Year Ender 2020

ஐபிஎல் 2020: சிஎஸ்கே தந்த அதிர்ச்சி, மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி, அசத்திய நடராஜன் & தெவாதியா!

எழில்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான பிரச்னைகளையும் மனநலப் பாதிப்புகளையும் ரசிகர்கள் சந்தித்த நிலையில் ஐபிஎல் போட்டியால் சகஜ நிலைமைக்குத் மீண்டும் திரும்பிவிட்டது போன்ற உணர்வைப் பெற்றார்கள். இதற்காக ஐபிஎல்-லுக்குப் பலரும் சமூகவலைத்தளங்களில் நன்றி தெரிவித்தார்கள். விளையாட்டின் நோக்கமே ரசிகர்களைச் சந்தோஷப்படுத்துவதுதானே!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக முதலில் பேட் செய்த தில்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய மும்பை 18.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ரோஹித் சர்மா 51 பந்துகளில் 4 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற  மும்பை அணிக்கு ரூ. 20 கோடியும், 2-ஆவது இடம்பிடித்த டெல்லி அணிக்கு ரூ. 12.5 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

மீண்டும் சாதித்த மும்பை அணி 

ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில் ஒரு கோப்பையையும் மும்பை அணி வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை. ஆனால் மும்பை அணியில் ரோஹித் சர்மா, பும்ரா, பாண்டியா, பொலார்ட் வந்த பிறகு அந்த அணியின் அடையாளமே மாறிவிட்டது. 2013-ல் ஆரம்பித்து இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது.

ஐபிஎல் கோப்பையை அதிகமுறை வென்ற அணிகள்

மும்பை இந்தியன்ஸ் - 5
சிஎஸ்கே - 3
கேகேஆர் - 2
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 1
ராஜஸ்தான் ராயல்ஸ் - 1
டெக்கான் சார்ஜர்ஸ் - 1

ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை முறை தகுதி பெற்றது? 

8 - சிஎஸ்கே
6 - மும்பை இந்தியன்ஸ்
3 - ஆர்சிபி
2 - கேகேஆர்
2 - சன்ரைசர்ஸ்
1 - டெக்கான் சார்ஜர்ஸ்
1 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்
1 - ராஜஸ்தான் ராயல்ஸ்
1 - ஆர்பிஎஸ்
1 - தில்லி கேபிடல்ஸ்

ஐபிஎல் 2020 விருதுகள் 

ரபாடா

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான பல விருதுகளை மும்பை அணி வென்றுள்ளது.

இறுதிச்சுற்று ஆட்ட நாயகன்: போல்ட் (மும்பை)
மதிப்புமிக்க வீரர் (தொடர் நாயகன்): ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)
ஃபேர்பிளே விருது: மும்பை இந்தியன்ஸ்
வளரும் வீரர்: தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)
சக்திமிக்க வீரர்: போல்ட் (மும்பை)
அதிக சிக்ஸர்கள்: இஷான் கிஷன் (மும்பை)
சூப்பர் ஸ்டிரைக்கர்: பொலார்ட் (மும்பை)
கேம் சேஞ்சர்: கே.எல். ராகுல் (பஞ்சாப்)
அதிக ரன்கள்: கே.எல். ராகுல் (பஞ்சாப்)
அதிக விக்கெட்டுகள்: ரபாடா (தில்லி)

ஆறு கோப்பைகள்: ஐபிஎல் போட்டியின் மகத்தான வீரர் - ரோஹித் சர்மா!

கேப்டனாக ஐந்தாவது முறையும் வீரராக ஆறாவது முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று மகத்தான ஐபிஎல் வீரராகப் பெயர் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.

2008 ஏலத்தில் 750,000 டாலருக்கு ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்தது டெக்கான் சார்ஜர்ஸ். மூன்று வருடங்களும் நன்றாக விளையாடினார். 2008-ல் 13 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 404 ரன்களும் 2009-ல் ஒரு அரை சதத்துடன் 383 ரன்களும் 2010-ல் 16 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 404 ரன்களும் எடுத்து இதர அணிகளின் கவனத்தை ஈர்த்தார். 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றது.  

2011-ல் மும்பை அணி, 2 மில்லியன் டாலருக்கு ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி, ரோஹித் சர்மாவைத் தக்கவைக்காமல் ஏலத்தில் தேர்வு செய்ய முடிவெடுத்தது. ஆனால், ஏலத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியே வென்றது.

ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில் ஒரு கோப்பையையும் மும்பை அணி வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை. ஆனால் 2013-ல் மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா. அதில் ஆரம்பித்து இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றுவிட்டது. அதற்கான முக்கியக் காரணம் ரோஹித் சர்மா எனச் சொல்லவும் வேண்டுமா?

ரோஹித் சர்மா இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதிச்சுற்றில் தோற்றதில்லை. ஆறு ஐபிஎல் இறுதிச்சுற்றுகளில் விளையாடி ஆறிலும் அவருக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். பிறகு மும்பை அணிக்குத் தலைமை தாங்கி 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். 

ஒரு வீரராக ஆறு முறையும் ஒரு கேப்டனாக ஐந்து முறையும் ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ரோஹித் சர்மா. இதனால் ஐபிஎல் போட்டியின் மகத்தான வீரர் என்கிற பெருமை ரோஹித் சர்மாவை விடவும் வேறு யாருக்குப் பொருத்தமாக இருக்கும்!

முதல்முறையாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாத சிஎஸ்கே அணி!  

மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்-புக்குத் தகுதிபெறாமல் வெளியேறியது. கடந்த வருடம் வரை கலந்துகொண்ட அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சிஎஸ்கே அணி முதல்முறையாக இந்த நிலையை அடைந்துள்ளது. விளையாடிய 14 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தைப் பிடித்தது.

சிஎஸ்கே அணி விளையாடியது பற்றி கேப்டன் தோனி கூறியதாவது:

அணியில் முக்கியமான வரிசையில் சிறிது மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உகந்த வகையில் அணியை தயார்படுத்த வேண்டும். தற்போது அணியில் மாற்றம் கொண்டுவர வேண்டி இருப்பதுடன், இளம் தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் நேரமாகும். அடுத்த சீசனில் சென்னை பலத்துடன் மீண்டும் வரும். இந்த சீசனில் 14 ஆட்டங்களில் 8 தோல்விகள் என்பது ஏற்க முடியாத ஒன்று. கடைசி 4 ஆட்டங்களில் செய்ததை தொடக்கத்திலேயே செய்திருக்க வேண்டும் என்றார்.

சிஎஸ்கே அணியில் டுபிளெசிஸ், சாம் கரண், ருதுராஜ் போன்றோர் சிறப்பாக விளையாடினார்கள். அவற்றின் விவரங்கள்:

அதிக ரன்கள்

1. டு பிளெசிஸ் - 449 ரன்கள் (13 ஆட்டங்கள்)
2. ராயுடு - 359 ரன்கள் (12 ஆட்டங்கள்)
3. ஷேன் வாட்சன் - 299 ரன்கள் (11 ஆட்டங்கள்)
4. ஜடேஜா - 232 ரன்கள் (14 ஆட்டங்கள்)
5. ருதுராஜ் - 204 ரன்கள் (6 ஆட்டங்கள்)

அதிக சிக்ஸர்கள்

1. டு பிளெசிஸ் - 14
2. ஷேன் வாட்சன் - 13
3. ராயுடு - 12
4. சாம் கரண் - 12
5. ஜடேஜா - 11

அதிக அரை சதங்கள்

1. டு பிளெசிஸ் - 4
2. ருதுராஜ் - 3
3. ஷேன் வாட்சன் - 2

அதிக ஸ்டிரைக் ரேட் (குறைந்தது 5 ஆட்டங்கள்)

1. ஜடேஜா - 171.85
2. டு பிளெசிஸ் - 140.75
3. சாம் கரண் - 131.91

அதிக விக்கெட்டுகள்

1. சாம் கரண் - 13 (14 ஆட்டங்கள்)
2. தீபக் சஹார் - 12 (14 ஆட்டங்கள்)
3. ஷர்துல் தாக்குர் - 10 (9 ஆட்டங்கள்)

இந்த வருடமும் கோப்பையை வெல்லவில்லை: ரசிகர்களை மீண்டும் ஏமாற்றிய ஆர்சிபி அணி!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல் பத்து ஆட்டங்கள் வரை சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி, அடுத்த ஐந்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததால் போட்டியிலிருந்து வெளியேறியது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வெளியேற்றும் சுற்றில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸை வீழ்த்தியது. முன்னதாக முதலில் பேட் செய்த பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள்சோ்த்தது. பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

10 ஆட்டங்களின் முடிவில் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்திருந்த ஆர்சிபி அணி, 14 ஆட்டங்களின் முடிவிலும் 14 புள்ளிகளே பெற்றது. எனினும் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகளால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.

இந்த முறையும் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை. எனினும் கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வரும் ஆர்சிபி அணி, இந்தமுறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருப்பதே நல்ல முன்னேற்றம் தான் என்கிற ஆறுதலையும் பெற்றுள்ளார்கள். 

2016-ல் லீக் சுற்றின் முடிவில் 2-ம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம். ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

2013 ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி உள்ளார். இந்த எட்டு வருடங்களில் மூன்று முறை பிளேஆஃப்புக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது.

அடுத்த வருடமாவது ஐபிஎல் கோப்பையை வெல்லுமா ஆர்சிபி அணி?

அதிக வெற்றிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்! 

இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று முடிவில் மும்பை, தில்லி,  ஹைதராபாத், பெங்களூர் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன. 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் அணிகள் கடைசி மூன்று இடங்களைப் பிடித்தன. 

இம்முறை 8 அணிகள் போட்டியிட்டு தலா 14 ஆட்டங்கள் ஆடியும் கடைசி இடம் பிடித்த ராஜஸ்தான் அணி ஆறு வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்தது. கூடுதலாக ஒரு வெற்றி பெற்றிருந்தால் அந்த அணியால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருக்க முடியும். அது இல்லாத காரணத்தால் கடைசி இடத்தில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

ஐபிஎல் போட்டியில் கடைசி இடம் பிடித்த எந்த ஒரு அணியும் 6 வெற்றிகளைப் பெற்றதில்லை. கடந்த வருடம் ஆர்சிபி அணி 11 புள்ளிகளைப் பெற்று கடைசி இடம் பிடித்ததே சாதனையாக இருந்தது. அதை இந்தமுறை ராஜஸ்தான் முறியடித்துள்ளது.

ஐபிஎல் போட்டி எந்தளவுக்குச் சவாலாகவும் கடுமையான போட்டியாகவும் மாறியுள்ளது என்பதற்குக் கடைசி இரு வருடங்களே உதாரணம். எல்லா அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் பலம் கொண்டு அதிக வெற்றிகளைப் பெறுகின்றன. கொஞ்சம் அசந்தால் போதும் கடைசி இடம் கிடைத்துவிடும்.

ஐபிஎல்: லீக் சுற்று முடிவில் கடைசி இடத்தைப் பிடித்த அணிகள் 

2008: 4 புள்ளிகள் (ஹைதராபாத்)
2009: 7 புள்ளிகள் (கொல்கத்தா)
2010: 8 புள்ளிகள் (பஞ்சாப்)
2011: 9 புள்ளிகள் (தில்லி, புணே) (10 அணிகள், 14 ஆட்டங்கள்)
2012: 8 புள்ளிகள் (புணே) (9 அணிகள், 16 ஆட்டங்கள்)
2013: 6 புள்ளிகள் (தில்லி) (9 அணிகள், 16 ஆட்டங்கள்)
2014: 4 புள்ளிகள் (தில்லி) 
2015: 6 புள்ளிகள் (பஞ்சாப்)
2016: 8 புள்ளிகள் (பஞ்சாப்) 
2017: 7 புள்ளிகள் (ஆர்சிபி)
2018: 10 புள்ளிகள் (தில்லி) 
2019: 11 புள்ளிகள் (ஆர்சிபி, ராஜஸ்தான்)
2020: 12 புள்ளிகள் (ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப்)

2020 ஐபிஎல் போட்டிக்கு அதிக பார்வையாளர்கள்: ஸ்டார் தொலைக்காட்சி அறிவிப்பு

கடந்த வருட ஐபிஎல் போட்டியை விடவும் 2020 ஐபிஎல் போட்டிக்குக் கூடுதல் பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாக ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வருடம் கூடுதலாக 23% பார்வையாளர்கள் ஐபிஎல் போட்டியை ஸ்டார் தொலைக்காட்சியில் நேரலையாகக் கண்டுகளித்துள்ளார்கள். 

இதுபற்றி ஸ்டார் இந்தியாவின் தலைமை அதிகாரி சஞ்சோக் குப்தா கூறியதாவது:

இதுவரை பார்த்த ஐபிஎல் போட்டிகளிலேயே இந்த வருடம் தான் அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளார்கள். முதல் வாரமே அருமையான ரேட்டிங் அமைந்து அடுத்தடுத்த வாரங்களுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது. இந்த வருடம் கூடுதலாக விளம்பர வருவாய், பார்வையாளர்கள் கிடைத்ததால் பெரிய வெற்றியை அடைந்துள்ளோம் என்றார். 

ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்த ராகுல் தெவாதியா!

பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்குக் கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள் தேவைப்பட்டன. 19.3 ஓவர்களில் இலக்கை அடைந்தது ராஜஸ்தான் அணி. ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த தெவாதியா ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்தார்.

ஆரம்பத்தில் ரன் எடுக்கத் தடுமாறினாலும் பிறகு ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து, 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் தெவாதியா, தனது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

9-வது ஓவரின் முடிவில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ராகுல் தெவாதியா 4-ம் நிலை வீரராகக் களமிறங்கினார். இடது கை பேட்ஸ்மேன் என்பதால் லெக் ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் அனுப்பப்பட்டார். 

224 ரன்கள் என்கிற இலக்கை விரட்டும் முயற்சியில் இருந்தபோது ஆரம்பக்கட்டத்தில் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார் தெவாதியா. முதல் 19 பந்துகளில் அவரால் 8 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. 

மேக்ஸ்வெல் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன் பிறகு லாங் ஆஃப்பில் பந்தைத் தட்டிவிட்ட பிறகு சிங்கிள் ரன் ஓட மறுத்தார். தெவாதியா பேட்டிங் செய்ய வந்தால் பந்துகளை வீணடிப்பார் என அவர் நினைத்தார். இதனால் தெவாதியா மேலும் அவமானப்படுத்தப்பட்டார். 

17-வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை. ஆடுகளத்தில் தெவாதியா இன்னும் இருந்ததால் நம்பிக்கை இழந்தார்கள் ராஜஸ்தான் அணி ரசிகர்கள்.

கடைசிக்கட்டத்தில் காட்ரெல் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அடித்தார் தெவாதியா. 6-வது பந்திலும் மற்றொரு சிக்ஸர். 5 சிக்ஸர்களுடன் அந்த ஓவரில் 30 ரன்களை தெவாதியா எடுத்தபோது கிரிக்கெட் உலகம் நம்பமுடியாமல் திகைத்தது. பிறகு ஷமி பந்துவீச்சில் இன்னொரு சிக்ஸர் அடித்து மொத்தமாக 7 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் தெவாதியா. கடைசியில் வெற்றிக்கனியை ருசித்தது ராஜஸ்தான் அணி.

இந்த வருடம் 14 ஐபிஎல் ஆட்டங்களில் 255 ரன்களும் 10 விக்கெட்டுகளும் எடுத்து முத்திரை பதித்துள்ளார்.

ராகுல் தெவாதியாவை இந்திய அணியில் காண வேண்டும் என்று ரசிகர்கள் கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். ஹரியாணாவைச் சேர்ந்த 27 வயது தெவாதியா அதிரடி பேட்ஸ்மேனாகவும் லெக் ஸ்பின்னராகவும் உள்ளதால் ஒரு ஆல்ரவுண்டராக அவரால் சாதிக்க முடியும் என அவர் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. கனவுகள் பலிக்கட்டும்.  

ஐபிஎல் போட்டியால் பலனடைந்த நம்ம நடராஜன்

இரு மாதங்களுக்கு முன்பு, ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா என்கிற சந்தேகம் நடராஜன் மீது இருந்தது. காரணம், அதற்கு முன்பு இரு வருடங்களாக ஐபிஎல் போட்டியில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கவில்லை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல், சந்தீப் சர்மா என இவர்களையே எல்லா ஆட்டங்களிலும் தேர்வு செய்ததால் நடராஜனின் பங்களிப்பு அவசியமில்லாமல் இருந்தது. 

2019-ல் முஷ்டாக் அலி டி20 போட்டியில் தமிழக அணிக்காக 11 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் நடராஜன். எகானமி - 5.84. இது நடராஜன் மீது புது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்திலேயே வாய்ப்பு தந்து பார்த்தது சன்ரைசர்ஸ் அணி.

ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார் நடராஜன். ஐபிஎல் போட்டி முழுக்க விளையாடும் வாய்ப்பு நடராஜனுக்குக் கிடைத்தது.

டி20 ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களின் பலமாக இருக்கும் யார்க்கர்களைத் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கினார். யார்க்கர் பந்துவீச்சு தானே ஐபிஎல் போட்டியில் முதலில் வாய்ப்பளித்தது, அதையே ஆயுதமாகப் பயன்படுத்துவோம் என்றெண்ணி, ஒரு முடிவுடன் பந்துவீசத் தொடங்கினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் யார்க்கருக்கென்றே புகழ்பெற்ற பும்ரா உள்ளிட்ட பல பிரபல பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடியும் நடராஜன் அளவுக்கு வேறு யாராலும் யார்க்கரில் நிபுணத்துவம் பெற்று அதிகமுறை வீச முடியவில்லை. இதனால் நடராஜன் விளையாடுகிற ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் வீசுகிற யார்க்கர்களுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் எனப் பலரும் நடராஜனைக் கவனிக்க ஆரம்பித்து அவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் எழுதினார்கள்.

சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார் நடராஜன். அதில் 58 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் ஒன்று, பிளேஆஃப்பில் வீழ்த்திய டி வில்லியர்ஸின் விக்கெட்.  

ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸி. முன்னாள் வீரர் பிரெட் லீ, நடராஜன் பற்றி ட்விட்டரில் கூறியதாவது: ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் இப்படித்தான் பந்துவீச வேண்டும். அபாரம் நடராஜன் என்றார். இந்திய முன்னாள் வீரர் சேவாக் ட்வீட் செய்ததாவது: நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். யார்க்கர் பந்துகளை அற்புதமாக வீசியுள்ளார் என்றார். இந்திய அணியில் விளையாடாத ஒரு வீரர், இந்த அளவுக்குத் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசுவதை இதுவரை பார்த்ததில்லை என நடராஜனைப் பாராட்டி  ட்வீட் வெளியிட்டார் முன்னாள் வீரர் இர்பான் பதான். 

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு, இணையம் வழியாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் வீரர் கபில் தேவ், நடராஜனைப் பற்றியும் யார்க்கர் பந்துவீச்சு பற்றியும் கூறியதாவது: ஐபிஎல் 2020 போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன் தான். அந்த இளம் வீரருக்குப் பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார். யார்க்கர் தான் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல, கடந்த 100 வருடங்களாகவே. யார்க்கர் வீசுவதற்கான அடிப்படைகளைச் சரியாக அவர் பின்பற்றினார் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார். எனினும் நடராஜனை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகின. பும்ராவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் நடராஜன் பந்துவீசினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தர முடியும் எனப் பலரும் எண்ணினார்கள். 

எல்லோருடைய ஆசையும் நிறைவேறியது. ஒன்றல்ல, இரு அணிகளுக்குத் தேர்வானார் நடராஜன்.

தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார். 

ஐபிஎல் போட்டியில் திறமையை நிரூபித்ததால் இந்திய அணி வீரராக முன்னேறியுள்ளார் நடராஜன்.


ரூ. 4000 கோடி வருமானம், 3000 கரோனா பரிசோதனைகள்: ஐபிஎல் போட்டியை நடத்திய விதம் பற்றி பிசிசிஐ

இறுதிச்சுற்று ஆட்டத்தைக் காண வந்த நடிகர் மோகன் லால்

ஐபிஎல் போட்டியை நடத்திய விதம் குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த வருடப் போட்டியை விடவும் இந்த வருடச் செலவுகளில் 35% குறைத்துள்ளோம். கரோனா காலக்கட்டத்தில் ஐபிஎல் மூலமாக ரூ. 4000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது. மும்பை - சென்னை விளையாடிய முதல் ஆட்டத்தில் இதுவரையில்லாத அளவுக்கு முதல் ஆட்டத்துக்கான பார்வையாளர் எண்ணிக்கை கிடைத்தது. 1800 பேருக்காக 30,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கரோனாவால் ஜோகோவிச் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் இருவிதமான மனநிலையில் இருந்தோம். ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டாம் எனப் பலரும் சொன்னார்கள். மூன்று மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் யாருக்காவது ஏதாவது ஏற்பட்டால் என்ன ஆவது? ஆனால் ஜெய் ஷா போட்டியை நடத்துவதில் உறுதியாக இருந்தார். எங்கள் எல்லோரையும் விடவும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா எனச் சந்தேகப்பட்டவர்களும் பிறகு எங்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். 

கரோனாவால் பாதிக்கப்படுவர்களுக்காக 200 அறைகளைத் தனியாக ஒதுக்கியிருந்தோம். சிஎஸ்கே வீரர்களுக்கு கரோனா என்கிற செய்தியை அறிந்தவுடன் அறிகுறிகள் எதுவும் உள்ளதா எனக் கேட்டோம். அறிகுறிகள் இல்லாததால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். எல்லாத் தருணங்களிலும் எங்களுக்கு ஒத்துழைத்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரே பிரச்னை என்னவென்றால், 14 நாள்களுக்கு வீரர்களைத் தனிமைப்படுத்தியதுதான்.

கூகுள் தேடல்: கரோனாவைத் தோற்கடித்த ஐபிஎல் 

2020-ம் ஆண்டில் இந்தியா்கள் கூகுளில் அதிகம் தேடிய வாா்த்தையாக ‘ஐபிஎல்’ உள்ளது. இந்த ஆண்டு உலக அளவில் அதிகம் விவாதிக்கப்பட்ட கரோனா தொற்று கூட இந்தியாவில் கூகுள் தேடலில் இரண்டாவது இடம்தான் பிடித்துள்ளது.

இதன் மூலம் இந்தியா்கள் மத்தியில் ஐபிஎல் விளையாட்டு எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இத்தனைக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவில்லை; ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெற்றன. அதிலும் நேரடியாக ரசிகா்கள் மைதானத்தில் அனுமதிக்கப்படவில்லை. எனினும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாா்த்தவா்கள் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் மட்டும் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT