Year Ender 2020

2020: தமிழ் சினிமா பிரபலங்களின் திருமணங்கள்

29th Dec 2020 11:35 AM

ADVERTISEMENT

 

2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்: 

நடிகர் மகத்

அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார்.

ADVERTISEMENT

மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் மஹத். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் நடைபெற்றது.  

இந்நிலையில், பிப்ரவரி 1 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக மஹத் அறிவித்தார். திருமணத்தில் மு.க. அழகிரி, சிம்பு, அனிருத் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். 

நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவியை பிப்ரவரி 5 அன்று திருமணம் செய்தார். 

திருத்தணி அருகே உள்ள யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றார்கள்.

இந்நிலையில் டிசம்பர் 28 அன்று ஆண் குழந்தைத் தந்தையாகியுள்ளார் யோகி பாபு.

நடிகர் ராணா டகுபதி

தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மிஹீகாவை ஆகஸ்ட் 8 அன்று காதல் திருமணம் செய்துகொண்டார்.

ராணா டகுபதி. 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

திருமணத்துக்கு முன்பு, மிஹீகாவை, தனது காதலி என உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திருமணத்தில் 30 பேர் மட்டுமே கலந்துகொண்டார்கள். நடிகர்கள் வெங்கடேஷ், ராம் சரண், அல்லு அர்ஜூன், நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா போன்றோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் கரோனா பரிசோதனை நடைபெற்றது.

நடிகை மியா ஜார்ஜ்

மலையாள நடிகையான மியா ஜார்ஜ் - அமர காவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.

தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பை செப்டம்பர் 12 அன்று திருமணம் செய்தார் மியா. கோட்டயத்தைச் சேர்ந்த அஸ்வின், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.

நடிகர் ஆரவ்

பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பட்டம் வென்றவர் ஆரவ். சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கதாநாயகன் ஆனார். ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் செப்டம்பர் 6 அன்று நடிகை ராஹியைத் திருமணம் செய்தார். கெளதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் கதாநாயகியாக ராஹி நடித்து வருகிறார். திரையுலகினர் பலரும் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். 

நடிகை காஜல் அகர்வால்

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் அக்டோபர் 30 அன்று திருமணம் நடைபெற்றது.

தொழிலதிபர் கெளதம் கிச்லுவை திருமணம் செய்துள்ளார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.


ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனுக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. 

ரெமோ படத்துக்கு அடுத்ததாக கார்த்தி நடிப்பில் சுல்தான் என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஆஷாவை பாக்யராஜ் கண்ணன் திருமணம் செய்தார்.  

வேலூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் அட்லி கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார். அடுத்த நாள் நடைபெற்ற திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

நடிகர் பிரபு தேவா

நடிகர் பிரபு தேவா, பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

1995-ல் ரமலதாவைத் திருமணம் செய்தார் பிரபு தேவா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். 2008-ல் ஒரு மகன் உடல்நலக் குறைவால் இறந்து போனார். 2011-ல் பிரபு தேவாவும் ரமலதாவும் விவகாரத்து பெற்றார்கள். பிறகு, நடிகை நயன்தாராவைக் காதலித்தார் பிரபு தேவா. எனினும் சில வருடங்களில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து போனார்கள்.

பிகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானியைக் கடந்த மே மாதம் சென்னையில் திருமணம் செய்துள்ளார் 47 வயது பிரபு தேவா. ஊரடங்குக் காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்துகொண்டுள்ளார்கள். இதுபற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த பிரபு தேவாவின் சகோதரர் ராஜூ சுந்தரம், பிரபு தேவாவுக்குத் திருமணம் ஆனது உண்மைதான். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார். 

நடிகை சனா கான்

மும்பையைச் சேர்ந்த சனா கான், 2005 முதல் நடித்து வருகிறார். தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்தார். தம்பிக்கு இந்த ஊரு, பயணம் ஆயிரம் விளக்கு, தலைவன், அயோக்யா போன்ற தமிழ்ப் படங்களிலும் பல ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிச்சுற்று வரை முன்னேறினார். 

அக்டோபர் மாதம், திரைத்துறையிலிருந்து விலகுவதாக சனா கான் அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 20 அன்று, அனாஸ் சையத்தைத் திருமணம் செய்துள்ளார் சனா கான். இதுபற்றி இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்து திருமணப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.  

நடிகை நிஹாரிகா

சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகா. 2016-ல் நடிகையாக அறிமுகமானவர், தமிழில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இதுவரை 5 படங்களில் மட்டுமே நடித்துள்ள நிஹாரிகா, சைதன்யா என்கிற குண்டூர் பகுதி மென்பொறியாளரை டிசம்பர் 9 அன்று திருமணம் செய்தார். ஆகஸ்ட் 13 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிஹாரிகா - சைதன்யாவுக்கு ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகின் பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். 

Tags : celebrity Weddings
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT