Year Ender 2020

2021: ரசிகர்கள் எதிர்பார்க்கும் பிரபல நட்சத்திரங்களின் படங்கள்

29th Dec 2020 10:10 AM | எழில்

ADVERTISEMENT

 

கரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் வருடம் தமிழ்த் திரையுலகுக்கு(ம்) நல்லவிதமாக அமையவில்லை. மாஸ்டர் வெளியாகவில்லை, அண்ணாத்த படப்பிடிப்பு முடியவில்லை, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை.... இப்படிப் பல தடைகள், தடங்கல்கள்.

ஆனால் 2021-ம் ஆண்டை மிகவும் நம்புகிறது கோலிவுட். பல பெரிய படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. கரோனா பாதிப்பு ஓய்ந்து பழையபடி மக்கள் திரையரங்குகளில் படங்களைக் கொண்டாட்டமாக ரசிக்கும் ஆண்டாக அமையவேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு.

பிரபலங்கள் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்:

ADVERTISEMENT

ரஜினி

2020-ல் ரஜினி நடிப்பில் தர்பார் வெளியானது. 2021-ல் அண்ணாத்த வெளியாகவுள்ளது.

45 வருடத் திரையுலக வாழ்வில் ரஜினி இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த, அவருடைய 168-வது படம். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸுக்கு முன்பு வரை படப்பிடிப்பு நடைபெற்றது. எனினும் வழக்கமாகச் செய்யப்படும் கரோனா பரிசோதனையின் போது 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. கோடை விடுமுறையில் அண்ணாத்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்

 

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை - அனிருத். 2021 ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். கமல், ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விபத்து மற்றும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியன் 2 படம் பற்றிய தெளிவான விவரங்கள் இதுவரை தெரியவில்லை. 

விக்ரம், இந்தியன் 2 படங்களுக்கு அடுத்ததாக தலைவன் இருக்கின்றான் படத்தை இயக்கவுள்ளார் கமல். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

விஜய்

 

2021-ல் மாஸ்டர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் படம் என விஜய் நடிப்பில் இரு படங்கள் வெளிவரவுள்ளன.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இந்தப் படம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

விஜய்யின் 65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது நீண்ட நாளாகவே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாய்ப்பு நெல்சனுக்குக் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக, சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். 

விஜய் - சன் பிக்சர்ஸ் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

அஜித்

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணைந்துள்ள இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் நேரடியாகத் திரையரங்குகளில் தான் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டிருந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் தொடங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

2021-ல் வலிமை வெளியாகவுள்ளது.

சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தயாரிப்பு - கலைப்புலி தாணு. 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம். இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. 

ஹரி இயக்கத்தில் அருவா என்கிற படத்திலும் சூர்யா நடிக்க இருந்தார். சூர்யாவின் 39-வது படமாகவும் ஹரி இயக்கவுள்ள 16-வது படமாகவும் இருந்த அருவா படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இசை - இமான். சங்கத் தமிழன் படத்தில் நடித்த ராஷி கண்ணா, அருவா படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

வேல், ஆறு மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை அடுத்து, சூர்யா - ஹரி கூட்டணியின் 6-வது படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளியில் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் படப்பிடிப்பு தொடங்கத் தாமதமானது. கரோனாவால் திரையுலகம் மிகவும் பாதிப்படைந்துள்ளதால் அருவா படத்தில் தன்னுடைய சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள ஹரி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் அருவா படத்திலிருந்து சூர்யா விலகினார். இதையடுத்து அருண் விஜய் நடிப்பில் அடுத்த படத்தை ஹரி இயக்குகிறார். 

விக்ரம்

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் நடிப்பில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். இப்படத்தின் டீசர் 2018 ஜூன் மாதம் வெளியானது. எனினும் பல்வேறு காரணங்களால் இப்படம் இதுவரை வெளிவராமல் உள்ளது. 2021-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில், "என்னு நிண்டே மொய்தீன்' படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் பிரமாண்டமாக இயக்கும் படம் "மகாவீர் கர்ணா'. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம்,  கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பின்னர் விக்ரம், "கோப்ரா', "பொன்னியின் செல்வன்' போன்ற படங்களில் நடிக்கச் சென்றதால், "மகாவீர் கர்ணா'  கிடப்பில் போடப்பட்டது. விக்ரம் கைவசம் உள்ள படங்களை நிறைவு செய்தபின் மகாவீர் கர்ணா படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் கைவிடப்படவில்லை என இயக்குநர் விமல் பேட்டியளித்துள்ளார். 

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இசை - ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது. இப்படத்தில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் போன்றோர் நடிக்கிறார்கள். மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

கோப்ரா படத்தில்...

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரம் 60 படத்தில் விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இசை - அனிருத். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் திரையுலகில் துருவ் அறிமுகமானார். இதையடுத்து அடுத்த படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தைத் தயாரிக்கிறது. 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன்.

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் வேறெந்த நடிகரும் ஒரே சமயத்தில் இத்தனை படங்களில் நடிப்பதில்லை. விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படம் உள்பட 2021-ல் மாதத்துக்கு ஒரு விஜய் சேதுபதி படம் வெளியானாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். 

2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 2017-ல் சிங்கம் 3 படத்தில் நடித்த ஷ்ருதி, 2 வருடங்கள் கழித்து நடித்துள்ள தமிழ்ப் படம் இது.இசை - இமான். கடந்த ஆகஸ்ட் மாதம் டிரெய்லர் வெளியானது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்றொரு செய்தி வெளியானது. இதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். லாபம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது. திரையரங்கில் பெரிய அளவில் வெளியிடப்படும் என்று ட்விட்டரில் கூறியுள்ளார். 

போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக, காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். தயாரிப்பு - லலித் குமார். பிரபல நடிகர், நடிகைகள் நடிப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. 

விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் நடிப்பில் டெல்லி பிரசாத் இயக்கி வரும் படம் - துக்ளக் தர்பார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்துக்கு இசை - கோவிந்த் வசந்தா. 

கடந்த வருடம் வெளியான மார்கோனி மத்தாய் என்கிற மலையாளப் படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் முதல்முறையாக மலையாளப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் வி.எஸ். இந்து இயக்கவுள்ள 19(1)(a) என்கிற படத்தில் நித்யா மேனனுடன் இணைந்து நடிக்கிறார். விஜய் சேதுபதியின் 2-வது மலையாளப் படத்தை ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார். இசை - கோவிந்த் வசந்தா. 

இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விஜய் சேதுபதி, டாப்சி, ராதிகா, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள். ஏ.எல். விஜய்யுடன் உதவி இயக்குநராக தீபக் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரே கட்டமாக நடத்தி முடிக்கவுள்ளார்கள். 

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - யாதும் ஊரே யாவரும் கேளிர். விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கும் இப்படத்துக்கு இசை - நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அமலா பால் இந்தப் படத்திலிருந்து விலகி விட்டதால் அந்தக் கதாபாத்திரத்துக்கு மேகா ஆகாஷ் தேர்வானார். இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். 

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் இந்தப் படம் 2021-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிக் கவனம் அடைந்துள்ள இயக்குநர் மணிகண்டனின் அடுத்த படம் - கடைசி விவசாயி. மணிகண்டன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். விவசாயி வேடத்தில் நல்லாண்டி நடித்துள்ளார். குற்றமே தண்டனை படத்துக்குப் பிறகு மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மணி கண்டன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் டிரெய்லர் 2019 டிசம்பரில் வெளியானது.

கடைசி விவசாயி

லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கிய படம் - இடம் பொருள் ஏவல். இதன் படப்பிடிப்பு 2013-ல் தொடங்கி, 2014-ல் முடிவடைந்தது. விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். 2014 டிசம்பரில் பாடல்கள் வெளிவந்தன. யுவன் - வைரமுத்து கூட்டணி இந்தப் படத்திலிருந்து தான் முதல்முதலாக இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது. தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்த படம் இது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நீண்ட நாள்களாக வெளிவராமல் உள்ளது. கரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி, எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம் எனக் கடந்த மே மாதம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஷாஹித் கபூருடன் இணைந்து ஹிந்தி இணையத் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மணி ரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நவரசா இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.

தனுஷ்

ஜகமே தந்திரம்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளிவரவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள தனுஷ், அத்ராங்கி ரே என்கிற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இதன்பிறகு கார்த்திக் நரேன் படத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். தாணு தயாரிப்பில் செல்வராகவன் படத்திலும் நடிக்கவுள்ளார்.

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

கர்ணன்

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்துக்குப் பிறகு கர்ணன் படம் வெளிவரவுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது.

தனுஷின் 43-வது படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்தப் படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் தேர்வாகியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இசை - ஜி.வி. பிரகாஷ்.  

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள தனுஷின் 44-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார்.

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ்.

அத்ராங்கி ரே

தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் அத்ராங்கி ரே படத்தை இயக்கி வருகிறார் ஆனந்த் எல். ராய். 2013-ல் தனுஷ் நடித்த ரான்ஜானா என்கிற ஹிந்திப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கினார். அவருடன் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ். 

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் - டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. 

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவிக்குமாரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அயலான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

சிம்பு

ஈஸ்வரன் படப்பிடிப்பில்

திரைப்படங்களில் பழைய உற்சாகத்துடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்து, உடல் எடையைக் குறைத்து புதிய மனிதராகியுள்ளார் சிம்பு.

சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துவிட்டார் சிம்பு. பலவிதங்களில் ஈஸ்வரன் படம் சிம்புக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த மாதம், புதுச்சேரியில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. 

ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். சிம்பு, கருணாகரன், தம்பி ராமையா போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். 2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். இந்நிலையில் மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.

சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் படத்துக்கு பத்து தல என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2017 டிசம்பரில் வெளியான கன்னடப் படம் - மஃப்டி. சிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி போன்றோர் நடித்த இப்படத்தை நார்தன் இயக்கினார். இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. சிம்பு, கெளதம் கார்த்திக் நடிக்கும் மஃப்டி ரீமேக் படத்துக்கு பத்து தல எனப் பெயரிடப்பட்டுள்ளது. சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா, இப்படத்தை இயக்குகிறார். சிவ ராஜ்குமார் வேடத்தில் சிம்புவும் ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்கள் நடைபெற்றது. பிறகு படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதனால் மஃப்டி ரீமேக்கின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பை சமூகவலைத்தளங்களில் 10 இயக்குநர்கள் வெளியிட்டார்கள்.

ஈஸ்வரன், மாநாடு, மஹா, பத்து தல என 2021-ல் சிம்பு நடிப்பில் நான்கு படங்கள் வெளிவரவுள்ளன. 

கார்த்தி

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கியது. அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது. 

மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக பி.எஸ். மித்ரன் படத்தில் நடிக்கவுள்ளார். 

ஜெயம் ரவி

டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் - பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்‌ஷ்மண் இயக்கியுள்ளார். பூமி படத்துக்கு இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 25-வது படம். பூமி படம் மே 1 அன்று வெளியாகவிருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பொங்கல் அன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

மணி ரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்ததாக, ஜன கன மன என்கிற படத்திலும் நடிக்கவுள்ளார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமது, இப்படத்தை இயக்குகிறார். 

விஷால்

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்தார் விஷால். துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குவது அதிகாரபூர்வமாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார். 

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள படம் - சக்ரா. இசை - யுவன் சங்கர் ராஜா. மே 1-ம் தேதி படம் வெளிவருவதாக இருந்த நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்ததாக விஷால் - ஆர்யா நடிக்கும் எனிமி என்கிற படத்தை இயக்குகிறார். பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலும் ஆர்யாவும் இதற்கு முன்பு இணைந்து நடித்தார்கள். இசை - தமன். சக்ரா படத்தின் படப்பிடிப்பைச் சமீபத்தில் முடித்த விஷால், அடுத்ததாக இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகே தான் நடித்து இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பைத் தொடரவுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT