Year Ender 2020

சீனாவும் கரோனாவும்

29th Dec 2020 11:55 AM | எஸ். மணிவண்ணன்

ADVERTISEMENT

2020 இத்தனை கோரப்பசியில் இருந்திருக்கும் என்று உலக நாடுகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   

இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெருந்தொற்றோ, பெருஞ்சீற்றமோ உலகை உலுக்கிவிடுகிறது. அதிலிருந்து கற்பிக்கப்படும் பாடங்களைத்தான் மனித வாழ்க்கை மறந்துவிடுகிறது.

எத்தனை பேரழிவுகள், பெருந்தொற்றுகள் வந்துசென்றாலும், பணத்தை வாரியிரைத்து தற்காலிக தீர்வு காண முற்படுகிறோமே தவிர பொது சுகாதாரத்தில் நிலையான முதலீடு செய்து நிரந்தர தீர்வு காண எந்த நாடுகளும் முற்படுவதில்லை என்கிறது ஐக்கிய நாடுகள் அவை.

உலக நாடுகள் அனைத்திற்கும் 2020-ம் ஆண்டை மறக்க முடியாததாய் மாற்றியது கரோனா வைரஸ். சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில்  கரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. வூஹான் நகரிலுள்ள கடல்சார் உயிரினங்களின் இறைச்சி சந்தையில் விற்கப்பட்ட விலங்குகளிடமிருந்து கரோனா தொற்று பரவியது.

ADVERTISEMENT

இதனை ஒருசில சீன ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டிருந்தாலும், சீன அரசு அதற்கு மறுப்பு தெரிவித்தது.  இதற்காக சீன அரசு பல விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கரோனாவுக்கு முன்பே அமெரிக்காவுடனான வர்த்தகப்போரில் சீனா களமிறங்கியிருந்ததால், அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் கரோனாவையும், சீனாவையும் இணைத்து கடுமையாக விமர்சித்தன.

கரோனாவும், விமர்சனங்களும்:

போரில் கத்தி, ஈட்டி மோதல் மற்றும் துப்பாக்கி, பீரங்கி மோதல் ஆகிய இரண்டு வகையை அடுத்து மூன்றாவது மோதலான வைரஸ், கிருமி வழியிலான மோதலை சீனா கையிலெடுத்துள்ளதாக அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் விமர்சனங்களால் சீனா தாக்கப்பட்டது.

கரோனா வைரஸ் சீனாவின் ’கோழைத்தனமான உயிரி ஆயுதத் திட்டம்’ என்று வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கனடா – சீனா உளவுக் குழு கரோனா வைரஸை வூஹானுக்கு அனுப்பியதாகவும் ஆதாரமற்ற விமர்சனங்கள் எழுந்தன.

கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என தனது பங்கிற்கு ரஷியா வெளியிட்ட கருத்தும் சீனாவுக்கு எதிராகதாகவே அமைந்தது

கரோனா வைரஸ் இறைச்சி சந்தைகளில் உருவாகவில்லை, சீன ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக விமர்சித்தார்.

கரோனா விவகாரத்தில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடக்கவில்லை என்றும், பல முக்கியத் தகவல்களை ரகசியமாக வைத்துள்ளதாகவும்  ஐரோப்பா நாடுகள் மறைமுக தாக்குதல் நடத்தின.

அதற்கேற்ப சீனாவில் கரோனா தொற்று உச்சத்திலிருந்த மார்ச் மாத மத்தியில் அதிபர் ஷி ஜின் பிங் மக்களை சந்திக்காமல், சுகாதாரப் பணிகளுக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், மெளனமாக இருந்ததால், அதிபர் தலைமறைவாகிவிட்டார் என்ற விமர்சனம் நாட்டு மக்களாலேயே முன்வைக்கப்பட்டது.

வூஹான் முதல் உலக நாடுகள் வரை:

விமர்சனங்களைக் கடக்கும் வேளையில் சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல நாடுகளைக் கடந்திருந்தது. சீனாவிற்கு கல்வி, சுற்றுலா, வேலைவாய்ப்பு என வந்துசென்ற பயணிகள் மூலம் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, தைவான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கரோனா பரவியது.

படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டன. கடந்த வாரம் அண்டார்டிகாவிலும் கரோனா கண்டறியப்பட்டது.

கரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஒருசில நாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தாலும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் இதுவரை எந்த பெருந்தொற்றும் ஏற்படுத்தாதவை.

சீனாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், மார்ச் மாதத்தில் கரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு, கட்டுப்பாடுகளை விதிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்தியது.

சீனாவில் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து 31 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வூஹான் இறைச்சி சந்தைக்கு சென்றுவந்தவர்களும், அங்கு விற்பனை செய்பவர்கள் தான்.

2003 மற்றும் 2004 -ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் சீனாவில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸுடன் தொடர்புடைய புதிய வகை வைரஸ் என்ற அளவிலேயே கரோனா குறித்த சீன மருத்துவர்களின் அன்றைய புரிதல் இருந்தது. பின்னர் கரோனா வைரஸ்  பரவும் தன்மையுடையது என்பதை கண்டறிந்து ஜனவரி 19-ஆம் தேதி சீன மருத்துவ வல்லுநர்கள் அறிவித்தனர். இதனையடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவக் குழுவினரும் சீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

உலக சுகாதார  அமைப்பு வெளியிட்ட கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் சீனா சில துரித நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. வூஹான் நகரில் கரோனா பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சையளிக்கவும், 1000 படுக்கைகள் கொண்ட 25,000 சதுர மீட்டர் பரப்பளவுடன் பிரம்மாண்ட மருத்துவமனையை 8 நாள்களில் சீன அரசு கட்டிமுடித்தது.

அதற்கு முன்பு கடந்த 2003-ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பெய்ஜிங்கில் சீன அரசு ஏழு நாள்களில் மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது. அந்த அனுபவமே கரோனா தொற்றை கையாளவதற்கான உடனடி மற்றும் நிலையான முடிவுகளை எடுக்க சீன அரசுக்கு உதவிகரமாக இருந்தது.

சீனாவின் வூஹான் நகரில் ஜனவரி மாத தொடக்கத்தில் மூன்று பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்தனர். ஜனவரி மாத இறுதியில் இது 41-ஆக அதிகரித்தது. ஜனவரி மாத தொடக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாத இறுதியில் 830-ஆக அதிகரித்தது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஜனவரி 26-ஆம் தேதி முதல் பலி ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்பே கரோனா கண்டறியப்பட்ட வூஹான் நகரத்தில் 80 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி இறுதியில் சீனா முழுவதும் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்தது. பாதிப்பு 75 ஆயிரத்தைக் கடந்திருந்தது.

மார்ச் மாத தொடக்கத்தில் அதிக பாதிப்பையும், பலி எண்ணிக்கையையும் சீனா கொண்டிருந்தது. எனினும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளால் மார்ச் மாத மத்தியில் கரோனா பெருமளவு குறைக்கப்பட்டது.

கரோனாவின் பிறப்படமாக அறிவிக்கப்பட்ட வூஹான் நகரில் மார்ச் 19-ஆம் தேதி ஒரு கரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை என்ற நிம்மதி செய்தியை சீன சுகாதாரத்துறை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாள்களுக்கு இதே நிலையே நீடித்தது.

அனைத்து விதமான தொடர்பையும் உலக நாடுகள் துண்டித்த கையறுநிலை ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து  வரும் கரோனா பலி மறுபுறம் என்று இக்கட்டான சூழலில் தவித்துவந்த சூழலிலும் நிலையான மற்றும்  தொடர் முயற்சியால் கரோனாவைக் கட்டுப்படுத்தி சீனா உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளித்தது.

ஆனால் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவும், இத்தாலியும் கட்டுக்கடங்காத பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் திணறிக்கொண்டிருந்தன.

சீன அரசு, கரோனா தொற்று கண்டறியப்பட்ட மாகாணத்தை முடக்கி, நாட்டின் அனைத்து பகுதி மருத்துவர்களையும் 8 நாள்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து, கரோனா நோயாளிகளை ஒரே இடத்தில் வைத்து கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

சீனாவில் தற்போது 300க்கும் குறைவானவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 86,955 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 81,987 பேர் குணமடைந்தனர். மொத்த பாதிப்பில் 5 சதவிகிதம் மட்டுமே கரோனாவால் உயிரிழந்தனர்.

பொருளாதாரத்திலும், மருத்துவ கட்டமைப்பிலும் தன்னிறைவடைந்த நாடான அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.9 கோடியாக அதிகரித்துள்ளது.

தடுப்பு மருந்து

கரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் உலக சுகாதார அமைப்புடன் இணைய 75 நாடுகள் விருப்பம் தெரிவித்து பணியாற்றி வருகின்றன. எனினும், கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டதாக சீனாவின் சைனோவாக் பயோடெக் நிறுவனம் மார்ச் மாத தொடக்கத்திலேயே அறிவித்தது. ஆரம்பத்தில் குரங்குகளுக்கு செலுத்தி கரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகளை மார்ச் மாதத்திலேயே அந்நிறுவனம் தொடங்கியது.

மேலும், சைனோஃபார்ம் மற்றும் சைனோவாக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையில் களமிறங்கியுள்ளன. சீனாவின் கேன்சைனோ பயாலஜிகல்ஸ் என்ற நிறுவனமும் கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தடுப்பு மருந்து உற்பத்திக்காக உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு ஆலையையும் சீனா நிறுவியுள்ளது.

ரஷியா இதற்கு முன்பே ஸ்புட்னிக் -5 என்ற கரோனா தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்தாலும், 3-ம் கட்ட பரிசோதனையை கடப்பதற்கு முன்பு ரஷியா அவசரம் காட்டுவதாக எதிர்ப்பு எழுந்தது.

பொருளாதார சரிவு

கரோனா வைரஸ் தொற்றால் சீனா மற்ற நாடுகளால் தீண்டப்படாத நாடாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டது. கரோனா பரவலால் ஏற்பட்ட முடக்கத்தால் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டு உற்பத்தி முடங்கியது. கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத சரிவை சந்திக்க நேர்ந்தது.

ஜனவரி ஆரம்பத்தில் அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டாலும், கரோனா கட்டுப்படுத்தப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து எண்ணி நான்கே மாதங்களில் மீண்டும் பழைய நிலையை நோக்கி சீனா அடியெடுத்து வைத்தது.

 கரோனாவால் உலக பொருளாதாரம் மோசமான நிலையை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்த கூற்றிற்கு சீனா மட்டும் விதிவிலக்காய் மாறியது.

வீட்டு உபயோக மின் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், தனிப்பட்ட பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றிற்கு சர்வதேச அளவில் ஏற்பட்ட தேவை சீனாவிற்கு  சாதகமாக அமைந்தன.

சீனாவின் இந்த அசுர வேகம் தொடர்ந்தால், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2028-ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா மாறும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இயற்கைக்கு மாறான முறையற்ற சுகாதார நடவடிக்கைகளால் வைரஸ் தொற்று பரவினால் சந்திக்கக்கூடிய இழப்புகளுக்கு எடுத்துக்காட்டாய் மாறியிருந்த சீனா, ஒரு பெருந்தொற்றுக்கு பின்னர் ஏற்பட்ட இழப்புகளை முறையாக கையாண்டு உழைத்தால், இழந்ததை மீண்டும் பெறலாம் என்பதற்கும் எடுத்துக்காட்டாய் மாறியுள்ளது. இது  மற்ற நாடுகளுக்கான பாடம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT