றம் சாட்டினார். காலு என்றால் நல்ல வலுவான கருப்பு மனிதர் என நான் நினைத்தேன். ஆனால் கருப்பன் என அவர்கள் அழைத்தது பிறகுதான் தெரியவந்தது என்றார்.

தான் இடம்பெற்றிருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினராலேயே நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானதாக டேரன் சமி தற்போது கூறினார். இதுபற்றி விடியோவில் அவர் கூறியதாவது:

உலகம் முழுக்க நான் விளையாடி ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளேன். 2013-14-ல் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடியபோது கருப்பின மக்களை இழிவுபடுத்தும் வார்த்தையை சிலர் பயன்படுத்தினார்கள்.அந்த வார்த்தையைக் கொண்டு என்னை அழைக்கும்போது மற்றவர்கள் சிரித்தார்கள். அதனால் அதை நகைச்சுவையான வார்த்தை என்றுதான் நினைத்துக்கொண்டேன். இப்போதுதான் அது என்னை இழிவுபடுத்துவதற்காகச் சொன்னதாக அறிகிறேன்.

என்னை அந்த அர்த்தத்தில் தான் அழைத்தீர்களா என அப்படி அழைத்தவர்களிடம் தற்போது நான் கேட்பேன். யோசியுங்கள். இதைப் பற்றி உரையாடலாம். தவறான அர்த்தத்தில் தான் கூறியிருந்தீர்கள் என்றால் நான் மிகவும் வேதனைப்படுவேன். உங்களை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் எண்ணுகிறேன். எனவே என்னை இழிவுபடுத்த நீங்கள் எண்ணியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோரவேண்டும் என்றார். பிறகு இதுகுறித்து ஹைதராபாத் அணி வீரருடன் நல்ல முறையில் உரையாடியதாக அவர் தெரிவித்தார். 

ஆதாரமில்லாத குற்றச்சாட்டு: 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய ஐசிசி!

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது. எனினும், இந்த ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது என இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தநந்தா சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடையவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஆர்வம் செலுத்தியது.

ஒரு பேட்டியில் மஹிந்தநந்தா கூறியதாவது: 2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளது. நான் சொல்வதில் உறுதியாக உள்ளேன். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது இது நடைபெற்றது. நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு விவரங்களை நான் வெளியிட மாட்டேன். இதைப் பொறுப்புணர்வுடன் கூறுகிறேன். இதுகுறித்த விவாதத்துக்கும் நான் தயாராக உள்ளேன். மக்கள் அந்த ஆட்டத்தின் முடிவைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இதில் கிரிக்கெட் வீரர்களை நான் தொடர்புபடுத்தி பேசமாட்டேன். ஆனால் சிலர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் கட்டாயமாக ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சரே இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டைக் கூறினால் அமைதியாக இருக்க முடியுமா? இது ஓர் அபத்தமான குற்றச்சாட்டு என்று இலங்கை முன்னாள் வீரர்களான சங்கக்காராவும் ஜெயவர்தனேவும் கூறினார்கள்.

மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டு குறித்து 2011 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்காரா கூறியதாவது: இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அவர் கூறுவதால் ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்குச் சென்று ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் அவர்களும் விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் சொல்வது உண்மையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார். 

ஆனால் இலங்கை அரசு, மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டைத் தீவிரமாகப் பார்க்க ஆரம்பித்தது.

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளதையடுத்து இதுதொடர்பாக விசாரணை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டது இலங்கை அரசு. விளையாட்டுத்துறை செயலாளர் ருவாண்சந்திரா கூறியதாவது: மேட்ச் ஃபிக்ஸிங் புகார் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் துல்லாஸ் உத்தரவிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சிறப்புப் புலனாய்வுக் குழு இதுகுறித்து விசாரிக்கும் என்றார். 

இதையடுத்து 2011 உலகக் கோப்பையில் இலங்கை அணி தோற்றதற்கான 24 காரணங்கள் கொண்ட அறிக்கையை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளார் மஹிந்தநந்தா. இதுபற்றி அவர் கூறியதாவது: 2011 அக்டோபர் 30 அன்று ஐசிசியிடம் விளையாட்டுத்துறை அமைச்சராக 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி குறித்து புகார் அளித்தேன். அதனை இன்று காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளேன். இலங்கை அணி ஏன் தோற்றது என 9 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் 24 சந்தேகத்துக்குரிய காரணங்களை வெளிப்படுத்தியுள்ளேன். இவை விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கூறினார். 

ஆதாரம் எதுவும் கையில் வைத்திராமல் தனது சந்தேகத்தை விசாரிக்க வேண்டும் என்று மஹிந்தநந்தா கூறியபோதே இந்த விசாரணை எங்குச் சென்று முடியும் என்று அனைவருக்கும் புரிந்துவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஜகத் ஃபொன்சேகா ஒரு பேட்டியில் கூறியதாவது:

இதுவரை 2011 உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்ற மூன்று வீரர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் மஹிந்தநந்தாவின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஐசிசியும் அவருடைய புகாருக்கு எதிர்வினை செய்யவில்லை. எந்த விசாரணையையும் ஐசிசி தொடங்கவில்லை. விசாரணை குறித்த அறிக்கையை விளையாட்டுத்துறை செயலாளருக்குச் சிறப்புப் புலனாய்வுக் குழு அனுப்பும். உயர் அதிகாரிகளிடையே நடைபெற்ற கூட்டத்தில் இந்த விசாரணையைக் கைவிடும்படி யோசனை கூறப்பட்டது என்றார்.

இதையடுத்து 2011 உலகக் கோப்பை மேட்ச் ஃபிக்ஸிங் புகார் குறித்த விசாரணையை இலங்கை அரசு கைவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளது ஐசிசி. அந்த அமைப்பின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறியதாவது:

2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை ஐசிசி கவனத்தில் கொண்டது. நாங்கள் விசாரணையைத் தொடங்குவதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை. இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர், இதுதொடர்பாக ஐசிசிக்கு எந்தவொரு கடிதம் அனுப்பவில்லை. அப்போது ஐசிசியில் பணியாற்றியவர்களும் இதுதொடர்பான கடிதம் எதையும் பெற்றதாக உறுதி செய்யவில்லை. 2011 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் தன்மை குறித்து எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. வழக்கமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக ஆராய்வோம். மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பான ஆதாரங்கள் வழங்கப்பட்டால் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT