Year Ender 2020

2020 அறிவிப்புகளால் 2021-ல் பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்படுமா?

1st Jan 2021 06:00 AM | கி.ராம்குமார்

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு துறைகளிலும் உணரப்பட்டது. இந்தியாவில் இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக மத்திய அரசின் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.

திடீர் பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்தனர். வேலையிழப்பு, அதன் காரணமாக நிகழ்ந்த வருமானமின்மை, புதிய  வேலை கிடைக்காமல் போனது என கரோனா காலத்திய சிக்கல்கள் சொற்களில் விவரிக்க முடியாதவை.

இந்த பிரச்னைக்குரிய காலத்தில் அரசின் அறிவிப்புகள் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. நிதி நெருக்கடி காரணமாக இந்திய பொருளாதாரம் ஏற்கெனவே பின்தங்கி இருந்த நிலையில் கரோனாவும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

இந்த வருடத்தில் அரசின் அறிவிப்புகள் பலவும் முக்கியத்துவம் கொண்டவை. காரணம் என்ன?

ADVERTISEMENT

சுயசார்பு முழக்கத்தின் கீழ் இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் அடுத்த பல வருடங்களுக்கு எதிரொலிக்கக் கூடியவை. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் மார்ச் மாதம்தான் உணரப்பட்டது என்றாலும் ஜனவரி மாதம் முதலே முக்கிய கவனத்தைப் பெற்றது. 

கரோனாவிற்கு முந்தைய மற்றும் அதற்கு பின்னான நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தில் செலுத்திய தாக்கத்தை அறிந்துகொள்வது அவசியம். நீண்ட காலமாகவே நாட்டின் சொத்துகளாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்‍கு  மத்திய அரசு விற்பதைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல் மேலும் 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை  விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ‘மினரல்ஸ் அண்ட் மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட், நேஷனல் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன், பெல் நிறுவனம், ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன்,  ஒடிசா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் மற்றும் மெகான் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீட்டுக்குக் கொள்கையளவில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதைத் தாண்டி இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களின் பங்குகளும்கூட விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டன. நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதி ஆண்டிற்கான அரசுப் பங்குகள் விற்பனை இலக்கை ரூ. 1.05 லட்சம் கோடியாக நிர்ணயித்த நிலையில் கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் பங்குகள் விற்பனை வாயிலாக மத்திய அரசு ரூ. 85 ஆயிரம் கோடி திரட்டியது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை கரோனா சூழலைச் சமாளிக்க உதவிகரமாக இருக்கும் என சொல்லப்பட்டது. கரோனா சிக்கல் காரணமாக நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நிதி ஆண்டில் (2020-21) அரசின் பங்குகள் விற்பனை இலக்கு ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்த்தப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்தன. பொதுத்துறை பங்குகளின் விற்பனை ஒருபுறமிருக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அனுமதி ரத்து  செய்யப்பட்டது மற்றொரு பக்கம் புயலை எழுப்பியது.

குடியரசுத் தலைவர் தொடங்கி மாநில ஆளுநர்கள் வரை அனைவரும் தங்களது ஊதியத்தில் 30% வரை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர் ஜாவடேகர், அந்தத் தொகை, கரோனா சிறப்பு நிதியாகப் பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு, அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியம் 30 சதவீதம் குறைப்பு, ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும் ஆகியவை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தி  வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின் அவை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெறப்படும் ரூ. 7900 கோடி கரோனா சிறப்பு நிதி கணக்கில்  சேர்ந்தது.

நெருக்கடி காலத்தில் செயல்பாட்டுப் பணிகள் பரவலாக்கப்பட வேண்டிய நிலையில் அனைத்தும் அதிகாரமும் ஓர் இடத்தில் குவிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தைக் கூட்டி அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல்களைப் பெறாமலே பல்வேறு அறிவிப்புகள் செய்தியாளர்கள் சந்திப்புகளில் வெளியாகின.  நேரடியாகத் தொகுதிக்கு சென்றிருக்க வேண்டிய நிதி ஒரே அறிவிப்பில் முடங்கிப் போனது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகத் தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பி.எம்.கேர்ஸ் எனப்படும் பொது நிவாரண நிதியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். கரோனா சிக்கலைக் கையாள்வதற்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற தொகையை நிதியாக வழங்க பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி அறிவித்த பி.எம். கேர்ஸும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது. 1948 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பிரதமர் பொது நிவாரண நிதியை அரசு பயன்படுத்தாமல் ஏன் புதிய பெயரில் நிதி வசூலில் ஈடுபடுகிறது என்கிற கேள்வி பரவலாக எழுந்தது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பி.எம்.கேர்ஸ் குறித்த பதில்களை பகிர்ந்து கொள்ள மறுத்தது. 

பி.எம்.கேர்ஸ் பொது அமைப்பு இல்லை என்றும் அது அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் வராது எனவும் பதிலளிக்கப்பட்டது. மேலும் அரசு தணிக்கையாளர்களால் அந்த நிதியின் விவரங்கள் தணிக்கை செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டதும் விவாதப் பொருளானதை மறக்க முடியாது. இதற்கு மத்தியில்தான் பொதுமுடக்க காலத்தில் கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர்.

போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழலில் நடந்தே சென்ற அவர்களில் பலர் உடல்நலக் கோளாறுகளினாலும் இன்னும் சிலர் வாகன விபத்துகளினாலும் இறந்து போயினர்.  இத்தகைய சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பி.எம்.கேர்ஸ் நிதி பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுதொடர்பான கேள்விகளை இன்றைக்கும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
 
எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு பிறகு, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ..20 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட உள்ளது. இதற்கான விரிவான விவரங்களை நிதியமைச்சர் வெளியிடுவார்" என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பின. கூடுதலாக ஏற்கெனவே ரிசர்வ் வங்கி அறிவித்த ரூ. 4.5 லட்சம் கோடி, மத்திய அரசு அறிவித்த ரூ.1.70 லட்சம் கோடி இரண்டுமே தற்போதைய தொகுப்பிற்குள் அடங்கிவிடும் என்று மோடி அறிவித்திருந்தார்.

பொதுவாக பேரிடர் காலங்களில் இருவேறு அடிப்படைகளில் நிவாரணம் அறிவிக்கப்படும். ஒன்று மக்களுக்கு நேரடியாக நிவாரண தொகை அல்லது உதவிகளைக் கொண்டு சேர்ப்பது, மற்றொன்று வங்கிகள் மற்றும் அரசு திட்டங்கள் மூலம் மக்களுக்கு பயன்களை கிடைக்கச் செய்வது.

அந்த வகையில் முதல் நாளில் சிறுகுறு தொழிலாளர்களுக்காகவும், இரண்டாவது நாளன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் மூன்றாவது நாள் விவசாயிகளுக்காகவும் அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  நான்காவது நாளாகக்  கட்டமைப்பு துறைக்கு திட்டங்களை அறிவித்தார். இறுதியாகக் கடன் உதவிகள், கம்பெனி சட்டங்களில் மாற்றம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின .

பசியால் மக்கள் சாகக் கூடாது என்பதற்காக 5 கிலோ அரிசி, ரூ.1000 நிவாரணத் தொகை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதியில் கடன் வசதி, 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை வழங்குவதற்காக நிதியம் மற்றும் துணை நிதியங்கள் உருவாக்கம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வகுத்திருந்த வரையறை மாற்றம், 3 மாதங்களுக்குத் தொழிலாளர் வைப்பு நிதிக்காக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசு ஏற்பு எனத் தொடங்கி நாடு முழுவதும் 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் இஸ்ரோ செயற்கைக்கோள் தயாரிப்பில் தனியாருக்கு அனுமதி, ராணுவத் தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீட்டுக்கான அனுமதி 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு, யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைப்பு, புதிய விமான நிலையங்களைத் தனியார் நிறுவனங்கள் அமைத்துப் பராமரிக்க அனுமதி என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தார் நிதியமைச்சர்.

இதுவரை மத்திய அரசின் முற்றுரிமை பெற்ற தொழிலாக இருந்த நிலக்கரித் துறையில் இனிமேல் தனியாரும் அனுமதிக்கப்படுவர் எனது வெளியான அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

விமான நிலைய பராமரிப்பைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு இந்திய விமான நிலையங்களுக்கான ஆணையம் அனுமதி வழங்கின. முதற்கட்டமாக 6 விமான நிலையங்களைப் பராமரிப்பதற்குத் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

மக்களுக்கு உடனடி பலன் தரக்கூடிய எந்தவித அறிவிப்புகளும் வெளியாகாதது ஏமாற்றத்தைத் தந்தது. கடன் உதவிகள் தொடர்பான அறிவிப்புகளே அடுத்தடுத்து வெளியாகினாலும் இதர நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டதில் மக்களின் எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்யவில்லை என்றே கருதப்பட்டது. 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பில் அரசு செய்யப்போகும் நேரடி நிவாரணச் செலவு வெறும் ரூ. 2 லட்சம் கோடி என்றால், அது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் ஒரு விழுக்காடு (1%) மட்டுமே.

தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன. ஆனால் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தொழிலாளர்களின் வேலை நாள்களைக் குறைத்து நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்ற மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டது.

பேரிடர் காலத்தில் ஏற்கெனவே தவித்து வரும் தொழிலாளர்களுக்கு இத்தகைய அறிவிப்பு மேலும் கலக்கமடைய வைத்தது. பரிந்துரை அளவில் தான் இந்த முன்மொழிவுகள் தற்போது உள்ளன என்றாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இதற்கான முன்னோட்டங்கள் தொடங்கியுள்ளன. பணி நேரம் நீட்டிப்பு, தொழிலார்கள் நல சட்டங்களில் தளர்வுகள் என புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது வேளாண் மசோதாக்கள். வேளாண் துறையில் இடைத்தரகர்களை ஒழிக்கும் முயற்சி என சொல்லப்பட்ட வேளாண் சட்டங்கள் நேரடியாகப் பெருநிறுவனங்களை அனுமதித்து விவசாயிகளை வஞ்சிக்கும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆரம்பத்தில் பஞ்சாப், ராஜஸ்தான் எனத் தொடங்கிய போராட்டம் பின் ரயில் மறியல், சாலைகள் முடக்கம் என வளர்ந்தது. 

பஞ்சாப் மாநிலத்திலிருந்து விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லிக்குள் நுழைய முயன்றனர். பெரும் போராட்டத்திற்கு மத்தியில் விவசாயிகளை தில்லிக்குள் அனுமதித்தது மத்திய அரசு. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 36 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். 

கரோனா காலத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்கப்பட்ட புதிய விமானம், ரூ. 971 கோடி மதிப்பிலான புதிய நாடாளுமன்ற கட்டடம், நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் ராஜபாதை அமைப்பதற்காக ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு ஆகியவை முன்பு கரோனா செலவினங்களுக்காக ரத்து செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி போன்ற அறிவிப்புகளை அர்த்தமற்றதாக்கியது.

இவற்றையெல்லாம் தவிர்த்து புதிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பசுமைத் தாக்க வரைவு அறிக்கை சூழலியல் பாதிப்பு குறித்தும், தொழில் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் அதீத நடவடிக்கை எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதே காலப்பகுதியில் வெளியான மற்ற சீர்திருத்த நடவடிக்கைகள் இனிவரும் காலத்தில் எத்தகைய  மாற்றங்களை ஏற்படுத்தும் என காலம் உணர்த்தும். 

கரோனா பொது முடக்க காலம் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி அறிவிப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அனுசரணையாக இருந்திருக்கிறது.

இந்த 2020 வருடத்தில் கரோனா மட்டுமல்லாது அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இனி வரும் ஆண்டுகள்தான் எதிரொலிக்கும்.

Tags : Year end 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT