சியோல்: வட கொரிய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பலூன்கள் மூலம் தங்கள் நாட்டிலிருந்து அனுப்புவதை கிரிமினல் குற்றமாக்கும் சட்டத்தை தென் கொரிய அரசியல் சாசன நீதிமன்றம் செல்லாததாக அறிவித்துள்ளது.
இந்தத் தடை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1950-53-ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது, தங்களது நாட்டின் மீது போா் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது. அத்தகைய பயிற்சிகள் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.
இதனால் தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையை பதற்றம் தொடா்ந்து வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த 2017 முதல் 2022 வரை தென் கொரியாவில் நடைபெற்று வந்த அதிபா் மூன் ஜே-இன் தலைமையிலான மிதவாத அரசு, வட கொரியாவுடன் சமாதானப் போக்கைக் கடைபிடித்தது.
அப்போது, வட கொரியாவை திருப்திப்படுத்தும் வகையில் பலூன்கள் மூலம் அந்த நாட்டு அரசுக்கு எதிராக பிரசுரங்களை அனுப்புவதை கிரிமினல் குற்றமாக்கும் சட்டத்தை மூன் ஜே-இன் அரசு நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.