அமெரிக்க அரசானது, பொதுப் பணிகளுக்காக செலவிடுவதற்கான நிதியில்லாததால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி முடங்கிவிடக் கூடிய அபாயத்தில் இருக்கிறது.
அவ்வாறு முடங்கினால், அமெரிக்காவில் என்ன நடக்கும்? நிதியின்றி அமெரிக்க அரசு முடங்கும் அபாயத்தில் இருக்கும் நிலையில், கீழவையில், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பல்வேறு விவாதங்களை நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க.. தேசிய நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி இவர்கள்தான் பொறுப்பு!
அதில், அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு இவர்கள் கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், இனி, உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில்லை என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அரசு முடங்குவதற்கான விளிம்பில் உள்ளதாகவும் அரசு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான காலக் கெடுவை இன்று நள்ளிரவுடன் அமெரிக்க காங்கிரஸ் அவை இழக்கவிருக்கிறது.
அமெரிக்க அரசிடம் பொதுப் பணிகளுக்காக செலவிடுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை இன்றுடன் காலியாகிறது. புதிதாக நிதி அனுமதிக்கப்படாதபட்சத்தில் பல்லாயிரக்கணக்கான அரசுப் பணிகள், அலுவலகங்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் முடங்குவதற்கான அபாயங்கள் அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்க அரசு முடங்குவதற்கு ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், உக்ரைன் போருக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மிகப்பெரிய செலவினங்களைக் குறைத்தாலொழிய, நிதி ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று குடியரசுக் கட்சியினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
வெள்ளிக்கிழமை மசோதா தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்னும் இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை, எனக்கும் இன்னும் சில யோசனைகள் உள்ளன என்று செய்தியாளர்களிடம் அவைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி கூறினார். ஒருவேளை, மெக்கார்த்தி ஜனநாயகக் கட்சியினருக்கு உதவி செய்ய முன்வந்தால், குடியரசுக் கட்சியில் உள்ள சிலரால், அவைத் தலைவர் பொறுப்பிலிருந்தே அவரை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை அமெரிக்க அரசு முடங்கினால், அமெரிக்க அரசின் அனைத்து நிறுவனங்களையும் அது பாதிக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது. அரசு அலுவலகங்கள் ஒட்டுமொத்தமாக முடங்கும். நலத்திட்டங்களுக்கான நிதி, நீதிமன்றங்கள், அருங்காட்சியங்கள், தேசிய பூங்காக்களுக்கான செலவினங்கள் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும்.
அரசு ஊழியர்கள் ஊதியம் இன்றி பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். பலரும் பணியிழக்கும் அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த முறை அமெரிக்க அரசு முடங்கியபோது சுமார் 8 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஒருவேளை, இந்த முறை அமெரிக்க அரசு முடங்கினால், இதனை விட பெரிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நீக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு அரசின் நலத்திட்டங்களும் முடங்கி, அது நேரடியாக மக்களை பாதிக்கும். உணவு சேவைக்கான நிதி குறைவது முதல் மருத்துவ காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு பெறுபம் வாடிக்கையாளர்களுக்கு சேவையில் தாமதம் ஏற்படுவது வரை எண்ணிக்கையில் அடங்காமல் சென்று கொண்டிருக்கும்.
அமெரிக்க அரசிடமிருந்து நேரடியாக நல உதவிகளைப் பெறும் லட்சக்கண்க்கான பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள்.