Year Ender 2020

சூரரைப் போற்று: நம்பிக்கையளித்த ஓடிடி வெற்றி

29th Dec 2020 11:45 AM | நசிகேதன்

ADVERTISEMENT

 

சூரரைப் போற்று திரைப்படம் தயாரிக்கப்பட்டு பல மாதங்கள் கிடப்பில் கிடந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. திரைப்படம் எடுக்க ஆன செலவைக் காட்டிலும் கிடப்பில் கிடக்கும் செலவு அதிகரித்து வருவதை உணர்ந்த தயாரிப்பாளர் சூர்யா, ஓடிடி வாயிலாகத் திரைப்படத்தை வெளியிடும் அசாத்தியமான முடிவினை அறிவித்தார். 

அவரது முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதும் எதிர்ப்புக்களை மீறி மிகவும் துணிச்சலுடன் அமேசான் பிரைம் வெளியீடாக சூரரைப் போற்று கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி ஓடிடியில் வெளியிடப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் தன்முயற்சியாக ஓடிடியில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் போதுமான வரவேற்பைப் பெறாத நிலையில் சூரரைப் போற்று அனைத்துத் தரப்பு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. மிகவும் குறைவான லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்ட போதும் திரையரங்குகளில் ஒரு நல்ல திரைப்படத்திற்கு கிடைக்கும் அதே வரவேற்பு இணையதளத்திலும் கிடைத்து வருவது ஆச்சர்யமே. நல்ல திரைப்படங்கள் எந்த வடிவில் இருந்தாலும் அதனைத் திரைப்பட ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள், நல்ல திரைப்படத்தைத் தேடிச் சென்று பார்த்து ரசித்து மகிழ்வார்கள் என்பதற்குச் சரியான உதாரணப்படமாக சூரரைப் போற்று அமைந்தது. நடிகராக இருந்த சூர்யாவைக் காட்டிலும் தயாரிப்பாளராக இருந்து எடுத்து முடிவுக்கு அவருக்கான நல்ல பதில் கிடைத்துள்ளது. முன்னணி நடிகராகவும் இருந்து அவர் எடுத்த முடிவுக்கு அவரது அடுத்தத் திரைப்படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவு தராமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இவரைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களும் தங்களது திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடும் அதே நாளில் ஓடிடியிலும் வெளியிடலாம் என்று வரத் தொடங்கியுள்ள அறிவிப்புகள் சூரரைப் போற்று வெற்றியின் அஸ்திவாரமே.

ADVERTISEMENT

சூரரைப் போற்று ஒரு கதையாகப் படித்தாலோ, கேட்டாலோ இதை எப்படி ஒரு முழுத் திரைப்படமாக எடுப்பார்கள், அதை எப்படி உட்கார்ந்து பார்ப்பது என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பே. கிராமத்தினரும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறப்பதற்கு ஒரு இளைஞர் முயற்சிக்கிறார் என்கிற கதையைக் கேட்கிறபோதே கொட்டாவிகள் கூட எழலாம். ஆனால் கேட்கவே யோசிக்கிற கதையை 2 மணி 30 நிமிடங்கள் ஒரே இடத்தில் உட்கார வைத்து நகராமல் பார்க்க வைத்திருப்பது இயக்குநரும் திரைக்கதாசிரியருமான சுதா கொங்கராவின் கூர்ந்த திறமையே காரணமென்று தோன்றுகிறது. ஒரு குத்துப்பாடல் இல்லை, கனவுப் பாடல்கள் இல்லை, படுக்கையறைக் காட்சிகள் இல்லை, ஆணுக்காகப் பெண்கள் ஏங்கிக் கிடக்கும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லை ஆனாலும் ஒரு ஆச்சர்யமான கதையை அனைத்துத் தரப்பினரையும் பார்க்க, ரசிக்க வைத்திருப்பதற்குப் பெரும் திறமை வேண்டும். அந்தத் திறமையை சூரரைப் போற்று குழுவினர் பெற்றுள்ளனர். அதனாலேயே அந்தக் குழு தலை நிமிர்ந்து பல்வேறு கிரீடங்களை சூடிக் கொண்டுள்ளது.

திரைப்படத்தின் நடிகர்கள் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு, காளி வெங்கட், கருணாஸ், பூ ராமு, விவேக் பிரசன்னா, கிருஷ்ணமூர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களாகவே உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆய்த எழுத்துக்குப் பிறகு மீசையை முறுக்கி, கைகளை முறுக்கி எதிரிகளைத் தேடிச் சென்று பறந்து பறந்து உதைப்பது, அவர்கள் முன் வீரவசனம் பேசுவது, காதலுக்காக உருகி உருகி நின்றதில் நிஜ சூர்யா காணாமல் போயிருந்தார். அந்த வாரணம் ஆயிரம் சூர்யா, சூரரைப் போற்றுவில் மீண்டு வந்திருப்பது ஆனந்தமான அனுபவமே. படம் முழுமையும் அவர் தனது உடலை நெடுமாறன் ராஜாங்கமாகவே நிமிர் நிலையில் டெம்பர் பொசிஸனலில் வைத்திருப்பதைக் காண முடிகிறது. தான் எடுத்துக் கொண்ட காரியத்தின் சவாலை எதிர்நோக்குவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளதாக அதனை உணர முடிகிறது. திரைப்படம் முழுமையும் அதில் மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்திருக்கிறார். அதேபோல் அந்தக் கண்களில் ஆனந்தம், வியப்பு, அதிர்ச்சி, ஏமாற்றம், மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்பதை நிமிட நேரத்தில் கொண்டு வந்து வெளிப்படுத்திக் காட்டுவதும் பிரமிக்கத்தக்க நடிகராக அவர் பரிணாமம் பெற்றிருப்பதும் புரிகிறது. அதிலும் தனது மனைவியிடம் நிறுவனத்தைப் பதிவு செய்வதற்குப் பணம் கேட்கும் தருணம், தனது அப்பாவின் சாவுக்கு வர முடியாமல் தாமதமாக வந்ததற்கு அம்மாவிடம் கூனிக்குறுகி அழுதபடி மன்னிப்புக் கேட்பது, அப்துல் கலாமைப் பார்த்து பேசும் காட்சிகள், விமானம் ஓடி வெற்றி பெற்றதற்குப் பிறகு நண்பர்கள் மூவரும் எட்டிக் குதித்து முட்டி மோதிக் கொண்டு வீராப்பாக இறங்கும் காட்சிகள் என மாறனாகவே சூர்யா கொடி கட்டிப் பறந்திருக்கிறார்.

அவருக்கு இணையாக ஊர்வசியும், பொம்மியாக அபர்ணா பாலமுரளியும் வெளுத்துக் கட்டியுள்ளனர். ஊர்வசி தொடர்ந்து படத்திற்கு படம் கிடைக்கிற வாய்ப்புக்கு ஏற்ப தன்னை நடிகையாக வெளிப்படுத்தி வருவதைக் கவனிக்க முடிகிறது. மூக்குத்தி அம்மனில் அசத்திய ஊர்வசி இதில் உச்சத்திற்கு சென்று பிரமாதப்படுத்தியிருக்கிறார். அவரது ஜெயிச்சிடுடா சாமி உன்ன நம்பித்தான் இருக்கேன் என்கிற ஒற்றைக் குரல் ஊர்மக்களின் ஒட்டுமொத்தக் குரலாகவே ஒலிக்கிறது. அப்பன் செத்தததுக்குப் பிறகு எதுக்குடா வந்தே கேள்வியுடன் மிகவும் இயல்பாக ஒரு தாயாக நடித்து இருக்கிறார். அதேபோல் துணிச்சலான பொம்மி கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அபர்ணா தனது சொந்தக் குரலில் மதுரைப் பாஷையை அசாதாரணமாகப் பேசி நடித்திருக்கிறார். கோபம், எரிச்சல், விரகதாபம், தனது கணவர் வெற்றி பெற்றிட வேண்டும் என்கிற வெறியூட்டும் பார்வை, திமிர், ஆணவம் என அனைத்தையும் தனது நடையினாலும், பேச்சாலும் அசால்ட்டாக வெளிப்படுத்தியுள்ளார். 

திமிர் பிடித்த பணக்காரராக பரேஷ் ராவல், தான் தோற்று விட்டோம் என்பதை தான் தடுமாறும்போதும் மாத்திரையை துப்புரவுப் பணியாளர் எடுத்துத் தருவதை விழுங்கும் போதும் உணர்த்தியிருக்கிறார். ஊர்க்காரரான காளி வெங்கட்டும், பொம்மியின் மாமாவான கருணாஸும் மாறனுக்குப் பக்கபலமாகவே இருந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய்க்காகத் தனது நண்பன் சிரமப்படுகிறார் என்பதை உணர்ந்து ஏதோ செய்யப்போகிறார் என்பதை ஒரு நிமிட கண்ணீர்த்துளியில் சாதித்துக் காட்டியுள்ளார் காளி வெங்கட். அடுத்தக் காட்சியில் பணம் வங்கிக் கணக்கில் ரூ. 500, ரூ. 1000, லட்சமெனக் கொட்டுகிறது. அதேபோல் கருணாஸும் தான் சேர்த்து வைத்த தொகையைக் கொடுக்கும் ஆசை, அந்தப் பணம் தனது மாப்பிள்ளை சூர்யாவுக்கு மிகச் சாதாரணம் என்பதை தெரிந்து கொண்டு அவ்வளவு பணத்திற்கு எங்க போவது என்று உருகும் காட்சியில் தானொரு நல்ல நடிகன் என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அதுபோல சூர்யாவின் தந்தையாக வரும் பூ ராமு, நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா மற்றும் கிருஷ்ணமூர்த்தி, கமாண்டராக வந்து துணை நிற்கும் மோகன்பாபு என அனைவரும் திரையின் முன் நடிக்கிறோம் என்பதை மறந்து அந்தந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டியுள்ளனர்.

திரைப்படம் 2003, 1997, 1977, 1989, 2001, 2003 என ஆண்டுகளைக் காட்டியபடி மாற்றி மாற்றிக் காட்சிகள் வந்த போதும் எவ்விதக் குழப்பமுமின்றி நேரிடையாக சொல்ல வேண்டியதைச் சொல்லி புரிய வைத்து விடுகிறது. கதை, திரைக்கதையைக் கையாண்டுள்ள மணிரத்னத்தின் பட்டறையில் வந்த சுதா கொங்கரா, 2010 துரோகி, 2016ல் இறுதிச்சுற்று 2020ம் ஆண்டு சூரரைப் போற்று ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். இடையே தெலுங்கு, ஹிந்திப் படங்களுக்கு போனாலும் அவசரப்படாமல் தனது குருவைப் போலவே நின்று நிதானமாக வெற்றி பெறுவதற்குத் தேவையான செஞ்சுரியை அடித்து சாதித்துக் காட்டியுள்ளார். சில நுணுக்கமான காட்சிகளில் மிகக்குறைவான வசனங்களுடன் மெளனத்துடன் அந்தக் காட்சியின் வீரியத்தை உணர வைப்பது அவருக்கு சவாலாகவும், நமக்கு பெரும் அனுபவமாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக மோகன்பாபுவுக்கும் மாறனுக்குமிடையேயான அதிக வசனங்களில்லாத காட்சிகள், அதற்கு மோகன்பாபு தெரிவிக்கும் காரணம், பொம்மிக்கும் மாறனுக்குமிடையேயான குறைவான வசனங்களுடன் மிக நீளமான செரிவான காட்சிகள், பரேஷ் கோஸ்வாமி மாறனுடன் கைக்குலுக்கிய பிறகு சேனிடைசர் மூலமாக கைகளைச் சுத்தம் செய்வதை கவனிக்கும் மாறன், காளி வெங்கட்டின் கண்ணீர் துளிகளுக்குப் பிறகு பணம் குவியும் காட்சிகள், வீட்டிற்குள் மாட்டிக் கொள்ளூம் குருவியை அது வெளியே பறக்க வழி ஏற்படுத்தி கொடுத்து வெயிட் இல்லாத பிளைட் கண்டுபிடிக்க முடிவாகும் காட்சி, மாறன் வெற்றியை நெருங்குகிறார் என்பதை பரேஷ் கோஸ்வாமி பதற்றமடைவதன் மூலம் வெளிப்படுத்திருப்பது, தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தைப் பெரிதாக வெளிப்படுத்தி அலட்டிக் கொள்ளாமல் அதற்காக ஏமாந்து, நொந்து, காத்திருந்து பெற்றிருப்பதை, உயர எட்டி தங்களுக்குள் நண்பர்கள் முட்டிக் கொள்ளும் காட்சி, தன்னைப் புரிந்து கொண்டு தனக்கு உதவும் மனைவியைப் பாசாங்கு பார்க்காமல் பொதுவெளியில் கட்டியணைத்து முத்தம் வைத்து நன்றி சொல்லும் காட்சி என படம் முழுவதும் வியாபித்துள்ள நிறையக் காட்சிகளைக் கூற முடியும்.

ஒளிப்பதிவும், இசையும் ஒரு வெற்றிப் படத்திற்கு எவ்வளவு உதவ முடியுமோ அந்தளவிற்கு இருவரும் சரிசமமாக உதவியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிகேஷ் பொம்மிரெட்டியின் வர்ணக்கலவையும் படத்தின் சம்பவத்திற்கேற்றாற் போல் காட்சிகளின் மூடுகளை அபூர்வமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். அதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடல்களிலும் பின்னணி இசையிலும் மெனக்கெட்டுள்ளது படம் முழுவதும் தெரிகிறது. துள்ளலான பாடல்களும், மென்மையான பாடல்களுமென அனைத்திற்கும் நேர் எதிரான வித்தியாசத்தை காட்டியுள்ளது அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. திரைப்படத்தின் நடையை தீர்மானிக்கும் படத்தொகுப்பாளர் சதீஷ்சூர்யாவின் திறமை படத்தின் விறுவிறுப்பிலும், காட்சி முடியும் நேரத்திலும், அந்தக் காட்சிகள் எதை உணர்த்த வேண்டுமோ அதை உணர்த்துவதையும் 2 மணி 30 நிமிடங்களுக்குள் வலுவாக நிகழ்த்திக் காட்டியுள்ளார். 

நல்ல திரைப்படத்திற்கு அதன் வசனமும் அடர்த்தியானது என்பதை இப்படத்தின் வசனங்களும் நிரூபித்துள்ளன. திரைப்படத்தின் கூடுதல் பலமாகப் படம் முழுவதும் விரவிக் கிடக்கும் விஜயகுமாரின் கூர்மையான வசனங்கள், குறைவாகப் பேசி நிறையப் புரிய வைத்தது. சந்தையில் மாடு பார்க்க போற மாதிரி பெண்ணப் பார்க்க போகமாட்டேன்னு சொல்றது ஒரே ஐடியாவாக இருக்கு, சம்பந்தம் பேசி முடிக்கிறதுக்குள்ள கை நனைப்பது எங்களுக்கு வழக்கமில்லை வீடு தேடி வந்தவங்களை வெறும் வயித்துடன் அனுப்பறது எங்க வழக்கமில்லை, எப்பப் பார்த்தாலும் கொள்கை கொள்கைன்னு வெத்துப் பேப்பரையும், பேனாவையும் வைச்சுக்கிட்டு இந்த ஊரையே புதைக்கப் போறீங்க அப்பா, கஞ்சத்தனத்த எங்க ஊர்ல புத்திசாலித்தனம்னு சொல்வாங்க சார், பேய்க்கு பேய்தான் பொருத்தம், இந்த ஊரப் பொறுத்தவரை நீயும் கிறுக்கி, நானும் கிறுக்கன் நம்பள வேறு யாரும் கட்டிக்க மாட்டாய்ங்க, பேசாம நாமளே கட்டிக்கிடலாம், சின்ன ஆளு பெரிய ஆளுன்னு ஒண்ணும் இல்லாம நம்மாளுதான் எல்லாத்தையும் அடிச்சி ஒடிச்சி பறக்க விட்டுட்டானே, நல்ல விஷயத்தை நாளைக்குச் சொல்லு பிரச்னையை உடனே சொல்லு, நீ பண்ணனும்னு நினைக்கிறது உன் ஈகோ என் ஈகோவை விட பெரிசு, மக்கள் ஒப்பீனியன் வாரா வாரம் மாறும் போன்ற வசனங்கள் படத்தின் அழுத்தமாகக் கதாபாத்திரங்களின் அடையாளத்தை வெளிக்கொணர்ந்து நின்று பேசுகின்றன. 

ஏர் டெக்கான் நிறுவனத்தின் உரிமையாளர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது நூலான சிம்பிளி ஃபிளை-யையும் அடிப்படையாகக் கொண்டு சுவரசியமாக கேப்டன் கோபிநாத் வெற்றி பெற்றதைத் திரைப்படமாக்கியுள்ளனர் திரைக்கதாசியர்கள் சுதா கொங்கராவும், ஷாலினி உஷாதேவியும். உண்மைக் கதையில் தனது ஏர் டெக்கானை கோபிநாத் கிங்க்ஃபிஷர் மல்லையாவிடம் கொடுக்கும் முடிவினை, திரைப்படத்தில் பாலையாவிடம் தனது டெக்கான் ஏர் நிறுவனத்தை விற்பதை மிகவும் லாவகமாகத் தவிர்த்துள்ளது திரைக்கதாசிரியர்களின் புத்திசாலித் தனத்தைக் கைத்தட்டி தெரிவிக்கிறது. 

ஒட்டுமொத்தமாகத் திரைப்படங்களுக்கான மோசமான காலக்கட்டத்தில் துணிச்சலுடன் மேற்கொண்ட முயற்சி ஒரு நல்ல திரைப்படத்தினால் சுபமாக முடிந்திருக்கிறது. இந்த முயற்சியினால் திரைப்பட உலகின் அடுத்தக் கட்டத்தை அடையாளம் காட்டிய பெருமையையும் சூரரைப் போற்று பெற்றிருக்கிறது. வெற்றிக்காக வெறித்தனமாக உழைத்து அந்தப் பாதையை அமோக வெளிச்சத்துடன் அடைந்துள்ள சூரரைப் போற்று குழுவினருக்குப் பாராட்டுக்களை மனதாரத் தெரிவிப்போம்.

Tags : Soorarai Pottru OTT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT